பெரியபுராணம் – 85 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 41 in the series 20060421_Issue

பா. சத்தியமோகன்.


2362.

திருத்தோணிப்புரத்தில் (சீகாழி) தோன்றிய பிள்ளையாரை

அந்த நீலநக்கரின் பெரிய நட்பை மகிழ்ந்து

மனதில் வைத்து

நான்முகனுக்கும் திருமாலுக்கும் அரியவரான

சிவபெருமானின் பதிகள் பலப்பலவும் சென்றார்

வணங்கினார் துதித்தார் பாடினார்

பரமர் திருத்தொண்டர் குழாம் வாழும்

திருநாகைக்காரோணம் (நாகப்பட்டினம்) எனும் பதியில் வீற்றிருக்கும்

இறைவரைக் கைதொழுதார்

இசையும் கலந்த தமிழ் ஓசைச் சொல்தமிழ் மாலை பாடினார்

சிலநாட்கள் தங்கியிருந்தார்

அங்கிருந்து தொழுது அகன்றார்.

2363.

உப்பங்கழி சூழ்ந்த சோலைகளின் அருகிலுள்ள

நாகப்பட்டினம் நீங்கிச் சென்று

கங்கையாற்றின் சுழிகளில்

ஒலித்தல் பொருந்திய சடையை உடைய

இறைவரின் பதிகள் பலவும் வணங்கிப் புகழ்ந்தார்

மயில் போன்ற நீலோற்பவ மலர்கள் மலர்கின்ற

வயல்கள் சூழ்ந்த

திருக்கீழ்வேளூர் வீற்றிருக்கும்

இறைவர் கழல் வணங்கி ஏத்தினார்

மொழியும்காதலுடன்

தமிழ்மாலைப் பதிகம் புனைந்து அருளினார்

பிறகு அந்தப் பழைய பதி நீங்கினார்.

( ‘‘மின்னுலாவிய’’ எனத் தொடங்கும் பதிகம் திருக்கீழ்வேளூரில்
அருளினார்)

2364.

பெருகிய ஞானம் பெற்ற பிள்ளையார்

அங்கு

பக்கங்களிலெல்லாம் இறைவரை வணங்கிப் போற்றி

எழுந்தருளும் செய்தியைக் கேட்டு

செல்வம் பொருந்திய

திருச்செங்காட்டங்குடி எனும் பதியிலிருந்து

சிறுதொண்ட நாயனார் அங்கு சென்றார்

அன்பால் உருகும் மனதோடு

மகிழ்ச்சி மிகுந்து எதிர்கொண்டார்

தமது பதிக்குள் அழைத்துக் கொண்டு போனார்.

2365.

எட்டுத்திக்கிலும்

சிறப்பை நிறுவும் தொண்டரான சிறுத்தொண்டருடனும்

எல்லாபோகமும் வெறுத்துத் துறந்து

பிச்சை ஏற்று

உண்டி ஏற்கும் மெய்த்தொண்டர்களுடனும்

நீலகண்டத்தைத் தாம் தாங்கி

தேவர்களை உய்யுமாறு கொண்ட இறைவரின்

கணபதீச்சரம் என்ற கோயிலை அடைந்தார் —

வேதப்பொருளை இசைப்பாடல்களாகப் பாடும்

வேதகீதரான சம்பந்தர்.

2366.

அங்கு

கோயிலைச் சார்ந்தார் வலம் வந்தார்

பாம்பணிந்த சிவனாரின் திருவடிக்கீழ் வீழ்ந்தார்

சிவந்த கண்ணிலிருந்து

அருவிகள் பொழிய

திருமுன்பு பணிந்தார்

எழுந்து செங்கை கூப்பினார்

தம்மை ஆண்ட இறைவரைத்

சிறுத்தொண்டநாயனார் தொழுமாறு வீற்றிருந்த

தன்மையைப் போற்றினார்

மேலும் மேலும் பொங்கி எழும் பதிகத்தைப் பாடிப்பரவி

அவரிடமிருந்து ஒருவாறாய் நீங்கி வெளியில் வந்தார்.

