பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

பா. சத்தியமோகன்


திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

2021.

முத்தமிழ் வல்லவரான ஞானசம்பந்தர்

முதல்வரான சிவபெருமானின் திருக்கோபுரத்தின் முன்

சித்தம் நெகிழ்ந்த மகிழ்ச்சியோடு சென்று தாழ்ந்து உள்புகுந்து

பக்தரான அடியார்கள் சூழ

பரமர் கோவிலை வலம் வந்து

நித்தனாரான இறைவரின் முன்பு சென்று

நிலத்தில் பொருந்துமாறு தொழுது வீழ்ந்தார்.

2022.

மெய்ப்பொருள் ஆன இறைவரை

திருவெண்காட்டில் வீற்று இருப்பவரை

செப்புவதற்கு அரிதான “கண்காட்டு நுதலானும்” எனும்

பதிக மாலையாய்ச் சேர்த்தார்.

முப்புரம் எரித்த இறைவரது திருவடிகள் சேரும்

மூன்று குளங்களையும் பதிகத்துடன் பாடி

ஒப்பிட முடியாத ஞானம் உண்டவரான ஞானசம்பந்தர்

உளம் மகிழ்ந்து துதித்து வாழ்ந்தார்.

(மூன்று குளங்கள்;- சோமகுண்டம், சூரிய குண்டம், அக்கினி குண்டம்)

2023.

அரிதாய் அக்கோவில் விட்டு வெளியே வந்து வணங்கி

அங்கு அவர் வாழ்ந்திருந்த நாளில்

திருமுல்லைவாயில் சென்றார்

“துளி மண்டி உண்டு” எனும் திருப்பதிக மாலை சாத்தினார்

பொருந்திய மற்ற தலங்கள் வணங்கி

மறையோர்கள் போற்றிட வந்து

அருட்செல்வம் மிக்க புகலி எனும் சீகாழி வந்தார் ஞானசம்பந்தர்.

2024.

திருத்தோணியில் வீற்றிருக்கும் இறைவரை வணங்கி

அவர்திரு முன்பு தொழுது முன் நின்று

தூய உரையாணியான திருப்பதிகம் பாடி

அருட்பெரு வாழ்வு பெருக

வான் வரை உயரும் மாளிகை ஓங்கும் திருப்பதியான புகலியில்

சிவந்த சடையுடைய சிவபெருமானை

நாளும் போற்றும் விருப்பம் மிக்கவரானார்.

2025.

முன் சொன்னவாறு

வாழும் அந்நாளில்

கிழக்குத் திசையில் உள்ள திருமயேந்திரப் பள்ளியும்

மணம் கமழ்கின்ற திருக்குருகாவூரும்

திருமுல்லை வாயில் உள்ளிட்ட பல பதிகள் யாவும்

இன்பம் உண்டாகத் துதித்து

தையலாளை தம் ஒரு பாகத்தில் கொண்ட சிவபெருமான் மீது

தமிழ்ச்சொல் மாலையான திருப்பதிகம் பாடினார்.

2026.

அவ்வகையாக சுற்றிலுமுள்ள

திருத்தலங்கள் யாவும் சென்று இறைவரின் பொற்பாதங்களை

மெய்வகை ஞானம் உண்ட வேதியரான

ஞானசம்பந்தர் விரவிப் போற்றினார்

இம்மண்ணில் உள்ள யாவருக்கும் உதவும் பொருட்டு

பதிகம்பாடி எவ்வகையோடும் போற்றும்படி

சிவபெருமானை வணங்கியிருந்த நாளில்-

2027.

திருநீலகண்டத்து யாழ்பாண நாயனார்

தெளிவான அமுதம் போன்ற

இசைப்பாடலுடைய மதங்க சூளாமணியாரும்

ஒன்றுபட்ட அன்பின் திறத்தால்

ஞானசம்பந்தரின் திருவடிகண் வணங்க

இசை இன்பம் அளிக்கும் யாழிசைக்கொண்டு

சீகாழிப் பதிக்கு வந்து சேர்ந்தார்.

(மதங்க சூளாமணி- திருநீலகண்டத்து யாழ்பாணரின் மனைவியார்)

2028.

திருநீலகண்ட நாயனார் எனும் பெரும்பாணரும்

அவரது துணைவி மதங்க சூளாமணியாரும்

ஞானசம்பந்தப் பிள்ளையாரை எதிர்கொள்ள

வண்டுகள் பொருந்திய செந்தாமரிமலர் போன்ற

அவரது இருதிருவடிகளும் வணங்கி எழுந்து

விரும்பும் ஆர்வத்தோடு மெய்மொழிகளால் துதித்து

வரும் பான்மையால் தரப்பட்ட வாழ்வு பொருந்த

அவ்விருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

2029.

