மனிதம்

This entry is part [part not set] of 32 in the series 20060210_Issue

காசிகணேசன் ரங்கநாதன்.


1.

மனிதம் மனிதம் மனிதம் என்று
மனிதன் காக்கும் மனிதர்காள்!

மிருகம் காக்கும் காப்பிலும்
மனிதம் உண்டு அறிகுமே!

வானமீதில் தாவிப்பறக்கும்
வண்ணப்பறவை தன்னிலும்,
பூமிதன்னில் ஊருகின்ற
நத்தை புழுக்கள் தன்னிலும்,
நாய் நரிகள் தன்னிலும்,
அணில் குரங்கு தன்னிலும்,
வலிகள் உண்டு அறிகுமே!
வலிகள் உண்டு அறிகுமே!

2.

கண்டேன் கண்டறியாதன கண்டேன்!
கொண்டேன் பெருங்கவலை கொண்டேன்!

ஓங்கி வளர்ந்ததோர் நகரத்திடை மருங்கினில்
செயற்கைக் கானத்தே,

உழைத்துக் களைத்ததோர் கழுதை ஊர்ந்து
நகர்தல் கண்டேன்.

கண்டேனதன் தோளும் விலாவும் துவண்டுபோய்
வீழ்தல் கண்டேன்.

வெந்த முகத்தோடு கண் அவிந்து சருகுகளைக்
குச்சிகளை கற்களை உணவென்றே கருதி
சகஜமாய் உண்ணக்கண்டேன். (கண்டேன்..)

வனத்தின்று வெளிப்போந்த போழ்திலே
வீங்கிய முகத்தொடொருநாய் அழுகிய உணவினை
முகர்ந்து நகர்தல் கண்டேன்.

விபத்தில் சிக்கிய மனிதனின் வீங்கிய முகத்தின்மேல்
ஆயிரம் கேமராக்கள் மின்னுதல் கண்டேன். (கண்டேன்..)

3.

கண்டேன் கழிப்பறைகள் கண்டேன்!
கழிவுகளால் நிரம்பியிருக்கக் கண்டேன்.

இது அல்ல.. இது அல்ல..
என்று ஒதுக்கியபின் கடைசிக்
கழிப்பறையும் கழிவாய்… (கண்டேன்..)

கழிந்தன என் கழிவுகள்…
கழிப்பறையின் கழிவுகளோ கழியாமல். (கண்டேன்..)
—-
ranganath73@yahoo.co.uk

Series Navigation

காசிகணேசன் ரங்கநாதன்

காசிகணேசன் ரங்கநாதன்