பெரியபுராணம் — 78 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

பா. சத்தியமோகன்


2145.

இனிய இசை கூடிய வண்டமிழ்பாடி ஏத்தினார்

நல் பழையுடைய அத்தலத்தில் உள்ளோர் விரும்பியதால்

அங்கு தங்கியிருந்தார்

பிறகு

வெண்பிறை அணிந்த சடை கொண்ட பிஞ்ஞகர் நிலைபெற்ற

திருப்பனந்தாள் சென்று வணங்கினார்.

(“நூலடைந்த” எனத்தொடங்கும் பதிகம் திருசேய்நலூரில் பாடப்பட்டது)

2146.

திருப்பனந்தாளில் சொல்மலர்மாலை சாத்தினார் பிறகு

அவ்வூர் அருகிலுள்ள திருபந்தணநல்லூர் பணிந்து பாடி

தீமை தீர்க்கும் பெருமறை பயிலும் செம்மையான அந்தணர் விளங்குகின்ற

ஓமாம்புலியூர் வந்து சேர்ந்தார் சீகாழித் தலைவர்.

( “இடறினார் கூற்றை” எனத் தொடங்கும் பதிகம்

பாடப்பட்ட தலம் பந்தணநல்லூர்)

2147.

ஓமாம்புலியூரின் வடக்கிலுள்ள தளியில் மேவிய

அற்புதரான சிவபெருமானின் அடிபணிந்து

என்றும் விளங்கும் செந்தமிழால் ஆன

திருப்பதிகம் பாடி அங்கிருந்து அகன்றார்

அழகிய பதியான திருவாழ்கொளி புத்தூர் புகுந்தார்.

(தளி- கோவில்)

2148.

சிறப்பு ஓங்கும் கோவிலை அடைந்து

தேன்மலர் பொருந்திய கருங்கவளை மலர் போன்ற கரிய நிறம் பெற்ற

இறைவரின் திருவடிகள் வணங்கிக் கண்டு

உலகம் புகழும் பதிகங்கள் பாடி அருளிய பிள்ளையார்

புகழ் நிறைந்த திருக்கடம்பூரையும் வணங்கினார் வாழ்ந்தார்.

(“பொடியுடைய மார்பினர்” எனத் தொடங்கும் பதிகம்

திருவாழ்கொளிப்புத்தூரில் பாடப்பெற்றது.

“வானமர்திங்கள்” எனும் பதிகம் திருக்கடம்பூரில் பாடப்பட்டது)

2149.

நம்பரை நலம் விளங்கும் நாரையூரினில்

கும்பிடும் விருப்பத்தோடு

தொகையாகச் சேர்ந்த சிவமணம் கமழும் மாலைகள் பாடி நின்று

எம் தலைவரான கவுணியர் தலைவர் ஏத்தி வணங்கினார்.

2150.

அப்பதி வணங்கி பணிந்து

அரிய தமிழான பதிகத்தமிழ் புனைந்து

தம் மெய்யான விருப்பத்தோடு தங்கியிருந்த நாட்களில்

இறைவரின் அழகிய கோவில்கள் பலவும் பணிந்து சென்றார்

பையையுடைய பாம்பைச் சூடிய

கருப்பறியலூர் வந்து சேர்ந்தார்.

(“காம்பினை வென்ற” எனத் தொடங்கும் பதிகம் நாரையூரில் பாடினார்)

2151.

பரமர் வீற்றிருக்கும் திருக்கருப்பறியலூரினை

சீகாழித் தலைவர் கைதொழுது

செந்தமிழ் உரை இசை பாடினார்

தேவர்களும் தொழுகின்ற பிற தலங்களும்

தொழுது பாடினார்.

(“சுற்றமொடு பற்றவை’’ எனத் தொடங்கும்

பதிகம் திருக்கருப்பறியலூரில் பாடப்பட்டது)

2152.

மண்ணுலகு செய்த தவப்பயனாய் உள்ள

வள்ளலார் ஆகிய பிள்ளையார்

அப்பதிகள் வணங்கி அப்பால் சென்றார்

அளவற்ற முரசுகள் எழுந்து ஒலிக்கின்ற

எக்காளங்களும் சின்னங்களும் ஊதப்படுகின்றன

கணுக்கள் வளரும் மென் கரும்புகள் நெருங்கிய

கதிர்களுடைய செந்நெல்

வாழைகள் கமுகுகள் ஒருங்கே ஓங்கி வளர்கின்ற

திருப்பிரம்மாபுரம் என்ற சீகாழி நோக்கிச் செல்லும்போது-

2153.

