கவிதை

This entry is part of 46 in the series 20060331_Issue

க்ருஷாங்கினி


முத்தமும் மூத்திரமும்
உந்துதல் ஏற்படவேண்டும்
சிறிது சிறிதாக அதிகரித்து
வேறுவழியின்றி வெளிப்படலாம்;
ஆரம்பத்திலேயே கூட செயலாக்கம்
எந்த ஜாதிக்கும் மதத்திற்கும் உண்டு;
பொருளாதார ஏற்றதாழ்வு இதற்கு இல்லை
உந்துதல் முக்கியம்
காலமும் நேரமும் காலையோ,
மாலையோ இரண்டுமிணையும்
சங்கமமோ-
வேண்டும் உந்துதல்!
உள் அறையோ அல்லது
சிறு வெளியிலோ பரந்து
விரிந்த பெரும் மைதானமோ
ஆட்கள் அற்றோ
நிறைந்து நின்றோ
இளமை, நடுவயது
ஏதென்றாலும் முதுமையிலும்
தேவை உந்துதல்;
முத்தத்திற்கு எதிராளியும் அவசியம்
எங்கும் எப்போதும் முத்தமிடலாம்,
முன் சொன்னபடி உந்துதலில்.
மற்ற பல நாடுகளில்
முத்தத்திற்குண்டு
மூத்திரத்துக்கில்லை அனுமதி
பொதுஇடத்தில்;
இங்கோ
முத்தத்திற்கில்லை
மூத்திரத்திற்குண்டு அனுமதி
எங்கும் என்றும், எப்போதும்.
—-

Series Navigation