புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (74 – 112)

This entry is part of 29 in the series 20060915_Issue

புதுவை ஞானம்


( X )
74 )தனிமையில் நடுங்குதென் நெஞ்சு
இரவு கூடக் கூடத் துயரம் வளரும்
நாடகம் ஒன்று நடக்கிறது செல்வோம்
இஸ்பானிய மங்கையின் இசை நடனமது .

75 )முகப்பினில் இருந்த அந்தக் கொடியினை
அகற்றி விட்டனர் நன்மையாய்ப் போயிற்று
இன்னும் அந்தக் கொடி பறக்குதென்றால்
சென்று காணவே மனமிசையாது .

76 )வெகு தோரணையோடும் வெண்ணிறம் பூண்டும்
இஸ்பானிய நங்கை அரங்கினுள் நுழைகிறாள்
காலீஷியாவிலிருந்தா வருகிறாள் அந்நங்கை ?
இல்லை – விண்ணிலிருந்து தான் இறங்கி வருகிறாள் !

77) காளைச் சண்டையின் சிவப்புத் துணியும்
செந்நிறம் வாய்ந்த கையிலாச் சட்டையும்
கிராம்பு மணக்கும் மயக்கச் சீலையும்
தொப்பியும் அணிந்து தோன்றிணாள் முன்னே !

78)அடர்ந்த அவளின் புருவம் நோக்கின்
முரட்டுக் கலப்பினம் நினைவில் வந்தது
முரின் சாடையே முகத்தில் தெரிந்தது
காதின் அடிகோ வெண்பனி தோற்றது !

79) விளக்கு ஓளி மங்க ஓளி அதிர
சால்வையும் சட்டையும் பகட்டாய் அணிந்து
கன்னி மேரி விண்னுலகம் மேவிய காட்சியாய்
அண்டாலுசியன் அடவில் அரங்கம் ஏறினாள்

80) சவால் விடும் பாணியில் நிமிர்ந்தது அவள் தலை
மேலாடை விசிற எழும்பின தோல்கள்
வளைந்த கரங்கள் தலையினைச் சுற்ற
ஆர்வமிகு காலுதைப்பில் அடவுகள் கொஞ்சும்

81)கத்திபோல் கிழிக்கும் நோய்கண்ட ரசனையை
பக்கமாய்ச் சாய்ந்த அத்தாளம் பிசகாக் காலடிக் கோலம்
ஆடரங்கம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டது.
ஆடவர்களின் நொறுங்கிய நெஞ்சினால் !

82)கொண்டாட்ட உணர்வு கொழுந்து விட்டெரிகறது
கனல் கக்கும் அவளது கண்களின் கூர்மையில்
காற்றில் பறக்கிறது திரும்பும் போதெல்லாம்
சிவப்பு புள்ளிகள் தெரிந்திட்ட சால்வை !

83)துள்ளித் தாவுகிறாள் திடீர் திடீர்ரென
திரும்பி குதிக்கிறாள் தலைவணங்குகிறாள்
காஷ்மீரச் சால்வை பரக்க விரிகையில் – தன்
வெள்ளைக் கவுனைப் படைக்கிறாள் விருந்தாய்

84)ஊஞ்சலாடுகிறது அவளின் பொன்னுடல் முழுவதும்
மயக்கி இழுக்கிறது திறந்த அவள் வாய்
பூவாய் மலர் சிவந்த அவளது அதரம்
ஒய்வதே இல்லை அவளின் தொடரும் அடவுகள்

85)காற்றின் போக்கில் மெல்லென திரும்பி
புள்ளிச் சால்வையை நீள விரிக்கிறாள்
எல்லாருக்கும் கண்கள் மயங்க
விட்டுச் செல்கிறாள் ஏக்கப் பெருமூச்சை !

86)சிறப்பாக ஆடினால் இசுலாமிய நடனமாது
சிவப்பும் வெள்ளையும் கலந்தது அவளின் சால்வை
துடித்து நடுங்குகிறது தணிந்த அவளது ஆன்மா
உள்ளிழுத்துக் கொள்கிறது தன் தனிமைச் சிறைக்குள் !