தமது இடத்திற்குப் பிள்ளையார் எழுந்தருளப்போகும் செய்தி கேட்டதும்

செல்வம் பொருந்திய பிரம்மாபுரம் வாழ் அந்தணர்கள்

பெருகிய காதலுடன் உள்ளம் மகிழ்ந்து சிறந்தோங்க

திருத்தோணியில் எழுந்தருளிய பெரியநாயகியாரை

ஒரு பாகத்தில் கொண்ட

இறைவரின் திருவடிகளை வணங்கினார்

உவகை பொங்க

வெள்ளமென வேதங்கள் ஒலித்துப் பெருகும் திருவீதிகள் தோறும்

மகரதோரணங்கள், வாழை, பாக்கு தெள்ளிய நீர் நிறைந்த குடங்கள்

விளக்குகள் , தூபம் செழும் கொடிகள் எனும் இவற்றை

வரிசையாய் அமைத்து வரவேற்கும் சிறப்புகளைச் செய்து-

2154.

அவ்வூரினர்-

வேதங்கள் இனிய ஒலி எழுந்து பொங்குவதையும்

அரச இலையும் தருப்பையும் இட்டு அலங்கரித்த பூரண கும்பங்களையும்

நிறைந்த கரகங்கள் ஏந்தி வருவோரையும்

புதிய மலர்களையும் ,

மணம் வீசும் சாந்திகளையும் பொரியையும் தூவி

வருவோரையும் கண்டனர்

கச்சு பொருந்திய முலை உமையாள் தந்த

குழைத்த செம்பொன் வள்ளத்தில்

அமுது உண்ட வள்ளலாரான பிள்ளையாரை

சிறந்த முத்துச் சிவிகை மீது

செழுமையான முத்துக்குடையின் கீழ்கண்டனர்.

(வள்ளம்- கிண்ணம்)

2155.

பிள்ளையாரைக் கண்டபொழுதினிலேயே

தலைமேல் கைகள் குவித்து கண்களிக்க மனம் களிக்க

காதல் பொங்கிய தொண்டர்களும் அந்தணர்களும் சென்று

சூழ்ந்து கொண்டனர்

சொல்லைக்கடந்த மகிழ்ச்சியால் துதித்த ஓசையினால்

எட்டுத் திசையும் நிறைந்து விட்டது

தம் ஆடைகளை வீசி வானையே மூடிவிட்டனர்

மேலும் மேலும் பெரும்புகழுடைய

ஆளுடைய தமிழ்த்தலைவரான பிள்ளையாரும்

சிவிகையினிறு இறங்கி

அவர்கள் எதிரே போய் வணங்கி

அவர்களுடன் கூடி மகிழ்ந்து நகரத்துள் புகுந்தார்.

2156.

சந்திரனை அணியுமளவு உயர்ந்த

திரு மாளிகைகள் நிறைந்த வீதி சென்று அணைந்து

கடவுள் தன்மை கொண்ட

வேதவழி வந்த கற்புடைய மாதர்

மங்கல வாழ்த்தினை இரு பக்கங்களிலும் நிறைய முழக்கினர்

வானவர் நாயகரான சிவபெருமானின் கோவில் அருகே சென்று

பெரிய நிலை கோபுரத்தை இறைஞ்சி வலம் வந்து

திருக்கோவிலுள் புகுந்தார்

திருத்தோணியில் எழுந்தருளிய

இறைவரின் திருமுன்பு தாழ்ந்து எழுந்து நின்று

தமிழ்வேதமான பதிகத்தைப் பாடினார்.

2157.

பரவிப்பாடினார் திருப்பதிக இசையை!

பெரும் கருணை செய்த பரம்பொருளின்

திருவருள் பரிசைப் போற்றினார்

பொருந்திய மலர்க்கண்கள் பனித்தன

கைகள் கூப்பி வீழ்ந்தார் எழுந்தார்

புறம் போந்தார்

வேத வாய்மை விளங்கும்

பிரம்மபுரத்துப் பிள்ளையார் செல்லும்போது

திருநீலகண்ட யாழ்ப்பாணர் பின்னே வந்தார்

அவரை

வளம் பெருகும் அவரது மனைக்கு போக அருள் செய்து

தனது திரு மாளிகையின் அருகில் வந்தார்.