2367.

வெளியில் வந்து

மாமாத்திரர் மரபில் அவதரித்த

போர் ஏறு போன்ற சிறுத்தொண்டநாயனார் இல்லத்தில் புகுந்து

மாதவம் வாய்ந்த அவர் மனம் மகிழ்வுற

விரும்பி அங்கு தங்கியிருந்தார்

பின்

திரிபுரங்கள் எரித்தவரும்

திருமாலைக் காளையாகக் கொண்டவருமாகிய இறைவரின்

கணபதீச்சரம் பரவித்துதித்தார்

அன்பு மேலும் மேலும் அதிகரிக்க

ஏந்திய பூநூல் அணி மார்பர்

இன்பம் அடைந்து

அங்கு அன்பர்களுடன்

தங்கியிருந்த நாள்களில் —

2368.

‘‘திருமருகல்’’ எனும் நகரத்தில் எழுந்தருளி

பிறைச்சந்திரனுடன்

சிவந்த கண்களுடன் பாம்புடன்

தங்குவதற்கு இடமான நீண்ட சடையுடைய

மாணிக்க வண்ண நாதரின் கழல் வணங்கிப் போற்றினார்

உருகிய அன்புறு காதலால் உள்ளம் அலைந்து

தெள்ளிய இசை பெருகியது

தமிழ்மாலை சாத்தினார்

சீகாழித் தலைவர் அந்தப் பதியில் தங்கியிருந்தார்.

2369.

அத்தகைய ஒருநாளில்

வாணிகன் ஒருவன்

தன்னுடன் ஒரு கன்னிப்பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு

பொன்போன்ற மேருமலையை வில்லாகக் கொண்ட சிவனாரின்

அருகிலுள்ள ஒரு மாடத்தில் இரவு தங்கி உறங்கினான்

அப்போது

ஒளி பொருந்திய பற்களுடைய பாம்பு

அவனைத் தீண்டியதால்

நஞ்சின் வேகம் விரைவாய் தலையில் ஏற

தன் ஆவி நீங்கப்போகும் அவன் தன்மை கண்டு

இளம் கன்னி நிலை தளர்ந்து சோர்ந்தாள்.

2370.

வாள் போன்ற பாம்பு தீண்டிட

அவனை

மெய்த்தொட்டுத் தீண்டும் உரிமையிலாத (மணமாகாத) அப்பெண்

தனக்கு விடைதர யாருமின்றி

ஆண்சிங்கம் போன்ற அந்த வணிகனை நெருங்கினாள்.

பக்கத்தில் வீழ்ந்து

அசைந்து வீழ்ந்த மலர்க் கொம்பு போன்ற அவள்

அரற்றும் போது

வலிய இடியைப்போன்ற

பறவை மன்னான கருடன் போன்றவனுமான

மந்திரவாதிகள் எல்லா வகையிலும் தீர்க்க முயன்று முடியவில்லை

நீண்ட அந்த இரவு கழிந்தது

புலர்காலை வரையிலும் வாசமிகு மாலை சூடிய அப்பெண்

பெரிதும் தளர்ந்தாள்

அயர்ந்து புலம்பினாள்.

2371.

“அன்னையையும் அத்தனையும் பிரிந்து

உன்னையே அடைந்து உடன் வந்தேன்

பாம்பு தீண்டப்பெற்று உயிர் நீங்க

என்னை விட்டகன்றாய் யான் என் செய்வேன்

இத்துன்பம் தீர்க்கின்றவர் யாருமில்லை

நிலையான சிறப்புடைய வணிகர் குலமாமணியே

யானும் வாழமாட்டேன்” என அயர்ந்தாள் அப்பெண்

தனது மதியினாலே

தலையில் இளம்பிறை அணியும் இறைவர் கோயில்

வாயில் திசை நோக்கி கைகூப்பித் தொழுதாள்

வேறு செயல் ஒன்றுமில்லை

2372.

