பெரியபுராணம் – 101 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 39 in the series 20060825_Issue

பா.சத்தியமோகன்



2858.

செல்வம் நிறைந்த “தில்லை” எனும் பழமை வாய்ந்த ஊரில்

இறைவரின் திருநடனத்தைப் பணிந்து வணங்கித்துதித்தார்

பெருந்தொண்டர்கள் பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர்

பிறகு

இறைவரின் “திருத்தினை” நகரத்தை அடைந்து பாடினார்

அத்தொண்டர்களுடன் திருமாணிக்குழியினை அடைந்து துதித்து

செறிந்து பொருந்திய நீண்ட சடையை உடைய இறைவரின்

திருப்பாதிரிப்புலியூரை வந்தடைந்தார்

2859.

கன்னிமாவனத்தை தம் காவலிடமாகக் கொண்டு எழுந்தருளிய

சிவபெருமானின் இரு திருவடிகளையும் பணிந்து

முன்நாளில்

அத்தலத்தில் முடங்கிய காலுடன்

முயலாகுமாறு சபிக்கப்பட்டமங்கணமுனிவர்

சாபநீக்கம் பெற அருள்செய்த தன்மையை

பதிகத்தில் மொழிந்து துதித்தார்

பிறகு

நீண்ட சோலைகள் சூழ்ந்த திருவடுகூர் அடைந்து

நீண்ட சடையுடைய இறைவரின்

திருவக்கரை அடைந்தார் ஞானசம்பந்தர்

2860.

திருவக்கரைப் பெருமான்தனை வணங்கி

அங்கு தங்கியிருக்கும் நாளில்

திருவருளாலே

சிவந்த வான் போன்ற வேணியுடைய இறைவரின்

“இரும்பை மாகாளம்” சென்று வணங்கி

உடன் திரும்பி

மிக்க சிறப்பு வளர்க்கின்ற “திருவதிகை வீரட்டானம்” சென்று

தம் முன்பு கூடிய

உண்மையான திருத்தொண்டர்கள் எதிர்கொண்டு வரவேற்க

தொழுது அங்கே சென்றார்

( வேணி –
சடைமுடி )

2861.

ஆதிதேவரான சிவபெருமான் விரும்பி வீற்றிருக்கும்

திருவீரட்டானம் சென்றார் அடைந்தார் சம்பந்தர்

முன்பு

பூதகணங்கள் பாட நின்றாடுகிற இறைவர்

தம் திருநடனம் புலப்படும்படி காட்டினார்

வேதபாலகர் பணிந்தார்

மெய்யுணர்வுடனும் உருகிய விருப்புடனும்

குற்றமற்ற இசை குலவுகின்ற

“குண்டைக் குறள் பூதம்” எனத்தொடங்கித் துதித்தார்

2862.

போற்றித்துதித்த திருப்பதிகத்தின் இசை பாடினார்

பணிந்தார்

அங்கு

விரவும் அன்போடு மகிழ்ந்து

இனிதாகத் தங்கியிருந்தார் —

சீகாழி வந்து அருளிய திருமறைச்சிறுவரான சம்பந்தர்

பாம்பும் நீரும் தங்கிய சடையுடைய அங்கணர் சிவபெருமான்

மிக மகிழ்வுடன் எழுந்தருளிய “ திருஆமாத்தூர்” சென்றார்

2863.

சென்று சேர்ந்து

சிந்தை மகிழும் விருப்பத்தோடு விளங்கும் திருமாத்தூர் சென்றார்

பொன்போல் விளங்கும் பூங்கொன்றை மலரையும்

வன்னியையும் அணிந்து வீற்றிருக்கும் இறைவர் அடிபோற்றியவாறு

“குன்றவார்சிலை” எனத்தொடங்கும் திருப்பதிகத்தை

மெய்மை குலவிய இசையுடன் பாடினார்

மிகவும் இன்பம் பொருந்த வணங்கிச் சென்றார் ஞானசம்பந்தர்

பிறகு

“திருக்கோவலூர்” நகர் சேர்ந்தார்.

2864.

திருவீரட்டம் அமர்ந்துள்ள

ஒலிக்கும் கழல் அணிந்த திருவடிகளைப்பணிந்து வணங்கி

பசுவின் ஐந்து பொருள்களையும் விரும்பி ஏற்று ஆடும் இறைவரின்

“அறையணி நல்லூர்” போய் அடைந்தார்

மலர்ந்த செந்தமிழ் பதிகத்தினால் போற்றிடும் பிள்ளையார்

இறைவரின் புகழையே துதித்துவாழும் அடியார்களின்

அன்பினால் உண்டாகும் மேன்மையை

உலகம் அறிந்து உய்யுமாறு அருளிச்செய்தார் —

2865.