2158.

மறை ஓதும் வேதியர்கள் அடிபோற்ற

தந்தையும் அருகில் அணைய

தம் திருமாளிகையை அடையும்போது

நிறைகுடமும் மணி விளக்கும் ஏந்தி

நீதி மறைக்குலமகளிர் நிற்க

சிவபெருமானின் திருநீற்றுக்காப்பை ஏந்தி முன்னே வந்து

ஞானசம்பந்தரின் தாயார் பணிந்து பாராட்ட

முறைமைப்படி அவரவர்க்கு அருள் செய்து

முதல்வரிடம் மணி முத்துச்சிவிகை பெற்ற பிள்ளையார்

திருமடம் புகுந்தார்.

(முதல்வர்- சிவபெருமான்)

2159.

நெடிய செல்வம் பெருகும் தம் திருமாளிகையில் அமர்ந்து

ஒவ்வொரு நாளும்

திருத்தோணியில் எழுந்தருளிய இறைவரைச் சென்று தாழ்ந்து

பொருந்திய திருப்பதிகங்கள் பலவும் பாடினார்

மனம் மகிழ்ந்து போற்றி இசைத்து வாழும் நாட்களில்

விரைவாக முறைப்படிச் சேரும் உபநயனப் பருவம் எய்த

உலகம் கடந்த சிவஞானம் உணரப் பெற்ற பிள்ளையாருக்கு

உபநயனத்துக்குரிய தொன்மையான வேதவிதிக்கான சடங்குகளை

அந்தணர்கள் செய்ய

தேவர்கள் போற்றும்படி தோலுடன் நூலையும் தாங்கினார்.

( தோலோடு நூல் – இரண்டு அங்குலமாய் பூணூல்

அளவில் அமையச்செய்த கருமான் தோல் )

2160.

எந்த ஒரு பிறப்பும் இனி எய்தாத இயல்புடைய பிள்ளையார்

உலகத்து இயல்புப்படி

உபநயன முறையால் இரு பிறப்பின் நிலையைச்

சடங்குகளால் காட்டி அடையச் செய்யும் அந்தணர்கள்

எதிரில் நின்று வழிவழியே வரும்தரும் தன்மையில்

நான்கு வேதங்களையும் தந்தோம் என்று

உரிய மந்திரங்கள் மொழிந்தவர்க்கு

தமது இனிய வாக்கினால்

சீகாழியில் அவதரித்த புண்ணிய வடிவான பிள்ளையார்

ஒப்பற்ற நிலையில் எண்ணற்ற புனித வேதங்களையும் ஓதினார்.

2161.

சுருதி ஆயிரம் ஒதியதுடன்

அவற்றின் அங்கமான பழைய கலைகளையும் எடுத்துக் கூறிய

பெருமை வாய்ந்த பிள்ளையாரை

ஆயிரம் கோடிக் கதிரவர்கள் ஒருங்கேகூடி விரிந்ததுபோல்

பரஞ்சோதியினது திருவருளைப் பெற்ற

பான்மையின் மேன்மை எண்ணி

ஆதரவோடும் வியப்போடும்

கவுணியர் பெருமானான பிள்ளையாரை

“தங்கள் கண்முன் வெளிப்படவரும் தியானப்பொருள்”

என இறைஞ்சி

தம்முன் கொண்ட மறைகளில்

ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டுத் தெளிந்தனர்.

2162.

ஞானசம்பந்தப்பிள்ளையார்

வேதமந்திரங்களான எல்லாம் அருளினார்

வேதத்தில் விதித்த

வேள்விச் சடங்குகளில் வந்த

சிந்தை மயக்கும் சந்தேகம் யாவும் தெளியும்படி

செழுமையான மறைகூறும் அந்த அந்தணர்களுக்கும் அருளினார்

அவர்களின் மனம் தெளியும்படியாக

பழைய –

முதன்மை பெற்ற –

மந்திரங்கள் யாவும் தோன்றக்காரணம் சிவபெருமானின்

அஞ்செழுத்தே என உபதேசித்தார்

அந்தியில் ஓதும் மந்திரம் அஞ்செழுத்தே என வருகின்ற

திருப்பஞ்சாட்சரப் (அஞ்செழுத்து) பதிகம் பாடினார்.

