தொடர்ந்து ஏய்க்கும் மாடும் விடாது மேய்க்கும் மூலனும்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

தேவமைந்தன்



முகாந்திரமற்ற வனாந்தரங்களில் – நாம்
தொலைந்துபோனோம்.
கொட்டும் மழையில்
வெட்டும் இடியில்
ஊழிநடனமிடும் மின்னற்கொடிகளில்
தொடுவானம் எச்சரிக்க,நாம்
நடுங்கிக் கிடந்தோம்.
வானம் வெளுத்து அவ்வப்பொழுது
நம்முள்ளே நம்பிக்கையூட்டியபொழுது,
வழியெல்லாம் முட்புதர்கள்
ஒடித்து முன்சென்றபொழுதெல்லாம்
கால்கள் கிழிந்த ரணங்கள்
தம்மை மறதிப்பெருவெளியில்
ஆழ்த்திக்கொள்ளாமல் இன்னும்
ஈரம் மாறாத வடுக்களாகவே
நீடிக்கின்றன.
பின்னர், எதிர்பாராததொரு நாளில்,
இறுகி முதிர்ந்து விறைத்து
வானத்தை முறைக்கும்
பொய்வண்ணங்கள் பூசிய
கான்கிரீட் கட்டடங்கள் அடர்ந்ததும்,
மனிதவிலங்குகள் கூட்டம்கூட்டமாய்
பெருமழைநேரங்கள் தவிர
மற்ற நேரங்களில் எல்லாம்
இடைவிடாமல் இரவுபகல்
எப்பொழுதும் சஞ்சரிப்பதும்,
தூசியும் புழுதியும் நியூட்ரான் நடனமாய்
எங்கெங்கும் தாண்டவமாடுவதும்,
குப்பைப் பிளாஸ்டிக் கழிவுகளும்
ஆல்கஹால் வாடை பீச்சும்
கழுத்துவேறான கண்ணாடிக் குடுவைகளும்
பிட்ஸா நூடுல்ஸ் மிச்சங்களும்
உருவி சிதையாத உறைகளும்
இன்னும் உலராத கசிவுமறைப்பான்களும்
தட்டிக்கேட்கப்படாத இடங்களில்
குவிக்கப்பட்டிருக்கும் அலட்சியமான நகரத்தின் –
தெருமுடுக்கொன்றில் சற்றும்
எதிர்பாராத முறையில் நாம்
சந்தித்துக்கொண்ட பொழுது,
அடையாளமிழந்ததும் அறிமுகமிழந்ததுமான
அவமானங்களை அவலத்தோடு
ஒருவருக்கொருவர் நினைப்பூட்டிக்கொள்ள
நொந்து, விக்கித்துப் போனோம். ஆம்,
வாழ்க்கை, கோழைகளுக்கு அல்லதான்.
வல்லதே வாழுமெனும் கானக நியாயம்
இங்கும் அமலில் உள்ளது. மறவாதே.
வா, நெடுக நடப்போம்.
பசிதாகம் கொன்று,நம்
இலக்கை எட்டுவோம்.
ஓயாதநம் நடைக்குப் பின்னே
ஒரு வெளி வரும்.
அதில் வெளிச்சம் இருக்கும்.
அடிப்படை வசதிகள் மட்டுமல்ல,
சிபாரிசு, பணக்கற்றை பரிமாற்றம் ஏதும்
தேவைப்படாமல் ஒருவேலை கிடைக்கும்.
வஞ்சிக்காது கட்டிய
வீடும் கிடைக்கும். சுற்றுமுற்றும்
தோட்டம் கிடைக்கும். நல்ல
காற்றும் கிடைக்கும்.
அவசரமில்லாமல் சமைத்த
உணவும் கிடைக்கும்.
நீர்விடாய் தணிப்போம்.
கொல்லும் பசி,சாக உண்ணுவோம்.
கால்களை நீட்டியே இளைப்பாறுவோம்.
நம்மை நாம் யார் என்று
நிச்சயமாய், நிச்சலனமாய்
அடையாளம் கண்டுகொள்வோம்.
வா.
karuppannan.pasupathy@gmail.com

Series Navigation

தேவமைந்தன்

தேவமைந்தன்