“அடியாரான தேவர்களின் கூட்டம்

முழுதும் உய்வதற்கு

பாற்கடல் வாய்நஞ்சை உண்டருளிய அமுதமே

செங்கண் கொண்ட நீண்ட திருமாலும்

நான்முகனும் காணாத கோலமே

நீலநிற விஷப்பாம்புகளை அணியாக அணிந்த நிமலா

வெந்து சாம்பல் பொடியான

காமனின் உயிரை அவன் மனைவி இரதி வேண்டிட

மீண்டும் உயிர் அளித்த புண்ணியனே

பூக்களின் மணம் மிக்க சோலைகளின்

பக்கமெங்கும் சூழ்ந்துள்ள

அழகுடைய திருமருகல் பெருமானே காப்பீர் என்றாள்”

மேலும் —

2373.

“உன்னிடம் வந்தடைந்த

சிறுமறையவனான

மார்க்கண்டேயர் உயிர் மீது சீறி வந்த இயமனின்

பெரிய நஞ்சின் வளையம் போன்ற

சிவந்த கரும் கண்ணையும்

வெண்மையான பற்களையும் கொண்ட

கரிய கோலம் சிதைந்து உருளுமாறு உதைத்து அருளிய

சிவந்த திருவடியே

இந்த நஞ்சின் கொடிய வேகம் நீங்கிப் போகுமாறும்

நான் துன்பக்குழி விட்டு மேலேறும்படியும்

அந்தி மதி வளருவதற்கு இடமான

சிவந்த சடை உடைய

அழகிய மருகல் சிவபெருமானே அருள்வாய்” என்றாள்

மேலும் —

2374.

இவ்விதமாக

சிவனருளையே சிந்தித்து ஏங்கினாள்

இளங்கொடிபோல துவளும் இடை ஏந்திய அம்மங்கையின்

துதித்த தன்மையின் ஓசை

எம் இறைவரான சீகாழி (சண்பை) ஆண்டகையார்

இறைவரைக் கும்பிடவருகின்றவரின்

மெய்த்தன்மை உடைய திருச்செவியில் சேர்ந்தது

திருவுள்ளத்தில் மிகுந்த கருணை கொண்டு

அன்னப்பறவை போன்று அயர்கின்றவள் அருகில்

மாதவம் புரியும் அடியார்கள் சூழ

எழுந்தருளி வந்தார்.

2375.

சிரபுரத்து மறையவரான (சம்பந்தர்) சென்று நின்றார்

சிவபெருமானின் அருளையே போற்றி

சிந்தை நைந்து துன்பம் கொள்ளும் அப்பெண் நோக்கி

“பயப்பட வேண்டாம் நீ

உன் துன்பமும் நன்மையும் பகர்க” என்றதும்

கரங்களாகிய மலர்களை

தலை உச்சி மீது குவித்து

கண்ணீர் கசிந்து அருவியெனப் பாய

சீகாழி வேதப்புரவலரின் சேவடிக்கீழ் வீழ்ந்தாள்

தாங்கள் அங்கு வந்த வரலாறு சொல்லத் தொடங்கினாள்.

2376.

வளம் கொழிக்கும் சோலை சூழ்ந்த

வைப்பூர் அரசன் “தாமன்” என் தந்தை

இவன் அவரது மருமகன்

என் தந்தைக்கு

இளம் பிடி போன்ற ஏழு பெண்மக்கள்

அவர்களில் மூத்தவளை

இவனுக்கு மணம் செய்வதென்று சொல்லி

இவனிடமிருந்து நிறைய பணம் பெற்றுக்கொண்டான்

ஆனால் அயலான் ஒருவனுக்கு

என்னைத்தவிர ஒருவர் பின் ஒருவராய் ஆறு பெண்களையும்

மணம் செய்து தந்துவிட்டான்

மனம் தளர்ந்து வருந்தும் இவனுக்காக

அன்பு பூண்டு அங்கு அவர்களை மறந்தேன்

இவனையே சார்ந்து வந்தேன்.