(இங்கு பாடியது “துஞ்சலும் துஞ்ச” எனத் தொடங்கும் பதிகம்)

2163.

அத்தன்மையுடைய பதிகத்தைப் பிள்ளையார் அருளிச் செய்தார்

அந்தணர்கள் அந்த அருளிப் பாட்டினை

தலைமேல் தாங்கி வணங்கித் தாழ்ந்தனர்

சித்தம் மகிழ பிள்ளையாரும்

திருத்தோணியில் அமர்ந்த இறைவரைச் சென்று பணிந்தார்

உண்மையுடைய இசையுடன் கூடிய திருப்பதிகங்களால் போற்றினார்

மணம் கமழும் மலர் போன்ற திருவடிகளை உள்ளத்தில் வைத்து

மீண்டு வெளியே வந்து

அடியார்களுடன் இனிதாய் அமரும் பண்பு கூடுமாறு

இறைவரின் திருவடிகளைப் பணிந்து போற்றும் அந்நாளில்-

2164.

பந்தினைப் பழகிய மெல்விரலாள் ஆகிய உமையும் பரமரும்

காளையூர்தி மீது வந்து

பொன்வளத்தில் அளித்த

எல்லையில்லாத ஞான அமுது உண்ட

செந்தமிழ் ஞானசம்பந்தரது திறங்கள் கேள்விப்பட்டு

அந்தணர்கள் சிறப்புடன் இருக்கும்

சீகாழிப் பதிக்கு வந்தார் நாவுக்கரசர்.

2165.

பேராற்றலையுடைய சொல்மன்னர் வந்துள்ளார் என்பதைக் கேட்டு

நீர்ப்பூக்கள் மணம் கமழும் பொய்கைகள் சூழ்ந்த

சீகாழியில் வந்தருளிய பெருந்தகையாரும்

இது முன்பு ஆக்கிய நல்வினையின் பேறு என்றார்

அன்பர்கள்

குழாத்தோடு கூடி

அவரை வரவேற்கும் பெருவிருப்போடு

எதிர்கொண்டு வரவேற்கச் சென்றபோது-

2166.

சிந்தையில் இடையறாது பெருகும் அன்புடன்

திருமேனியில்

அசைவுடன் அணியும் கந்தையும் மிகையே எனும்கருத்துடன்

கையில் உழவாரப் படையுடன்

பெருகி வழிகின்ற கண்ணீர் மழையுடன்

திருமேனியில் பொலிகின்ற திருநீறுடன்

அந்தமிலாத திருவேடத்தை உடைய திருநாவுக்கரசர் எதிரே வந்தார்.

2167.

அவ்விதம் அவர் வருவதைக் கண்ட

கவுணியக் கன்றான ஞானசம்பந்தர்

உள்ளத்தில் பரவிய மெய்க்காதலுடன்

“தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது” என்று தொழுதார்.

தேவர்களும் துதிக்கும்படி அங்கு வந்து சேர்ந்தார்

அக்கணம் நாவுக்கரசரும் எதிரே வந்து இறைஞ்ச

ஆர்வம் பெருக்கெடுக்க

அவருக்கு இனிய மொழிகளை அருள் செய்தார்.

2168.

மிகுந்த புகழையுடைய நாவுக்கரசை

பிள்ளையாராகிய ஞானசம்பந்தர்

உடன் சென்று வரவேற்கச்செல்வதற்காக —

காளையூர்தி கொண்ட இறைவரின்

திருத்தோணி என்ற அழகிய கோவிலுள் புகும்போது

ஆர்வம் மிகுந்து

அவருடன் வருகின்ற திருநாவுக்கரசை

தம்முடன் அழைத்துக் கொண்டு தன் திருமாளிகைக்குச் சென்றார்.

2169.