சீரால் நிலைபெற்ற திருப்பதிகத்தைப்பாடி

அந்தத் திருஅறை அணி நல்லூரில்

கச்சணிந்த கொங்கையுடைய

உமை ஒரு பாகரான சிவ்பெருமானின்

மலை மீது வலம்வந்த சம்பந்தர்

இவ்வுலகில் மிகுந்த தொண்டர்களும் தேவர்களும்

நாள்தோறும் பணிந்தேத்தும்

மேகங்கள் தவழும் சோலைகளால் சூழப்பட்ட

“திருவண்ணாமலையை”

அன்பர்கள் சுட்டிடக்கண்டார்

2866.

திருவண்ணாமலையானது —

அங்கு அமரும் சிவபெருமான் போலவே தோன்றியது

கண்ணால் பருகினார்

கைகளால் தொழுதார்

கலந்து போற்றும் காதலுடன் —

“உண்ணாமுலையாள்’’ எனும் பதிகம் பாடினார்

தொண்டர்களுடன் சென்று –

தெளிந்த நீரினை முடியில் சூடிய இறைவரின்

திருவண்ணாமலை சென்று சேர்ந்தார்

2867.

அவ்விதம்

அண்ணாமலை அணைந்த ஞானசம்பந்தர்

நிலத்தில் பணிந்து பொற்றினார்

மலை மீது விரும்பி வீற்றிருக்கின்ற இறைவரின் திருவடிகளை

தம் தலை மீது மிகவும் பொங்கும் ஆர்வத்துடன் புனைந்தார்

திருமேனி முழுதும் புளகம் அடைந்தார்

கண்கள் பொழிந்த ஆனந்தக் கண்ணீரை

அருவி எனப் பெருக்கினார்.

2868.

ஆதி மூர்த்தியான அண்ணாமலையார் திருவடி வணங்கினார்

அங்கு இனிதாய் விரும்பி வீற்றிருந்த நாளில்

பூதங்களுக்குத் தலைவரான அவரை

“பூவார்மலர்” எனதொடங்கும் பதிகம் பாடித்துதித்தார்

காதலுடன் அத்திருமலையில் சிலநாள் தங்கி

வேத கீதரான இறைவரின் திருப்பதிகள் பிறவும் வணங்கும் விருப்பமுற்று —

2869.

உமை அம்மையை ஒரு பாகத்தில் உடையவர் திருவருளால்

வணங்கி விடைபெற்று வடதிசை சென்றார் —

சிவந்த கண்களையுடைய காளையை ஊர்தியாக உடைய இறைவரின்

பதிகள் பலவும் சென்றார்

பெரிய மலைகள்,காடுகள் பலவும் கடந்து திருத்தொண்டை நாட்டில்

பிறைச்சந்திரன் சூடிய இறைவர் விரும்பி அமரும்

திருவோத்தூர் சேர்ந்தார்

2870.

குற்றமற்ற சீகாழித்தலத்தில் தோன்றிய

தமிழ்வல்லுநரான ஞானசம்பந்தர்

அங்கு வந்ததும் –

தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் வேதம் ஓதுவித்து அருளிய

திருவோத்தூர் திருத்தொண்டர்கள் மிகவும் மகிழ்ந்தனர்

வாழைகள், தோரணங்கள், விளக்குகள் வரிசையாக அமைத்து

நிறைகுடங்களும் பூவும் பொரியும் சுண்ணமும் ஏந்தி முன் வந்து துதித்தனர்

2871.

சண்பை வேந்தர் முத்துச்சிவிகையிலிருந்து இறங்கி

அன்புடைய சிறப்புடைய அடியார்கள் தொடர

வானமும் தாழ்ந்து தோன்றும் கோபுரத்தைச் சூழ்ந்த

பொன்மதிலை வலமாகவந்தார்

வணங்கிய பண்புடன் பணிந்து பரமர் கோவிலுக்குள் அடைந்தார்

2872.

யானையின் தோலைப் போர்த்துக்கொண்ட வன்மையுடையவரும்

உமையம்மையின் மணவாளரும்

வேதங்களின் உட்பொருளாக நின்றவரும் ஆன

சிவபெருமானை வணங்கி

நாரணரும் பிரம்மரும் சேர்வதற்கு அரிய திருவடிகளைத்

துதிப்பதால் வருகின்ற இன்பக்கண்ணீர் வழிய கைகூப்பித் தொழுதார்

2873.