அளவிலா மகிழ்ச்சியுடைய அவர்களை நோக்கி

“ஐயரே நீவீர் உளம் மகிழ இங்கு சேர்ந்ததால்

ஆன உறுதிப்பொருளை பெற்றவர் ஆனோம்”

என இளநிலா ஒளி வீசும் புன்னகையுடன் கூறி

நஞ்சு அணிந்த சிவனாரிடம் சேரும் கவுணியரான பிள்ளையார்

2030.

கோவிலின் வெளியே உள்ள திருமுற்றத்தில் புகுந்து

அவர்களை வணங்கச் செய்து

“பொருந்திய இசையையும் யாழையும்

உம் இறைவருக்கு இங்கிருந்து இயக்குங்கள்

எனக்கூறி அருளினார் ஆயபுகழ் பிள்ளையார்

அருள் பெற்றதும் அதற்கு ஏற்ப

பொருந்திய தொடை நரம்புகளை வீக்கி இசை விரிப்பாவர் ஆனார்.

2031.

சுரங்களின் ஸ்தானநிலை உரியபடி கருவியால் வைத்து

நரம்பு படியும் முறைமையின் தகுதியால்

இசையை ஆராய்ந்து இறைவனின் திருப்பாட்டினை

அளவுபடும் முறையில் பாடியவரான

மதங்க சூளாமணியுடன் ஒன்றி வாசிக்கக்கேட்டு

ஞானப்பால் உண்டவரான சம்பந்தர் மகிழ்ந்தார்

நான்மறையோர் அதிசயித்தார்,

2032.

யாழில் எழுந்தது ஓசை

ஓசையுடன் இருவர் மிடற்றின் இசையும் கூடியது

வாழும் திருத்தோணியில் உள்ளவர்களின் பெருமையை

கின்னர மிதுனங்களான இருபறவைகள் வந்து படிந்த வானில் நின்று

ஏழிசை நூலில் வல்ல கந்தருவர் வித்தியாதரர் என்பவர்களும் பாராட்டினர்.

2033.

நினைப்பதற்கும் அரிய பெருமையுடைய

திருத்தோணியில் வீற்றிருக்கும் எம்பெருமான் திருவடி துதித்தார்

பண்பொருந்திய யாழுடன் மிடற்று இசையும் பொருந்த

திருநீலகண்டப் பெரும்பாணர் பாடி முடித்தார் பின்பு

கண்நுதலார் அருளினால்

சீகாழித் தலைவரான ஞானசம்பந்தர் அழைத்துச் சென்று

அவர் தங்குவதற்கு தனியிடம் அமைத்து

நல்விருந்தும் சிறப்பாய் அளிக்க

(கண்நுதலார் – நெற்றிக்கண் உடைய சிவன்)

2034.

ஞானசம்பந்தப் பிள்ளையாரின் அருள் பெற்ற பெரும்பாணர்

பிறைச்சந்திரன் அணிந்த வெள்ளநீர்ச் சடையாரை

அவர் மொழிந்த மெய்ப்பதிகங்களில் உள்ளபடி

சொல்லக்கேட்ட அடியார்கள் உருகினர்

பெருகிய மகிழ்ச்சியுடன் தெளிந்த அமுதம் உண்டவர்போல

உள்ளம் களிப்பு கொள்ள தொழுதனர்.

2035.

சீகாழிப் பகுதியினர் செய்த தவப் பயனால்

கவுணியர் குலத்தில் தோன்றிய சம்பந்தர் அருளிய திருப்பதிகங்களை

ஆழியில் தோன்றிய விஷத்தை உண்டவரின்

திருவடி போற்றுகின்ற திருப்பதிகங்களின் இசையினை

இசைத்து யாழில் வாசித்தார்

ஏழிசையை ஏவல் கொண்ட திருநீலகண்ட யாழ்ப்பாணர்

எல்லாவுயிர்களும் மகிழும்படி.

2036.

சிறிய வேதக்களிறான ஞானசம்பந்தர் அளித்த

திருப்பதிக இசையினை யாழிசையின் நெறியில்

வாசித்தார் பெரும்பாணர்

மேலும் அவரைப் பார்த்து

“தாங்கள் ஆணையிட்டு அருளிய

அறிவதற்கு அறிய

திருப்பதிகங்களின் இசையை யாழில் இட்டு அடியேன்

தங்களைப் பிரியாமல் வணங்கி

உடன் இருக்கும் பேறுபெற வேண்டும்”.

2037.

அவர் கேட்டதற்கு ஞானசம்பந்த பிள்ளையார்

மனம் மகிழ்ந்து இசைந்து அருளினார்

அருளப்பெற்ற பாணனார்

“இது தம் பெருமானின் அருளே” என விரும்பிப் பேணி

சொல்தமிழ் மாலையான திருப்பதிகத்தை

சுருதியுடைய யாழிசையின் முறையில் தொகுத்தார்

அந்த நாள் போன்றே எந்த நாளும்

அகலாமல் அவருடன் இருந்து வந்தார்.

2038.

சிரபுரம் என்ற சீகாழியில் அமர்ந்து அருளும் திருஞானசம்பந்தர்

யாவரும் வணங்கும் திருத்தில்லையில் நடம் பயிலும்

இறைவரைப் பணிந்து துதித்து

உள்ளத்தில் பெரும்காதல் வெள்ளம் பொருந்தி எழப்போவதான

குறிப்பு நிகழ்ந்ததை

தவமுனிவரான தன் தந்தை சிவபாத இருதயர்க்கு கூறினார்.

2039.

திருஞான சம்பந்தப் பிள்ளையார் கூறியதும்

பெருந்தவத்தால் பெற்ற வள்ளலாரான சம்பந்தருடன்

சிவபாத இருதயர் தானும் உடன் செல்ல மனம் களித்தார்

வெள்ளி மலையில் இருப்பதுபோல்

திருத்தோணியில் வீற்றிருந்த

புள்ளிமான் தோலை உடைய இறைவரைத் தொழுதார்

அருளால் புறப்பட்டார்.

2040.

குற்றமிலாத யாழ்(கொண்ட) பாணரோடும்

தந்தை சிவபாத இருதயரோடும்

பொருந்திய சிறப்புடைய அடியார்கள் சூழ்ந்து வர

நான்முகன் மண்ணில் வந்து பூசித்து வழிபடும்

புகலி என்ற சீகாழிப்பதியினைக் கடந்து போய்த்

தேவர்களுக்கெல்லாம் பெரும் தேவரான சிவபெருமானின்

திருத்தில்லை நோக்கிச் செல்லும் வழியில் செல்வார் ஆனார்.

2041.

நள்ளிருளில் நின்றாடுகின்ற இறைவர் எழுந்தருளிய

தலங்கள் நடுவில் காண்பனவற்றை வழிபட்டார்

முட்களுடன் கூடிய புற இதழ்கள் கொண்ட

தாழைகளின் மொட்டுகள் மணம் சூழ்கின்ற

நீர்ப்பறவைகள் உள்ள அகன்ற வயல்கள்

பள்ளமான நிலங்கள் யாவும் பக்கத்தில் கடந்திட

கவுணியர் குலதீபமான ஞானசம்பந்தர்

கொள்ளிட ஆற்றின் தென்கரை அடைந்தார்.

2042.

வண்டுகள் இரைச்சலிட்டு எழும் செழுமலர்க் கூட்டமும்

மணிகளும் சந்தனக்கட்டைகளும் சோலை வளமும்

ஏந்தி வரும் ஆற்றின் நீர் தாழ்ந்து

சம்பந்தர் திருவடி தொட்டிட

தெளிவான அலைகளுடைய கடல்தரும் பவளங்களும்

செழுமணி முத்துக்களும் சுழிக்கும் நீர் எதிர்கொள்ள

கொள்ளிடத் திருநதி கடந்து

வடகரை மேல் ஏறி-

2043.

நிறைந்த அடியார் திருக்கூட்டத்தோடும்

மறைவல்ல அந்தணர் சூழ்ந்துவர

செல்லும் கதியின் பயன் காண்பவர்போல

உள்ளத்தில் மிக மகிழ்ச்சி கொண்டு

பெருகிய தேவர் முதலான எல்லாவுயிர்களும் வணங்க

வேண்டியவெல்லாம் நல்கும் தில்லை சூழ்ந்த திரு எல்லை பணிந்தார்

ஞானமான ஆரமுது உண்ட பிள்ளையார்.

2044.

இந்த திருந்திய உலகுக்கு இனி எல்லா மங்கலமும் தரும்

இளமையுடைய யானைக் கன்றான ஞானசம்பந்தர்

நடந்து வரும் இரு பக்கங்களிலும் தங்கும்

பறவைகள் வாழ்த்துரை எடுத்தன

தாமரை மலர்களில் செம்முகையான கைகுவித்து

நீர் பொய்கைகள் மலர்ந்த முகத்தைக் காட்டி வரவேற்றன.

