கீதாஞ்சலி (56) தாகமுள்ள பயணி! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 4 in the series 20060101_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


உன்னிடம் எதையும் வேண்டி
மன்றாட வில்லை நான்!
என் பெயரை
உச்சரிக்கப் போவதில்லை,
உன் செவியில் நான்!
ஊமையாய் நின்றேன் நீ எனைவிட்டு
வேகமாய் நீங்கிய போது!
மண் குடத்தை நிரப்பி
பெண்டிர்கள் வீட்டுக்கு மீளும் வேளை,
கிணற்றருகே
தனித்து நின்றேன்,
மரத்தடிச் சாய்வு நிழலில்!
‘காலைப் பொழுது வியர்த்துப் போய்
சுடப் போகும் நடுப்பகலில்,
நடப்பீர் எம்முடன், ‘ என்றெனை
உடன்வர விளித்தனர்!
ஆழ்ந்து விடுக்காத அழைப்பில்
மூழ்கி முடிவெ டுக்காமல்
ஒளித்துக் கிடந்தேன்
குழம்பிப் போய்!

நீயெனை அண்டும் வேளை
தடங்களின்
நடைச் சத்தம் கேட்டிலேன்!
நின் விழிகள் எனை நோக்கும் போது,
துன்புற்றன சோகமாய்!
மேனி களைத்துப் போய்
மென்மையான
குரலில் முணு முணுத்தாய்,
‘ஆ! நானோர் தாகமுள்ள
பயணி என்று! ‘
பகற்கனவில் விடு பட்டு,
உடனே உன்னிரு கைகளில்
மடமட வென ஊற்றினேன்,
செம்பி லிருந்த நீரை!
தலைமேல் சலசலத்தன காய்ந்த
இலைச் சருகுகள்!
கண்காணா
காரிருள் கிளைகளுக்கு ஊடே
கூக்கூவென
பாக்க ளிசைக்கும் பூங்குயில்!
பாதை வளைவில் பாப்ளா மலர்களில்
பொங்கி எழுந்தது,
பூவின் நறுமணம்!

வெட்க முற்று வாயடைத்து
நின்றேன்,
என் பெயரை நீ கேட்டு
வினாவியதும்!
நானென்ன செய்தேன் உனக்கு,
நீயென்னை
நினைவில் வைக்க ?
பொழுது புலர்ந்திட இன்னும்
வெகு நேரம் உள்ளது!
களைத்து ஓய்ந்திடும் ஒலியில்,
கானம் பாடுகின்றன,
பறவைக் கூட்டம்!
வேப்பிலைச் சருகுகள் உராய்ந்து
வேகமாய்ச் செல்லும்,
தலையின் மீது!
தாகம் தீர்க்க நானுனக்கு
நீரளிக்க முடியும் எனும் நினைப்பு
பூரிப்பளித்து,
நெஞ்சில் அப்பிக் கொண்டது!
குந்தி வண்ணம்
சிந்திக்கும் மனம், மீண்டும்
சிந்திக்கும்!

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (January 2, 2006)]

Series Navigation