2377.

என்னுடன் வந்த இவனும்

ஒளியுடைய பாம்பு தீண்டி இறந்தான்

மடிந்து விழும் அலைகளுடைய கடல் நடுவில்

கப்பல் கவிழ்ந்து விழுந்ததுபோல கலங்கி நின்றேன்

என் சுற்றத்தார் போல எதிரில் தோன்றினீர்

என் துயரமெல்லாம் நீங்க அருள் செய்வீர் என்று கூறினாள்.

கற்றவர்கள் வணங்கித் துதிக்கும் சீகாழி வேந்தர்

கருணை மிகக் கொண்டு

அப்பெண்ணுக்கு பற்றிய பாம்பின் நஞ்சு நீங்குமாறு

வயல்கள் சூழ்ந்த

திருமருகல் இறைவரைப் பாடத் தொடங்கினார்.

2378.

சடையானை

எவ்வுயிர்க்கும் தாயானவனை

சங்கரனை

பிறைச்சந்திரன் தங்கும் முடியுடையவனை

காளையூர்தி உடையானை

வேதியனை

திருவெண்ணீறு அணிந்தவனை

தாமரை வாழ் நான்முகனும்

பாம்பணைத் துயிலும் திருமாலும்

துதிக்கின்றகோலத்தினை உடையானை

“உடையானே …

தகுமோ

இந்த ஒளி பொருந்திய அணி அணிந்த பெண்ணின் உள்ளம்

மெலிகின்ற துன்பம்” என எடுத்துப் பாடினார்.

2379.

உடனே

கொடிய நஞ்சு தீர்ந்து எழுந்து நின்றான்

சூழ்ந்திருந்த ஒப்பில்லாத திருத்தொண்டர் குழாம்

மிகுந்த ஆரவாரம் செய்தது

கைகளை உச்சி மீது குவித்துக்கொண்டு

அங்கு

அருளுடைய சீகாழிப்பிள்ளையாரின் திருவடியில் வீழ்ந்தாள் நங்கை

அப்பெண்ணை அன்பு செய்த நம்பியான அந்த வணிகனோடும்

இவ்வுலகில் இன்புற்று வாழும் வண்ணம்

மேகம் தவழும் சோலை மிகக் சூழ்ந்த புகலி (சீகாழி) வேந்தர்

மணம் புணர்கின்ற பெருவாழ்வை வகுத்துவிட்டார்.

2380.

அவ்வணிகனுக்கும் பெண்ணுக்கும் விடை கொடுத்தார்

சீகாழித் தலைவர் மருகல் நகரினில் தங்கியிருந்தார்

அந்நாளில் வலிமையான பாசம் அழித்த

புகழ் கொண்ட சிறுத்தொண்டநாயனார்

திருமருகல் நகரில் வேண்டிக் கொண்டார்

மீண்டும்

பிள்ளையார் திருச்செங்காட்டங்குடியில் எழுந்தருளினார்

மேலும் மேலும் தொடர்ந்து தொழுகின்ற

சூழ்ந்த அடியார்களை இறைவரின் அருள்பெற எண்ணி

ஒளி உடைய மழுப்படையை உடைய இறைவரின்

திருவடிகளைத் தொழ

ஒளியுடைய மழுப்படையை உடையவர் கழல் தொழ

திருக்கோயில் அடைந்தார் பிள்ளையார்.

2381.

கோயில் புகுந்தார்

இறை எதிர் நின்று இறைஞ்சினார் போற்றினார்

பொங்கு அலைத்திரை கங்கையும் பிறைச்சந்திரனும் சூடிய

சிவந்த முடிச்சடை கீரிடம் உடைய

திருவெண்ணீறார் திருமேனி

ஒரு பாகம் பசுமையாக நஞ்சு விளங்கும் கழுத்துடைய

இறைவரின் திருமருகல் கோயிலில்

பொருந்திய நிலையை மனதில் கொண்டு வணங்கினார்

அவர் முன்பு கையில் கனல் கொண்ட இறைவர்

கணபதீச்சரத்தில் மேவும் காட்சி தரும் பொருட்டு அருளக்கண்டார்.

