மங்கையராகப் பிறப்பதற்கே..

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

புதுவை ஞானம்



இப்போது தான் வந்து சேர்ந்தேன்
உடல் நொந்து மனம் சலித்து.
என்னைப் போல் இளம் பெண்கள்
நீர் சேந்தும் கிணற்றடியில் இருந்து.

முன்னோடிய நீரோடை
மலர்ந்து மணம் பரப்பும் மலர்கள்
கண்ணுக்கு எட்டியவரை பசும்புற்கள்
கிறங்கி நின்றேன் கண நேரம்.

.
மீண்டும் கேட்டது கடமையின் அழைப்பொலி
தலையில் அழுத்தும் மட்குடத்தைத் தூக்குகையில்
வலி வழங்கும் பெருங்குடை போலும்
தள்ளாமை நெருங்கியது போலும் தவித்தேன்.

வீட்டுக்கு வந்து பின் உனக்காகச் சமைத்தேன்
சதைத் தினவில் நீ குடித்துக் களித்த போது
வியர்வை சிந்தினேன் சுட்டெரிக்கும் வயல் வெளியில்
வயிற்றில் வளரும் கருவுடன் வேதனையைப் பங்கிட்டு .

கழுவினேன் நீ தின்றெறிந்த தட்டுக்களை
பெருக்கி வாரினேன் நாம் படுத்திருந்த அறையை
சாணி போட்டு மணக்க மெழுகிய தரையின் மூலையில்
படுக்கை விரித்தேன் பதியே உனக்காக.

வந்தாய் பிறகு உந்தன் குடிக் -காம வெறியோடு
வைத்தாய் உன் வழக்கமான கோரிக்கைகளை
எப்படிச் சோர்ந்திருக்கிறேன் என்பதையும்
எப்படியாகுமோ கருவின் நிலைப்பு என்கின்ற
கவலையையும் நான் விளக்க முயன்ற போது
அடித்து உதைத்து அடைந்தாய் உன் வழியில் .

கசங்கித் துயறுற்ற அந்தக் கணத்தில் கசந்தேன் உன்னை
எப்படிப் போனாலும் எழுப்புவேன் மறுநாளும் உன்னை
மாடு கறப்பேன், நிலத்தை உழுவேன், சமைப்பேன் உணவை
இருப்பாய் என் ஆண்டையாய் மீண்டும்
ஏனெனில் அடி பணிய வேண்டும் பெண்கள்
கணவனை மதித்துக் காதலித்துப் பணி செய்து.
அது தானே நீதி ?
இந்நிலத்தின் விளைபொருள் அல்லவா ஆண்கள் ?

Source :Daughter’s of Africa Authour : Not known

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்