இன்று சொல்லிச் சென்றது

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

பாலு மணிமாறன்


அந்தச்சுவர்கள் உன்னிடம் சொல்லியதான சேதிகளை
நீ சொல்லும் போதெல்லாம் ஆச்சரியத்தோடு
கேட்டிருந்தன செவிகள்

நான் அலுவலகத்தில் அடைபட்டிருந்த காலங்களில் சூரியன்
உனக்கு வெளிச்ச கவிதை வாசித்ததைச் சொன்னாய். பின்
நவீனத்துவ வாசத்தோடு, அது பிரமிப்பாய் இருந்தது

பள்ளி முடிந்த பிள்ளைகள் மெக்டொனல்ஸ் மடிகளில்
பேசிய கதைகளை நீ மறுவாசிப்பு செய்தபோது அதிலிருந்த
பெரியமனிதத்தனம் பற்றி வருத்தமிருந்தாலும் ரசிக்க
முடிந்தது

எல்லோரும் வந்து சென்ற பின்னும், நான் வருவேனென்ற
நம்பிக்கையிலிருந்த சனிக்கிழமை சீனிவாசபெருமாளின்
ஏமாற்றத்தைச் சொன்னாய். கடைசி நேர மீட்டிங்கில்
காலம் தாழ்த்தியது பெருமாள் அறியாத
ஃபிரென்சுக்காரன்.

காரணங்கள் சொல்வது தப்புவதற்கல்ல; காரணங்களால்
சில தவறிவிடுவதைச் சொல்வதற்குத்தான். இதுவரை நீ
பேசியது எனக்கு புரிந்ததாய் நினைத்திருந்தேன்.புரியவில்லை
என நீ புரிய வைத்தாய். இதோ, இப்போது நான் மெல்ல
மெல்ல இரவுக்குள் செல்கிறேன்

என்னை விட்டுச்செல்லும் உன்னிடம் எடுத்துச் சொல்ல
காலத்தின் நாளை நம் வசமில்லை. இன்னும் உன்னைக்
கூடுதலாகப் புரிந்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு மட்டுமே
கூட வருகிறது

இன்றைய தினமே, இன்றே உனக்கு விடை தருகிறேன்,
காரணங்கள் அற்றவனாக நாளையை நாளை சந்திக்க,
உறக்கத்துள் கொஞ்சம் கொஞ்சமாய் உதிர்ந்து
விழுகிறேன்
—-
paalumani@gmail.com

Series Navigation

பாலு மணிமாறன்

பாலு மணிமாறன்