கீதாஞ்சலி (59) மனமில்லாத யாசகன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


யாசகம் வாங்கச் சென்றேன்,
வாசல் வாசலாக,
ஊர்ப்புறச் சந்துகள் வழியே!
தூரத்தில் தெரிந்தது,
தகதகவென உனது தங்க ரதம்,
பகட்டும்,
கனவுக் காட்சி போல்!
வேந்தருக் கெல்லாம் வேந்தனாய்
விஜயம் செய்பவன்,
யாரென விந்தையுடன்
ஆராய்ந்து பார்த்தேன்!
காட்சியில் மூழ்கி,
துயர்ப்பட்ட
நாட்கள் எல்லாம் கழிந்தன வென்று
நம்பிக்கை பெருகிய தெனக்கு!
கேளாமலே
பிச்சை உண்டி கிடைக்குமென
இச்சையுடன் காத்து நின்றேன்!
எப்புறம் நோக்கினும் தெரு மண்ணில்
அற்புதக் களஞ்சியம்
சிதறிக் கிடக்கு மென்று
இதயம் சிந்திக்கும்!

உன் தேர் வந்து நின்றது,
நான் நிற்கு மிடத்தில்!
எந்தன் மேல் விழுந்தது,
உந்தன்
பரிவுக்கண் பார்வை!
புன்னகை மலர நீ
என்னை நோக்கி வந்தாய்!
அதிர்ஷ்ட தேவதை இறுதியில்
என்னை
அணைத்து விட்டதாய்ப்
பூரித்துப் போனேன்!
ஆயினும் நீயோ சட்டென,
அருகில் வந்து
வலது கையை நீட்டி,
‘வாரி வழங்கிட நீ எனக்கென்ன
வைத்திருக்கிறாய் ? ‘
என்று
வாய் திறந்து கேட்டாய்!
குழம்பி விட்ட தென் மனம்!
திகைத்து நின்றேன்!

அந்தோ! வேந்த னாகிய நீ,
விந்தையுடன் வெறுங்கை நீட்டிப்
பிச்சைக் காரனிடம்,
யாசகம் கேட்கும்
நகைப்புத் தனத்தை என்ன வென்பேன்!
கையை விட்டு மெதுவாய்
பையில்
நொய்ந்து கிடக்கும்
சோளப் பொரியில் சிறியதாய்க்
கொஞ்சம்
எடுத்துக் கொடுத்தேன் உனக்கு!
பொழுது சாய்ந்து போனதும்,
பையைக்
குப்புறக் கொட்டும் போது,
திக்கென அடித்தது நெஞ்சில்!
குவியலில்
குன்றிமணிப் பொன் துணுக்கு
ஒன்று மின்னியது
பளிச்சென!
அழுகை வந்த தெனக்கு! அந்தோ
முழுமையாய் உனக்கு
கைவசப் பொருள் அனைத்தும்
களிப்போ டளிக்கும்,
மனமின்றிப் போனதே யாசகன்
எனக்கு!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 23, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா