• Home »
  • கவிதைகள் »
  • புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)

புரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை – ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் (44-73)

This entry is part of 31 in the series 20060908_Issue

புதுவை ஞானம்


(V)

44)கடல் நுரை மலையெனக் கண்டது உண்டோ ?
அப்படி ஆயின் அது என் பாடல்!
மலை என உயர்ந்து இருந்த என் பாடல் இறகென மிதந்து பரந்து விரிந்தது.
வாளின் கூர்மை ஒத்ததென் பாடல் -அதன் பிடிதனில் மலரும் மெல்லிதழ்ப் பூக்கள் !
ஊற்றென மலருரும் எந்தன் பாடல் தெள்ளிய நீரில்பவழமாய் மிளிரும்.

45) வாளின் கூர்மை ஒத்ததென் பாடல்- அதன்
பிடிதனில் மலரும் மெல்லிதழ்ப் பூக்கள்
ஊற்றென மலரும் எந்தன் பாடல்
தெள்ளிய நீரில் பவழமாய் ஒளிரும்.

46) இளம் பச்சையானது எந்தன் பாடல்
எனினும் சிவந்து ஒளிரும் தீப்போல்
காயம் பட்ட மான் எந்தன் கவிதை
புதரினைத்தேடும் ஒளிந்து கொள்ளுதற்காய்.

47) சுருங்கச்சொல்லி¢ விளங்க வைக்குமது
துணிந்தவருக்கோ மனதை மயக்கும்!
எ·கின் அனைத்து வலிமையும் கொண்டு
வாளாய் வடித்தது எந்தன் கவிதை. !

(VI)

48) நினைவுச் சின்னமாய் எடுத்துச் செல்ல யான்
விழைவதும் மகிழ்வதும்
நிறை அறிவன் வெள்ளி முடிக்
கற்றை ஒன்று மட்டுமே !

49 )இரக்கத்தின் பேரால் அனுமதிக்கப் பட்டால்
யாசிப்பதற்கென்று ஒரு சலுகை இருக்கின்றது
நேசிக்கும் எந்தன் பாச மிகு தங்கையின்
பூரிக்கும் ஓவியத்தை உடன் கொண்டு செல்ல.

50)விதிக்கப் பட்டதாம் இந்தவொரு வாழ்வில்
கருவூலம் ஒன்றைக் கைப்பற்ற விழையின்
மறைத்துக் கொண்டு வந்த வெள்ளிக் கற்றையை
தங்கப் பெட்டகத்தில் தக்க வைப்பது தான்.

(VII)

51)இதயத்தின் உள்ளே இடம் ஒன்று உண்டு
இஸ்பெயினில் இருக்கும் ஆரகோனுக்கு
வாய்மை வலிமை நன்றி மாசிலாத்தன்மை
இவற்றுள் அனைத்துமே அந்த ஆரோகான் தான்.

52 ) முட்டாள் ஒருவனுக்கு விளங்கவில்லையெனில்
இப்படித்தானடா என விளக்கிச் சொல்வேன்
நல்ல ஒரு நண்பரை நான் அங்கு கண்டேன்
ஒர் அழகியின் காதலும் ஆதாயம் ஆனது அங்கே !

53 )பூத்துக் குலுங்கும் அந்தச்சம வெளியில்
வீரர்கள் கண்டனர் வெஞ்சமர்க் களத்தை
உயிரையே பணயம் வைப்பது ஆயினும்
கைவிட மாட்டார் ஏற்றதோர் கொள்கையை.

54 )நகரத்தந்தை கடிந்து கொண்டாலும்
முரட்டு அரசன் குறுக்கிட்ட போதிலும்
அங்கியை உதரித் தோளில் போட்டு
துவக்கு கொண்டுயிர் துறப்பர் அக்கணம்.

55 )சகதிக் குழம்பாய் ஈப்ரோ தழுவும்
மஞ்சள் நிலக்கரை மனது நேசிக்கும்
பண்டைய தியாகிகள் நினைவாய் நிறுத்திய
நடுகற்கள் யாவும் வலம் வரும் மனதில்.

56)கொடுங்கோலரை வளைத்துப் பிடித்து
ஆவியழிப்பவரைத் தலை வணங்குபவன் யான்
கொடுங்கோல் எதிர்ப்பவர் க்யூபன் ஆயினும்
ஆரகோனின் அரும்புதல்வர் ஆயினும்
வாழ்க அவர் புகழ்- வாழ்க அவர் புகழ் !

57)கவிழ்ந்த நீள்நிழல்த் தாழ்வாரங்கள்
சுழன்று கிறங்கும் மாடிப்படிகள்
மோனம் தவழும் கோயிற்கூடம்
காலத்தை வென்ற கன்னியர் மாடம்
எனக்குப் பிடிக்கும் எனக்குப் பிடிக்கும்.

