தூங்க மறுக்கின்ற வெய்யில் இரவுகள்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

நவஜோதி ஜோகரட்னம்


பனிபடிந்த
வெண்ணிறத் தெருக்கள்
அடிவானம்
சூல் கொண்ட பெண்ணின்
வெளிறிய முகம் போல்
சிவக்கிறது
இருள் வளைவுகளில்
மௌனத்தை அளக்கும் தியானங்களில்
நீலாம்பரி; இசைக்கின்றது….

அரூபத்தில் அது ஒரு தொடுகையாகி
வெண்ணிற மலர்ச்செண்டோடு;
விரைவில் எம் திருமணம்; என்றாயே…

சொர்க்கத்தில் நீ
சுற்றிய வெப்பத்தில்
மென் காற்றும் பேச மறுத்ததே..
எல்லோரையும் போல நீ
அழமாட்டாய்
இருவர் பிரியுமுன்
இறுதியாகச் சொல்லக்கூடிய
வார்த்தைகள் எத்தனையோ!
அதைக்கூட நீ சொல்லவில்லையே!…

முகத்தில் விரிந்த
கை இறக்கைகளின்
செஞ் சூட்டில்
வெந்து அழுதேன்
நீ சத்தம் போட்டு
சிரித்து மறைந்தாயே

சிறைக் கைதிகள் போல்
கெஞ்சி வந்து தஞ்சம் கேட்ட உன்னை
விரட்டி விமானத்தில் பறக்க விட்டார்களா?
உன் நிஜமான முத்தம்
காற்றில் மிதந்து வந்து
என் துயர மொட்டுக்களை
அவிழ்த்து விரித்ததே…

தலையில்லா முண்டங்களும்;;
வெடி குண்டுகளும்
குப்பைத் தொட்டிகளாய்;
கொத்தியும் கடித்தும்;
கொறிக்கின்ற
இனத்தீர்வு நாடகத்தில்
பிதுங்கியபடி நடுங்கி
நசியும்; நகர்வை பார்க்கவா திருமலை சென்றாய்?

குருவிக் குஞ்;சுகள்
ரீங்காரம் செய்கையில் உன்
குரல் அடைத்து நின்ற நினைவுகள்
உயிரில் அறைய
உள்ளும் வெளியுமாய் நீ உருண்டு போகிறாயே!

மதியச் சிரிப்பில் நீ
சிலிர்த்து மலர்ந்ததும்
அணைத்து மடியில் என்
மடலை வருடியதும்..
உருகி ஊட்டி
உச்சம் காட்டி….என் இன்பக்
கனவுகளுக்கு மேய்ச்சல் தந்து போனவனே!
உன்னத கணங்கள் இவைதானா?..

உயிர் வரண்டு
கடைசி மூச்சை
எப்படி நீ
உனக்குள்ளே ஊதிவிட்டிருப்பாய்?
ஊழல் பிடித்த கோழை உலகம்
உன்னை எப்படி
துண்டங்களாக வெட்டியதோ?..
ஐயகோ இது என்ன கொடுமை….

இப்போ நான்.
தூங்க மறுக்கின்ற
வெய்யில் இரவில்
பனியில் போர்த்த சகானா புல்வெளி…
ஓயாமல் கொட்டும் மழையில் என்றும்;
உன் ஆயுள் கைதி
திரும்ப உன்னைநான் அணைக்காதபடிக்கு….

31.5.2006.
————————–
navajothybaylon@hotmail.co.uk

Series Navigation

நவஜோதி ஜோகரட்னம்

நவஜோதி ஜோகரட்னம்