கவிதைகள்

This entry is part of 32 in the series 20060407_Issue

பெருந்தேவி


கடைத்தெருவில் குட்டிச்சீதை

குரங்குப்படைகளும் சீதையும் லட்சுமணனும்
இல்லாமல்
தகர வில்லோடு
ராமன் வேஷமிட்ட குழந்தையைப்
பார்த்தேன் ஒருநாள்
கடைத்தெருவில்.
நீலநிறத்துக்கும்
அட்டைக் கங்கணத்துக்குமிடையே
சொறிந்துகொண்டிருந்தவனுக்கு
காசு கொடுத்துவிட்டு
சீதையைப் பற்றிக் கேட்டேன்.
அம்மாவோடு முறுக்கு சுற்றிக்கொண்டிருப்பதாகச்
சொன்னான் அவன்.
அதே வழியில் அடுத்த நாள்
சீதை வேஷமும்
அனுமானும் எதிரே.
மட்கிய பாவாடை கமகமத்தவளிடம்
ராமன் எங்கே என்றேன்.
இஸ்கோலுக்குப் போய்விட்டானாம்.
ராவணனை விசாரித்ததும்
தெரியலை
என்றுவிட்டு நகர்ந்தாள்.
அனுமான் அப்போது
குச்சிமிட்டாய் வாங்கிக்கொண்டிருந்தது.
சீதை இலங்கையை மறந்தே விட்டாளா
அல்லது
ராவணன் அவர்கள் கதைக்குள்
இன்னும் நுழையவே யில்லையா
என்று விசாரித்தறிய
வாடா உறுதியோடிருந்தும்
ராவணக் குழந்தையை
இன்றுவரை நான்
பார்க்கவேயில்லை.


கண்

எப்போதும்
நேர்
கோணத்தில்
பார்க்க
சச்சதுரமாக
ஏன்
செவ்வகமாகவேனும்
இருந்திருக்கலாம்.


sperundevi@yahoo.com

Series Navigation