87)நம்பிக்கை மிகுந்ததொரு பணியாள் எனக்குண்டு
எனதெல்லா விழைவுக்கும் இணங்கி ஒத்துழைப்பான்
ஓயாமல் கவனிப்பான் சோர்வுறவே மாட்டான்
எனது கிரீடத்தைத் துலக்கிப் பளக்க வைப்பான் !

88 )வேலையிற் சிறந்த அப்பணியாளன்
உண்ணுவதில்லை உறங்குவதில்லை
எத்தனை நேரம் வேலை செய்தாலும்
துவளுவதில்லை முணகித் தேம்புவதில்லை !

89 )வெளியே நான் போனால் ஓடி ஒளிகிறான்
என் பைகளுக்குள்ளேயே புகுந்து கொள்கிறான்
திரும்பி வருகையில் நெருங்கி வருகிறான்
சாம்பல் கிண்ணத்தை அளிக்கிறான் அறிவு கெட்டவன் !

90 )பல்லென விழித்து நான் துயிலெழும் போது
முன்னரே எழுந்து என் அருகிருக்கின்றான்
எழுதும் போதெல்லம் எனது மைக்கூட்டில்
அவன் சிந்திய உதிரமே ஊற்றெடுக்கின்றது !

91 )எப்போதும் நம்பலாம் என் பணியாளனை
நடக்கும் போது அவன் நடுக்குற்ற போதிலும்
குளிரும் கதகதப்பும் தனக்குள்ளே கொண்டவன்
ஒரு எலும்புக்கூடுதான் எந்தன் பணியாளன் !

– Xii –

92 )உல்லாசமாக ஒரு முறை படகு செலுத்தினேன்
உள்ளம் கவர்ந்து இழுக்குமோர் பெரிய ஏரியில்
தங்கம் போலச் சொலித்தனன் கதிரவன்
அதை விட அதிகமாய் மின்னியதென் ஆன்மா !

93 )திடீரெனவோர் குமட்டும் நாற்றம்
காலுக்குக் கீழே குனிந்து பார்க்கையில்
வயிறு முட்டத் தின்று செத்த மீன்
தண்ணீருக்கு மேலே தப்பலடித்தது !

– XIII –

94 )எங்கு முட்புதர் செழித்து வளர்ந்துளதோ
எங்கு நேர்ப்பாதை வளைந்து மறைகிறதோ
அந்தத் திருப்பத்தில் இணைந்து மறைந்தனர்
தேவதை ஒருத்தியும் அந்த வழுக்கைத் தலையனும் !

95 )புன்னை மரத்தோப்பின் அண்மையில்
கண்ணின்று மறைந்தது அந்தச் சோடி
பளபளத்தது வழுக்கைத் தலை மட்டும்
தங்க விளக்கின் கிரீடத்தைப் போல !

96 )மரம் வெட்டும் ஓசை மிதந்தது காற்றில்
கண் முன் தாவியது உயர்ந்தெழும் பறவை
யாருக்குத் தெரியும் அந்த ஜோடிகள்
முதல் முத்தம் இட்டது எப்போது என்று ?

97 )தேன் மணக்கும் அந்தத் தேவதைக் கூந்தல்
இளம் பொன்னிறம் கொஞ்சம் செந்நிறம்
பட்டுத் தெரித்தது வழுக்கை மண்டையில்
பட்ட மரத்தில் படர்ந்ததே பசுங்கொடி !

( “அருகிருப்பது எட்டியே ஆயினும் அரும்பு
முல்லை படர்வது படரும் “- ஒரு பழந்தமிழ்ப் பாடல்.)

– xiv –

98) எப்போதுமே யான் மறக்க மாட்டேன்
எப்போதோ உதிர்ந்த அந்த இலையை
மொட்டையாஇ உதிர்ந்த அந்தக் கிளையில்
மொட்டவிழ் தளிர் ஒன்று முளைத்த அதிசயத்தை !

99 ) ஏதும் அற்றதோர் பஞ்சகாலத்தில்
அணைந்துபோன அந்த அடுப்படியில்
காதல் வயப்பட்ட கன்னி ஒருத்தின்
கைப்பற்றினானே அவ்வழுக்கைத் தலையன் !

