தன் விரல்களை துண்டித்த சூபி

This entry is part of 29 in the series 20060915_Issue

ஹெச்.ஜி.ரசூல்1)மிதந்துவரும் புகைமூட்டத்திலிருந்து
அறிந்து கொண்டாய்
எங்கோ எதுவோ எரிகிறது.

தூரத்தில் நின்றாலும்
கொழுந்து விட்டெரியும் சுவாலைகளைக் கண்டு
எரிகிற ஏதோ ஒன்றை
தரிசனம் கொண்டாய்

விரலால் தொட்டு பார்த்தபின் மட்டுமே
புரிந்து கொண்டாய்
தீ சுடும் என்றும்
பூ தீயல்ல என்றும்

2)மரம் செடி கொடி தாவரங்கள்
ஸப்புகளில்
உன்னைப் போல் நிமிர்ந்து நிற்கின்றன.

பறவைகள் தக்பீர் கட்டுகையில்
உன்னைப் போல் சிறகு விரிக்கின்றன.

ஆடு மாடு ஒட்டகங்கள்
ருகூவு செல்லும்
உன்னைப் போல் நகர்கின்றன.

உட்கார்ந்திருக்கும் மலைகள்
அத்தஹியாத் செய்யும்
உன்னைப் போல் இருப்பு கொள்கின்றன.

கருவறைக் குழந்தை
ஸுஜுது செய்யும்
உன்னைப் போல் வடிவம் கொள்கிறது.

எல்லாமாகவும் நீ இருக்கிறாய்
எதுவாக நீ இல்லை….

3)தன்னை கிள்ளிப் பார்த்த போது
வலித்தது
பிறரை கிள்ளிப் பார்த்த போது
அடிக்க வந்தார்கள்.

மிருகங்களை கிள்ளிப் பார்க்க
கொம்பாலும்
கொம்பற்றும் முட்டித் தள்ளின.

செடிகளை கிள்ளிப் பார்க்கையில்
தொட்டாவாடி இலை மூடி
வருத்தம் தெரிவித்தது.

உயிரைத் தேடி புறப்பட்ட சூபி
தன் விரல்களையே துண்டித்துக் கொண்டான்,


mylanchirazool@yahoo.co.in

Series Navigation