2382.

திருமருகலில் அமர்ந்து நிறைந்த கோலத்தை

திருச்செங்காட்டங்குடியில் நிலை பெற்ற கணபதீச்சரத்தாரின்

பெருமையுடைய கோலமாகித் தோன்ற

உள்ளம் உருகியது காதலும் பொங்கியது

உலகினார்க்கு அறிவுறுத்தும் கருணை உணர்வு ஓங்க

கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் அருவிபோல் வடிந்து

“அங்கமும் வேதமும்” எனத் தொடங்கி பாடுபவராகி —

2383.

எதிரில் கண்டதும் போற்றினார்

அருள் வினவிய கருத்துப்படப் பாடினார்

காதலித்த அண்டர் பிரானை வணங்கினார்

அப்பதியில்

சில நாள்கள் போற்றித் தங்கியிருந்தார் துதித்தார்

தொண்டர்களுடன் அருள் பெற்று விடை பெற்றார்

அந்தத் தொன்மையான பதியின் எல்லை நீங்கினார் —

தாமரை பொய்கைகள் சூழ்ந்த வயல்களுடைய

பூம்புகலூரினைத் தொழுவதற்காக.

2384.

பெருமையால் பெருகிய

சிறப்புமிகு சிறுத்தொண்டர்

நட்போடு

தம்மோடு வர

நல்ல தேன் பொருந்திய மணமாலை கொண்ட பிள்ளையார்

விடை கொடுக்கப் பெற்றார்

தம் நகருக்குத் திரும்பினார்

கங்கை நீர் மலிந்த சடையனாரின் பதிகள் பலவும் பணிந்தார்

உலகில் பெருகி நிறைந்த செல்வம் மிக்க

திருப்புகலூர் நகரின் அருகில் சென்று சேர்ந்தார்.

2385.

திருப்புகலூரில் வாழ்கின்ற திருத்தொண்டர்களோடும்

செம்மையால் மிக்க முருகநாயனாரின்

மெய்யான விருப்பத்தோடும்

நகரின் வெளியே வந்து எதிர்கொள்ளப்பட்டார்

வேதமுதல்வரின் கோயில் எய்தினார்

மலை போன்ற கோபுரத்துள் உட்புகுந்து

அழகிய திருமுன்றிலின் பக்கம் வலமாக வந்து

ஒருப்பட்ட சிந்தையோடு சேர்ந்தார்–

ஓதாமல் வேதமெல்லாம் உணர்ந்த ஞானசம்பந்தர்.

2386.

கோவிலுள் புகுந்து

இறைவரின் திருமுன்பு விழுந்து எழுந்தார்

பூம்புகலூரில் நிலைத்த புண்ணியரை

சிவபெருமானை

நெக்குருகி

சிந்தையில் அன்பு பொங்க

மலர்க்கண்களில்

நிறைந்த நீர் அருவி வடிய

மிக்க தமிழ் தொடை மாலைத் திருப்பதிகம் சாத்தினார்

பாடிப் பொருந்தி வெளியே வந்தார்

திக்கெல்லாம் சிறப்புடைய முருக நாயனார் முன் செல்ல

அவரது திருமடத்தில்

சம்பந்தர் சென்று தங்கினார்.

2387.

அந்த மடத்தில்

அவரது வழிபாடும்

உபசரிக்கும் சிறப்பும் பெற்று தங்கியிருந்தநாளில்

மலையை வில்லாக வளைத்த இறைவர் மகிழ்ந்து எழுந்தருளும்

வர்த்தமானிச்சரம் வணங்கினார்

ஓங்கிய அன்பினால் முருகநாயனார் செய்யும்

உயர்ந்த தொண்டை சிறப்பித்துப் பாராட்டி

பண்புடைய வளமான தமிழ்ப்பதிகம் பாடி

சிவபெருமான் திருப்பாதம் பணிந்து இருந்தார்.

