இலவச வெளிச்சம்

This entry is part of 34 in the series 20051223_Issue

இளைய அப்துல்லாஹ்


மின்சாரக்கால்களை நாட்டுங்கள்
உலகம் முழுவதும் ஊர்ந்து திரியும்
வால் நட்சத்திரங்களை
எங்கள் வீடுகளுக்கு அழையுங்கள்

ஃபிஜி தீவுகளில்
ஒரு பிரச்சனை தீர்ந்து விட்டதாம்
மின்மினிதான் விளக்கு
மின்மினிகள் தான் வெளிச்சம்
மின்மினிகள்தான் வாழ்க்கை
ஒரு புதிய நடைமுறையை
எங்கள் நாட்டிலும் பழக்குவோம்.

வெளிச்சப்பூசி;சிகள் ரசிக்க மட்டுமல்ல
அனுபவிக்கவும் உதவுமாம்.
மின்மினிகளை பிடித்து சீசாவில் அடைத்து
வெளிச்சம் எடுக்கும் பழக்கத்தை
படிக்கத்தான் வேண்டும்.

சுற்றித்திரியும் சூட்சுமக்காரர்களை பிடியுங்கள்
வெளிச்சம் வெண்டுமெனில்
அந்த விஷயத்தையும் தெரியத்தான் வேண்டும்.

எத்தனை நாட்களுக்குதான் இருட்டில் இருப்பது
குந்திக்கொண்ட குடுமி முடிவது.

பறந்து போகும் மின்மினி ராசாத்திகளே
எங்கள் மாடத்திற்கும் ஒரு ஊர்வலம் வாருங்கள்
வெளிச்சம் தாருங்கள்

வெப்பமில்லாத வெளிச்சம் இலவசம்
மின்சாரத்தை சேமியுங்கள் அறிவித்தல்
இருக்குமிடத்தில் மின்மினிகள் ஜாக்கிரதை
என்று மொழி மாற்றம் செய்யுங்கள்

ஐந்து சத வீத வெளிச்சமும்
தொண்ணூற்றைந்து சத வீத வெப்பமும் தரும்
அவிச்சல் விவகாரம்தான் மின்குமிழ்

மழை இல்லாவிடினும்
ஓளி கிடைக்கும் வழியை தோண்டுவோம்.
இந்த மின்சாரக்கலங்களை எங்கள் நாட்டுக்கும்
இறக்குமதி செய்யுங்கள்.

மின்மினி ராசாத்திகளே
எங்கள் மாடத்திற்கும்
ஒரு ஊர்வலம் வாருங்கள்

இளைய அப்துல்லாஹ்
லண்டன்

anasnawas@yahoo.com

Series Navigation