கவிதைகள்

This entry is part of 32 in the series 20060407_Issue

அன்பாதவன்


இரண்டாம் தாய்

தேடிக் கொண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை
நதியில் திளைத்துக் குளிர்ந்த கூழாங்கல்லாய்
தண்ணென்ற பொழுதுகள் உன்னோடு கழிபவை
உரையாடலில்லா நாட்களோ மணல் சுடும் வெறுமை
பரிமாறலில் ஊறுகிற உற்சாக ஊற்று சட்டென வடியும்
மவுனம்கவிந்த பொழுதுகள்
மனக்குகையில் வரைந்த என் ஓவியங்களுக்கு
தேர்ந்த ரசிப்பை வழங்குமுன் விழிகள்
பாறையாயிருந்தேன்;
சிற்பமானேனுன் செதுக்கலில்
கைம்மாறுக்கு வாய்ப்பில்லா
கடன் பெற்ற நெஞ்சம்
உன் விசுவரூபத்தின் முன் வாமனனாய்
தேடிக் கொ ‘ண்டிருக்கிறேன் உன்னில்
தொலைந்துவிட்ட என்னை.


ஹைபுன்

ஏமாற்றங்களிலான சரளை நிறைந்த
என் பூமியில் மாற்றத்தை விதைத்த
முதல் மழைத்துளி நீ

பெருமழையாய்ப் பெய்த ப்ரியத்தில்
பூமி நனைந்தது
தன்னை இழந்தது;கவலை மறந்தது
இதமான உரையாடலில்
பதமானது பயிர் வளர்க்க

ஊடுபயிராய் நுழைந்து
பெரும்பயிராய் வளர்ந்த கதிரசைவில்
தீண்டும் மென்தென்றல்

பரிவு சுமந்த பனித்துளி வார்த்தைகள்
உள்நுழையும்போதெல்லாம் உளக்குளிர்ச்சி

என்னுள் பசுமை வளர்த்த
இயற்கையின் ரூபமே
வாடத வாழ்வை வரமாய்த் தா!

ஈர இதழ்கள்
உறிஞ்சிய சூரியன்
சிவந்த ரோஜா.


கவிதை

அரூபங்களின் தரிசனம்
இயலாதென்னால் அரூபமாய் உணர்வதை
படைப்பாக்கும் உயர்கலை

உன்னிலிருந்து எழும் தீயில் ஓவியம் தீட்ட
கிடைக்குமோ தூரிகை

மூச்சுக்காற்றின் ஆரோகண அவரோகணங்களை
கொஞ்சல் சிணுங்கல்களை
கொலுசொலியின் லயங்களை
இசைக்கோர்வை அமைக்க
இல்லையடியெனக்கு இசைஞானம்

விரல்கோத கலைந்தாடும் கூந்தலிழை நடனத்துக்கு
படிமங்கள் தேடுகிறேன்

முத்தம் பதித்த இதழ்களின் ஈரவடிவம்
எதன் குறியீடென்று
ஆராய்கிறேன் தனிமைகளில்

மடிசாய்ந்து கிறங்கிய விழிகளைப் படம்பிடிக்க
ஒளிக்கருவி உருவாகவேண்டுமினித்தான்

இதழ்கவ்வும் தருணங்களில் கசியும்
கேவல் விம்மல்களுக்கு
இசையாகும் வாய்ப்புமுண்டு

சாத்தியம்தான் இவையனைத்துங்கூட
விடைபெறும்போது வெளியிடும்
ஆழ்ந்த பெருமூச்சு சுமந்த
கனத்த மவுனத்தை மொழிபெயர்க்க
திரிந்தலைகிறேன்
உலக மொழிகளின் காடுகளுள்.
—-
anbaadhavan1963@gmail.com

Series Navigation