(‘வெங்கள் விம்மு’ எனும் பதிகம் திருப்புகலூரில் அருளினார்

‘பட்டம் பாடினீர்’ எனும் பதிகம் மானீச்சரத்தில் அருளினார்)

2388.

அந்தப் பதியில்

பிள்ளைப்பெருமான் தங்கியிருந்த நாட்களில்

திருநாவுக்கரசர் வந்திருந்து

புற்றிடம் கொண்ட இறைவரை வணங்கி

அழகிய மதில்களையுடைய திருவாரூரை புகழ்ந்து போற்றி

சிறிய இடையும்

பொன்னால் ஆன தொடியும் கொண்ட பார்வதி அம்மையாரை

ஒரு பாகம் கொண்ட இறைவர் வீற்றிருக்கும்

திருப்புகலூர் தொழுவதற்கு சிந்தை செய்தார்.

கொற்றவராகிய இறைவரின் அருள் பெற்ற தொண்டர்குழாத்துடன்

அவ்வூரை அடையுமாறு வந்தார்.

2389.

‘’நாவுக்கரசர் அந்தப் பதிக்கு வருகின்றார்’’ என்ற

திருவார்த்தையைக் கேட்டவுடன்

காளையூர்தியில் திகழும் சிவபெருமானின் மைந்தர் திருஞானசம்பந்தர்

தம் உள்ளத்தில் அன்பு பொங்கியதால்

காதல் மிகப்பெருக விரைந்து எதிர் கொள்ளும் பொருட்டு

மெய்யன்பர்களுடன்

மலர்களால் பொலிகின்ற வாவிகள் சூழ்ந்த

திருப்புகலூரின் எல்லையைக் கடந்து சென்றார்.

2390.

அங்கணராகிய சிவபெருமானை

திருவாரூரில் வணங்கி வந்த

திருநாவுக்கரசர் எதிர்வந்ததும்

பொங்கி மணம் கமழும் புகலி (சீகாழி) வந்த அந்தணர் சிங்கமும்

பெருமையுடன் தோன்ற

தங்களது அன்பின் முறைமையாலே

தாழ்ந்து வணங்கிக் கொண்டனர்

அவரவர் மங்கலம் பொருந்திய நல்வரவின்

மெய்மையான நிகழ்ச்சிகளை

வினவி மகிழ்ந்தனர்.

2391.

மெய்மையின் வடிவான திருஞானசம்பந்தர்

திருநாவுக்கரசரை நோக்கினார்

விருப்பத்துடன் வினவினார் அப்பரை

‘’தங்களை இங்கு அணையப்பெறும் பேரரருள் யாம் பெற்றோம்

அழகிய குளிர்ச்சியுடைய திருவாரூரினை

எவ்வாறு வணங்கி அருளினீர்’’ என வினவிட

எல்லையிலாப் பெருந்தவமுடைய நாவுக்கரசர்

செப்பினார் வண்டமிழ்மாலையாகிய திருப்பதிகத்தின் மூலமாக

திருவாரூரில் நிகழும் திருவாதிரைத் திருவிழா

நிகழும் செல்வத்தைச் சொன்னார்.

2392.

திருநாவரசர் அருளிச் செய்த வாய்மை கேட்டார்

அப்போதே அருள் ஞானம் உண்ட சிரபுரவேந்தர்

தென் திருவாரூர் வணங்குவதற்கு

சிந்தையில் விரவிய காதலால்

அங்கு சென்று போற்றி

மீண்டும் வந்து உம்முடன் மேவுவேன் என்று

வலிய கடலினை கல் மிதப்பால் கடந்து வந்த அரசுகளுக்கு உரைத்து

அவரது உடன்பாடு பெற்று விரைந்தார் ஞானசம்பந்தப் பெருமான்.

— இறையருளால் தொடரும்.
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்