– xv –

100 ) இன்னமும் வந்து கொண்டு இருக்கிறார் மஞ்சள் மருத்துவர்
தனது சிகிச்சையை எனக்குத் தொடர
மஞ்சள் பாரித்த ஒரு கரம் என் மேல்
மற்றொரு கரமோ சட்டைப் பையில் !

101)மெல்லெனத்தொடும் அந்த மருத்துவர் ஒரு
மூலையில் வசிக்கிறார் சற்றே தூரத்தில்
வெளிறி மெலிந்த ஒரு கரம் என்மேல்
மற்றொரு கரமோ அவரது நெஞ்சில் !

102 ) ஒரு மிட்டாய்க்காரன் வருகிறான் என்னிடம்
காகிதத் தொப்பியும் கவியும் மணமுமாய்
மலாக்கா அல்லது ஷெர்ரி மிட்டாயைச்
சுவைத்துப் பார்க்க பிசுக்குக் கேட்கவா ?

103 )மிட்டய்க்காரா சொல்லு அவளிடம்
பார்க்க விரும்பியும் தவற விட்டுவிட்டாள்
எனக்கு ஒரு முத்தம் யத்தனிக்கவும்
வசந்த விடியலின் காட்சியைக் காணவும் !

_ XV _

104 )தாழிட்டிருந்த தடுப்பினைத் திறந்து
ஈரம் படிந்த ஜன்னலில் சாய்ந்து
நிலவைப் போல வெளுத்தும் நிலைத்தும்
விதியை நினைத்து வெம்புகிறான் காதலன் !

105 )பசுமை படர்ந்த அவள், விதானத்தின் கீழ்
சிவந்த பட்டும் கருத்த புறாவுமாய்.
காதலைப் பற்றி ஏதும் பேசாத அந்தக் கன்னி
மாலையில் பறித்தாள் ஒரு ஊதா நிற மலரை !

_ XVII _

106 ) பொன்னிறக்கூந்தல் அலைகிறது காற்றில்
கபில நிறக் கண்களை உறுத்தியவாறு
கண்டதில் இருந்து எந்தன் இதயமோ
தங்கப் புயலில் சிக்கித் தவிக்கிறது !

107)வசந்த கால வாலிபத் தேனீ – பிளக்கும்
புத்தம் புது மலர் மொக்கினை – புனித முகமென்று
சொல்லுவதில்லை கடந்த காலம் போல்
கன்னி என்பதெல்லாம் மாலை மயக்கம் !

108 )குழப்பத்துக்கிடையில் குறுக்கே புகுந்து
சொட்டு மருந்திடுவேன் புறை விழுந்த கண்ணுக்கு
கருமையினூடே வானவில் ஒளிரும்
வெள்ளி மரங்களின் உச்சிக்கு மேலாக !

109 )முட்புதர் அடர்ந்த மலைகளின்
உச்சியில் பேரொளி கண்டு வியப்பினில் ஆழ்ந்தேன்
நீல வானம் போல் வசியம் செய் ஆன்மாவில்
மஞ்சள் மலரொன்று இளம் சிவப்பாய்ப் பூக்கிறது !

110) காட்டின் ஊடே தடம் தேடுகிறேன்
தூரத்தில் இருக்கும் கடற்குட்டைத் நாடி
கிளைகளின் ஊடே கூர்ந்து நோக்கையில்
நீர் மீது நடக்கும் அவளைக் கண்டேன் !

111) தோட்டத்து அரவம் சீறுகின்றது
வழுக்கிக் கொண்டு வளைக்குள் செல்கிறது நஞ்சினைக் கக்கி
சிறகை விரித்தென்னை வரவேற்க்கும் அந்த வானம்பாடி
ஆன்மா உருக சோக கீதம் சோம்பி இசைக்கிறது !

112) இசைக்கும் யாழாய் இசையமைப்பவனாய்
பிரபஞ்சம் முழுவதும் அதிரும் என்னுள்
சென்றதும் திரும்பியும் வருவேன் பகலவன் போல்
காதலும் நானே பாடலும் நானே !


j.p.pandit@gmail.com

Series Navigation