தொழுதார்

நிலத்தில் விழுந்து பணிந்து எழுந்தார் ஞானசம்பந்தர்

சொன்மாலைகளால் துதித்தார்

எல்லாமாய் நின்ற இறைவரின் அருள்பெற்று வெளியே வந்து

முதல்வரை காலங்கள்தோறும் புகுந்து வணங்கினார்

துதித்தார் சம்பந்தர்

முன்பு அழுது வணங்கிய ஒரு தொண்டர் –

சமணர்களின் தன்மை பற்றி ஒரு செய்தி அறிவிக்கத்தொடங்கினார் —

2874.

உள்ளங்கையில் தீயினைக்கொண்ட இறைவர்க்கு அடியேன் நான்

இத்தகைய நான் வளர்க்கின்ற பனை மரங்கள் எல்லாம்

மேக மண்டலம் தொடுமளவு நீண்டு வளர்ந்தாலும்

ஆண் பனைகளாகவே

காய்க்காமலேயே இருப்பதைச்

சமணர்கள் மிகவும் இழிவாக —

“இங்கு நீவீர் வைத்து வளர்க்கும் பனைகள் காய்க்க வழியுண்டோ ! ”

என நகைத்துப் பேசுகின்றனர் எனப்புகன்றார்

2875.

பரமனாரின் திருத்தொண்டர்களது அடிமைத்திறம் நோக்கினார்

சம்பந்தர் தனது உள்ளத்தில் பரிவு கொண்டார்

பொருந்திய பெரு விருப்புடன் விரைந்து

விமலர் கோயிலுள் புகுந்து

பாம்பையும் பிறைச்சந்திரனையும் பகைநீங்கும்படி தலையில்சூடிய

சிவபெருமானின் அடிகளில் விழுந்து வணங்கினார்

திருவருளை இரந்து துதித்து

“பூந்தேர்ந்தாயன” எனத்தொடங்கும் திருப்பதிகம்

இசையுடன் பாடி அருளி —

2876.

மேன்மை விரும்பும் திருக்கடைக்காப்பில்

“குரும்பைகளை ஆண்பனைகள் ஈனும்” எனும் வாய்மை குலவுவதால்

விமலர் அருளாலே

நெருங்கிய அந்த ஆண்பனைகளெல்லாம்

நிறைந்த குலைகளுடைய

குரும்பையுடைய பெண்பனைகளாக மாறிவிட்டன

பார்த்தவர்களெல்லாம் அதிசயித்தனர்

( திருவோத்தூரில் பாடிய பதிகம் “பூத்தேர்ந்தாயன” )

2877.

சிறப்பால் நிலைபெற்ற திருக்கடைக்காப்பு சேர்த்தார்

பதிகத்தை நிறைவாக்கினார்

சிவனார் அருள்பெற்று

உலகில் வாழ்ந்த அந்த ஆண்பனைகள் –

முன்னே காய்த்துப்பழுக்கும் தன்மை பெறுமாறு —

விரும்பும் அன்பரின் கருத்தை

சம்பந்தர் நேர்பட முடித்துத்தந்தார்

திருத்தொண்டர் துதிக்க

அந்நகரத்தில் இனிதாகத் தங்கியிருந்தார்

2878.

பாண்டிய நாட்டில் சமணமாகிய மாசு அறுத்த ஞானசம்பந்தரின்

இச்செய்கை கண்டு திகைத்தனர் சமணர்கள்

அந்நாட்டை விட்டு அகன்றனர்

சிலர்

தமது கையில் ஏந்திய நீர்க்குண்டிகைகளை

“இவற்றால் என்ன பயன்?” என்று கூறி உடைத்தெறிந்தனர் —

“முழுமுதல் கடவுளாகிய

காளைக்கொடி உயர்த்திய

பொன்போன்ற மேனியுடைய

புரிசடையுடைய சிவபெருமானே !” என்று போற்றத் தொடங்கினர்.

2879.

திருஞான சம்பந்தரின் உண்மைத் திருவாக்கினால்

அந்தப்பனைமரங்களும்

பனையாய்ப் பிறப்பதற்குரிய வினை நீங்கியது

ஒழியாப்பிறவிப் பிணி நீங்கியது

உடம்பு இருப்பதற்குக் காரணமான கால அளவு கழிந்த பின்

அவை சிவப்பேறு கூடின

வள்ளலார் அருளின் மெய்த்தன்மை கூற

வரம்புக்குள் அடங்குவதோ !

2880.

அங்கு தேவதேவரான இறைவரைப்பணிந்து

ஆடும் பாம்புடன்

பொங்கும் கங்கையையும் முடியில் சூடிய இறைவர் மகிழும் பதிகள்

பலவும் போற்றி –

மங்கைபாகர் வீற்றிருக்கும்

வயல்கள்சூழ்ந்த திருமாகறல் சென்று

மணம்பொருந்திய நீர் சூழ்ந்த

திருகுரங்கணில் முட்டத்தின் அருகில்நெருங்கினார்

2881.

