உணர்வும் மனசும்

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


____

நினைவுக் கவலைகளை
மூட்டை கட்டிவைத்துவிட்டு
இன்று மட்டும்
மனதுக்கு அமைதி வேண்டி
மலைப்பகுதி ஒன்றில்.
யாரும் இல்லை.
ம்! றிலாக்சாய் மனசு.
இனிமை இனிமை
ஆகா இன்பப்பொழுது.
வேலைப்பழு
குழந்தைகள் சினப்பு
கணவனின் அன்புத்தொல்லை
இன்னுமே வாசிக்காத
ஊரில் இருந்து வந்த கடிதம்
எல்லாம் விலத்தி
ஆகா இன்பம் இன்பம் .
கீச் கீச் என என்
காதுவரை தடவிபோகும்
குருவிகளின் சங்கீதம்.
எறிந்து விட்ட
சில்லறையாய்
மரக்கிளைகளுக்கால்
தெரியும் சூரியனின்
ஒளிக் கதிர்கள்.
பச்சைப் பசுமையாய்
இதம் தரும் குளிர் ஒன்று
என்னை படர்வதாய்.
சுகமான அனுபவம் தான்.
நீண்ட நேரமாய்.
நிலவுக்கு பயந்து
பரதேசம் போனதாய்
என்னிலை ஆனது.
ஈ ஒன்று
ஈஈ என்று
இன்னல் செய்து
என் அமைதியை
குழப்பி நின்றது.
கையை ஓங்கினேன்
அடித்துக்கொல்ல
மின்னலாய் மனதுள்
பாவம் பாவம் .
அதுவும் உயிர்தானே.
கொல்வதை நிறுத்தி
ஈயை ரசிக்க
மனசு இசைந்தது.
பறப்பதும்
தன் ஈர உதடு பதித்து
முத்தமிட்ட படி
என்னில் அமர்வதும்
கிசுகிசுத்து
கதைகள் பல
என்காதில் சொல்வதும்.
என்ன சொன்னது
என உணர முயன்ற எனக்கு
இடியொன்று
என்னுள் இறங்கியதாய்.
ஆ பாவம்…
இத்தனை நேரமும்
ஈஈ என்று
தனக்கே உரிய
எத்தனை துன்பத்தை
எனக்கு சொன்னதோ…. ?
நளாயினி தாமரைச்செல்வன்.
15-6-2000

Series Navigation

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.