58)பூத்துக்குலுங்கும் பசிய நிலப்பரப்பை அது
இஸ்பானியர்உடமை ஆயினும் இஸ்லாமியர்உடமை ஆயினும் நேசிப்பவன் யான்!
ஏனெனில் எந்தன் வாழ்வில் இதுவரை நெஞ்சில் ஒற்றை மலர் கூட
மலர்ந்ததே இல்லை.

(VIII)

59)காலம் சென்ற என் நண்பன் ஒருவன்
காலம் கடந்து வரத் தொடங்கி உள்ளான்
வாய் விட்டுப் பாடுகிறான் அருகில் அமர்ந்து
துயரம் தோய்ந்து நடுங்கும் குரலில்.

60)இரட்டைச் சிறகடிக்கும் புள் மீதமர்ந்து
நீல வான் வழி மிதந்து செல்கின்றேன்
புள்ளின் சிறகில் ஒரு புறம் கருமை
ஒளிரும் பொன்னிறம் மறுபுறம் மின்னும் !

61)ஒரு வண்ணம் விரும்பி மறுவண்ணம்
மறுப்பது பித்துக்குளியின் பேதை மனது
கருமையும் பொன்மையும் கலந்த
பொன் வண்டே’காதல்’ எனவாகும்

62) எரிச்சல் கொண்ட இதயம் படைத்த
வெறிச்சி ஒருத்தி இங்கிருக்கின்றாள்
வெ·குளியால் குருதி குடிக்கும் அப்பேய்
சிரிப்பே அற்றதோர் நிலைக்குத் தாழும்.

63 )எப்போதைக்குமாய் நொடித்ததோர் நெஞ்சம்-
நிலைக்க வைக்கும் குடும்பமெனும் நங்கூரம் இழந்து
புயலில் புறப்பட்ட தோணியாய் அலையும்
வரவும் போகவும் வழியறியாமல்.

64 )தாங்கொணாத்துயரம் தாக்கிடும்போது
மரித்த அம்மனிதன் சபித்து அழுவான்.
சரித்து அன்பாய்த் தலையில் தட்டி
பரிவோடு ஆழ்ந்த உறக்கத்தில் கிடத்துவேன் !

(IX)

65) மரமடர்ந்த சோலையின் விரிந்ததொரு சிறகில்
இரவின் நிழலில் மலர்கிறது ஒரு கதை
கவுதமாலா ஈன்ற கன்னியின் கதை அது
காதலுக்காக ஆவி துறந்த அற்புத மங்கை அவள்.

66)அல்லியும் மல்லியும் மருக்கொழுந்தும் விரவி
மலர் வளையங்கள் புனையப் பட்டன
வெண் பட்டுத் துணியால் வேயப்பட்ட
சவப் பெட்டிக்குள்ளே கிடத்தப் பட்டாள் அவள்.

67) தன்னை மறந்து விட்ட காதலனுக்கென
நறுமணம் பூசிய துவாலையை அளித்தாள் _ அவனோ
வேறு ஒருத்தியை மணந்து நாடு திரும்பவே
காதலின் கல்லறையில் வாடினாள் வஞ்சி.

68) தூதுவர்களும் பாதிரியார்களும் புடை சூழ
கல்லறை நோக்கி கடந்தது அவள் பயணம்.
பின் தொடர்ந்தது ஏழைகள் கூட்டம்
அலை அலையாய் மலர்களை ஏந்தி !

69 ) ஜன்னலின் வலைக்கதவை மெல்லெனத் திறந்தாள்
மீண்டும் காதலனைக் காணும் ஏக்கம் பெருமூச்சாய் தகிக்க
கடந்து சென்றானவன் புது மண மகளோடு மீண்டும் அவனைப்
பார்க்கும் வாய்ப்பு வரவே இல்லை அவளுக்கு !

70 ) வெயில் பட்ட செம்பாய்க் கொதித்தது அவள் நெற்றி
விடை பெறக் கடைசியாய் நான் முத்தமிட்ட பொழுதில்.
வாழ்நாள் முழுவதும்வெறித்தனமாக
நான் நேசித்தது – அந்த நெற்றி ஒன்று தானே !

71 ) நதியில் இறங்கிணாள் அவள் ஓர் நாளிரவில்
மருத்துவர் கண்டார் சடலமாய் அவளை –
மரித்து விட்டாளாம் குளிரால் விரைத்து – அவளைக்
கொன்றது காதலே என்பது எனக்குத் தெரியும் !

72 )பனி படர்ந்த கல்லறை மீது கிடத்தி இருந்தனர் அவளை
பலகையின் மீது முத்தமிட்டேன் நான்
மெல்லிய கரத்திலும் மீண்டும்
வெண்ணிறக் காலுறை மீதும்.

73 )நின்றிருந்தேன் அங்கு இருட்டு கவியும் வரை
சென்று விடுங்கள் என்றான் கல்லறைக் காவல் காரன்
மீண்டும் ஒரு முறை பார்க்கவா இயலும் …..
காதலுக்காகவே உயிர் விட்ட அவளை ? 06:32 PM 7/25/06

Series Navigation