2045.

மலர்சோலைகளில் தோகைகளுடைய மயிலினங்கள் அழைத்தன

புதிய மணமுடைய குளிர் தென்றல் காற்று உலவி

பணிந்து எதிர் கொண்டு வரவேற்றது

பெயர்ந்து எழுந்து உடன் வரும் வண்டுகள் ஆர்ப்பரித்தன

விளங்கும் செந்தளிர்கள் ஒளியுடைய நிறம் பெற்றன

இருகுழைகள் பக்கங்களில் ஆட

முகம் பொலிந்து ஆடியது மலர்கள் கொண்ட கொம்புகள்.

2046.

அணிகள் அணிந்த கொங்கைகளுடைய இமயமலையில் தோன்றிய

மலைக்கொடி போன்ற பார்வதி அம்மையார்

இனிய அமுது என ஞானம் குழைத்து அளித்திட

அதை அமுது செய்து (உண்டு) அருளிய ஞானசம்பந்தர் வரக்கண்டு

குளிர்ந்த மென் காற்றினால் மணம் கமழும் மலர்களின்

அழகிய நுண் பூந்தாதுக்களான சுண்ணம் தூவி

தழைத்த எழில் முகம் காட்டி வணங்கின

வயல்களில் இருந்த நெற்பயிர்கள்.

2047.

வயல்களில் பக்கங்களிலெல்லாம் உள்ள

அசைந்தாடும் மணம்கமழ் பாக்குமரங்கள்

சேல்மீன்கள் அலம்பும் குளிர்நீர் பொய்கைகளில் படிந்து

குளிர்காற்று வீசியதும் மகிழ்ச்சி அடைந்து

மிகப்பல கண்கள் பெற்று வரவேற்றது பொய்கை–

ஞாலம் உய்யும் பொருட்டாக

ஞானம் உண்ட திருஞானசம்பந்தரை.

2048.

முன்னை வினை தவிர்ப்பவரான கூத்தர் எழுந்தருளும்

திருத்தில்லை நகர் சூழ்ந்த எல்லையிலே

பயன் மிகுந்து ஆகுதியிலிருந்து எழுகின்ற

செழும்புகைப் பரப்பாலே

உயர்ந்த நீலநிறமான பரப்பைத்

துகிலாகப் பரப்பி கட்டியது போலிருந்தது வானம்

தவம் தழைப்பதினால் வந்து தோன்றிய

ஞானசம்பந்தர் பெருமானை உபசரிப்பதற்காக .

2049.

கரும்பு செந்நெல் ஆகியன பசுமையான

பாக்குகளுடன் கலந்து உயர்வதற்கு இடமான

வயல்கள் கொண்ட மருதநிலத்தைக் கடந்து

அரும்புகளும் மென்மலர்களும் தளிர்களும் பழங்களும் வேர்களும்

என யாவும் கொழித்து வளரும்

பக்கமுள்ள சோலைகளை வணங்கி

மாடமாளிகைகள் சூழ்ந்த பெரிய மதிலின்

தெற்குத் திசை வாசலுக்கு நேராக அருகில்

ஞானசம்பந்தர் வந்து சேர்ந்தார்.

2050.

பொங்கும் கொங்கையில் மெய்ஞானமாம் பாலமுகத்தை

பொன்மங்கையரான உமையம்மையார் தம் செங்கையால் ஊட்ட

அதனை உண்டருளிய பிள்ளையார் வந்தார் என்று

அங்கு வாழ்கின்ற தில்லை வாழ் அந்தணர்கள்

அடியார்களுடன் கூடி வந்து நிறைந்து

எங்கும் மங்கலம் மிக

அலங்கரித்து வரவேற்க அணைவாராயினர்.

2051.

வேதங்களின் ஒலியும் மங்கல முழக்கமும்

விசும்பில் நிறைந்து ஒலித்தன

குளிர்ச்சியும் வாசமும் உடைய நீர் நிரம்பிய குடங்களுடன்

தீபங்கள் திசை எல்லாம் நிறைந்து பொருந்தின

ஒளி பொருந்திய பெரிய மணிகளுடைய திருவாயிலில்

“சோபனம் ஆகுக” என நல் வாழ்த்தொலி சொல்லி

குற்றம் நீங்கி வாழ்பவரான பலர் ஞானசம்பந்தரை

எதிர் கொண்டு அழைத்துச் சென்றனர்.

(விசும்பு- வானம் )
(திருவருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்