ஆதிமுதல்வரான சிவபெருமானின்

திருகுரங்கணில் முட்டம் சேர்ந்து

பணிந்தேத்தினார்

நீதிநெறியில் வாழும் திருத்தொண்டர் போற்றுமாறு சென்று

ஒப்பிலாத சீகாழிநகரில்

வேதநெறியோடு சிவநெறியும் விளங்குமாறு அவதரித்த

கவுணியரான ஞானசம்பந்தர் —

உமையம்மையை ஒருபாகத்தில் கொண்ட

ஏகம்பநாதர் எழுந்தருளும்

மதில் சூழ்ந்த காஞ்சிப் பதியின் பக்கத்தை அடைந்தார்

( 1. திருக்குரங்கணில் முட்டத்தில் பாடியது ‘விழுநீர்’ எனத்தொடங்கும்
பதிகம்

2. குரங்கு, அணில், காகம் வழிபட்ட தலம் அதனால் திருக்குரங்கணில்
முட்டமாயிற்று )

2882.

பெருமைமிகு காஞ்சி நகரத்தில் வாழும் மக்களும்

மெய்ம்மை நெறியில் நிலை பெற்ற தொண்டர்களும்

நகரத்தின் அண்மையில்

திருஞானசம்பந்தர் வந்துசேர்ந்த மகிழ்ச்சியால்

உண்டான இன்பம் காரணமாய்

காடுபோல செறிந்த பாக்குகளாலும் வாழைகளாலும்

அழகியதோரணங்களாலும் வீதிகளை அலங்கரித்தனர்

2883.

கொடிகள் நிறைந்த வீதியில்

அழகிய திண்ணையின் பக்கத்தில்

மணமுடைய பந்தலில்

மணம்வீசும் நீர் நிறைந்த நிறைகுடங்களுடன்

பொன்விளக்குகளை ஏந்திய ஆண்களும் பெண்களும் அன்பர்களும்

பரவிய இயல்புடன் நெருங்கிட —

2884.

மாலை சூடிய மாதர்களின் ஆடலும்

குலாவும் தொண்டர்களின் பாடலும்

வேதகீதத்தின் நாதமும் மிகவும் எழுந்து பெருகியது

பெருவிருப்பினால் – காதலால்

காஞ்சி வாழும் மக்கள் ஆரவாரித்து ஒலிசெய்து எழுந்துபோய்

பழமையுடைய மதிலின் வெளியில்

அவர் முன் சென்று கூடி வணங்கினர்

2885.

சண்பை ஆளும் மன்னர் எதிரே

அந்தத் தொண்டர்கள் வந்து சேர்ந்ததும்

பண்பு மிகுந்து

முத்துச்சிவிகையிலிருந்து இறங்கினார்

வணங்கும் தன்மை கண்டார்

எண்ணம் பெருகிய தொண்டர்கள்

அஞ்சலி செய்து துதித்த “அரகர” எனும் சொல்

உலகெங்கும் பரவ —

நிலத்தில் வீழ்ந்து

வானம் முட்ட ஆரவாரம் செய்தனர்

2886.

மிக்கச் சிறப்பு கொண்ட சண்பை மன்னர்

ஒளிபொருந்திய திருநீறு விளங்கிட மனதினில்

சிவனிடம் அன்பே பூணாகக் கொண்ட அடியவருடன்

வானளாவ உயர்ந்த மதிலின்

புற வாயிலுள் புகுந்தார்

காணும் ஆசையால் கைகளைத் தலைமீது குவித்தனர் நகரமக்கள்.

2887.

அகன்று நீண்ட தெருவின் இடையே

தொண்டர்கள் முழக்கமிட

கயல்மீன் போல் நீண்ட கண்களுடைய மாதரும்

காதல் மிக்க மக்களும்

புயல் பொழிந்ததுபோல

பூக்களையும் பொன்சுண்ணப்பொடியினையும்

ஏற்றவாறு வாழ்த்துகூறி

இரு பக்கங்களிலும் வீசினர்

2888.

இன்னவிதமாக யாவரும் இன்பமெய்துமாறு

வந்து சேர்ந்தார் ஞானசம்பந்தர்

சுருண்டு நீண்ட சடையுடைய சிவபெருமான் மகிழ்ந்த

பல கோயில்களைச்

செல்லும் வழியியெல்லாம் வணங்கிப்போனார்

மலையரசன் மகளான உமையின் பூசனையை

என்றும் மகிழ்ந்து ஏற்கும்

ஏகம்பரான இறைவரின் கோயில் சேர்ந்தார்

–இறையருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்