சேரும் திருத்தொண்டர்களுடன்

ஆளுடைய திருநாவுக்கரசுக்கும்

ஒப்பிலாத உணவால் ஆக்குவித்து உண்ணச் சொல்லி

பொருந்தியதால் பெருகிய அன்பும் நட்பும்

மேலும் அதிகரித்த காதலால் வணங்கி

பொங்கிய காதலினால் கும்பிட்டு

உணர்ச்சியால் கண்டு செல்லும்

திருப்பதிகங்களைப் பாடி மகிழ்ச்சி பொருந்தி உடன் இருந்தார்.

2170.

அவ்விதமாக சிலநாட்கள் சென்றன

பிறகு

அருள் மிக்க திருநாவுக்கரசர்

மின் போன்ற சடையுடைய அண்ணல் சிவனாரின் தலங்களை

எங்கும் கும்பிட விரும்பி

பொன்மார்பில் முப்புரி நூல் புனைந்த புகலியின் தலைவரான

ஞானசம்பந்தரின் சம்மதத்தோடு

பின்பு வந்து கூடும்படி நினைத்து வணங்கினார்

பிரிய இயலாத நட்புரிமையோடு பிரிந்து சென்றார்.

2171.

வாக்கின் தனி மன்னர் நாவுக்கரசர் செல்ல

மாறுபாடில்லா திருவுள்ளத்தோடு

மலர்கள் மணம் கமழும் வயல்கள் சூழ் புகலியில்

மீண்டும் புகுந்து

நிறைந்த பெரிய வேதங்களின் மிகுதி வடிவாக

திருத்தோணியில் வீற்றிருக்கும் தோணியப்பரைத்

தூக்குடைய இனிய தமிழ்மாலைகள் பாடி

பாடி தொழுது அங்கு இருந்து வரும் நாட்களில்-

2172.

விகற்ப செய்யுட்களால் ஆன செந்தமிழ் மாலைகளால்

திருமொழி நானூறு என்ற பதிகமும்

சொல் சீர் மாற்றி வந்த திருமாலை மாற்றுப் பதிகமும்

எல்லா அடிகளிலும் எல்லாச் சீர்களும் மடங்கி வருகின்ற

இயமகமாகிய திரு ஏகபாதபதிகமும்

தமிழில் சிறந்த ‘’இருக்குக்குறள்’’ என்ற பதிகமும் சாத்தியதுடன்

“எழு கூற்றிருக்கை”- “ஈரடி” மற்றும் “ஈரடிமேல் வைப்பு” ஆகிய

பதிகங்களையும் எம் தந்தைக்குச் சாற்றினார்.

2173.

“நாவடி மேல் வைப்பு” என்ற திருப்பதிகமும்

மேன்மையுடைய நடையில் “திருவிராகம்” என்ற பதிகங்களும்

சால்பு கொண்ட “திருச்சக்கரமாற்று” முதலிய பதிகங்களும்

இவை-

மூல இலக்கியமாக உலகுக்கு வழிகாட்டுமாறு

அனைத்துப் பொருள்கோள்களும் நிரம்பும்படி

உலகில் உயரும் சீகாழி இறைவரைத்

திருஞானசம்பந்தர் பாடி அருளினார்.

2174.

இனிய இசையில் ஞானசம்பந்தர் பாடின எல்லாமும்

பெரும் யாழ்ப்பாணராலும்

பொருந்திய இசைக்கே வடிவு எடுத்தது போன்ற சூளாமணியாராலும்

போற்றப்படும் ஏழிசைகளைப் பற்றிப் பாடப்பட்டன

பொன்தாளம் பெற்ற சீகாழிப் பிள்ளையார்

திருப்பதிகங்கள் பாடி

இறைவரைத் துதித்துத் தங்கியிருந்தார்.

2175.

அத்தலத்தில் விருப்பத்துடன் எழுந்தருளியிருக்கும் நாட்களில்

“அரிய தமிழ்நாட்டிலும் மற்றுமுள்ள நாடுகளிலும்

திங்கள் அணிந்த சடையுடைய சிவபெருமானின்

திருத்தலங்கள் யாவையும் கும்பிட்டு

எங்கும் தமிழ் மாலை பாடித் துதித்து

இங்கு வந்து சேர்வேன்” எனப்

பெருமையுடைய தம் தந்தையார் சிவபாத இருதயருக்கும்

தவ முனிவர்களுக்கும் கூறினார்.

-இறையருளால் தொடரும்

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்