யார் அனாதை

This entry is part of 24 in the series 20051202_Issue

கவிஞர் புகாரி


யாருமற்றுப்
போனாயோ கண்ணே
ஏக்கவிழி அலைந்தாயோ

வேரொழிந்த
பூங்கொடியோ கண்ணே
விரலெறிந்த நகச்சிமிழோ

யாருந்தான்
அடிக்கலியே கண்ணே
ஏனழுது நிற்கின்றாய்

யாருந்தான்
அடிக்கலியே கண்ணே
அதற்கழுதோ நிற்கின்றாய்

தெருவோரம்
கிடந்தாலும் கண்ணே
தெய்வத்தின் உயிர்தானே

வருவோரும்
போவோரும் கண்ணே
இருப்போரின் தொடர்தானே

வயிறெல்லாம்
வேறென்றால் கண்ணே
உறவென்றால் பொருளுண்டோ

துயருள்ளம்
கதறுகையில் கண்ணே
துணைநிற்கும் தூணுண்டோ

கையோடு
கைகுலுக்கு கண்ணே
கைவளர்ந்து வான்கிள்ளும்

கையிரண்டும்
உனதென்று கண்ணே
கர்வமனம் புவிவெல்லும்

மெய்யான
உறவுதேடி கண்ணே
பொய்யான பூதலத்தில்

மெய்யறியும்
வேளையுந்தன் கண்ணே
கைதானே கவசமாகும்

இடதுகையோ
யாசிக்க கண்ணே
இல்லாளும் யோசிக்க

வலதுகையும்
வந்துதானே கண்ணே
வாட்டத்தைத் தூசாக்கும்

கொடுக்கின்ற
மாந்தருக்கு கண்ணே
எடுப்போர்கள் உறவாவர்

கொடுப்போனாய்
நிலைத்துவிடு கண்ணே
குறையில்லா உயிராவாய்

(பச்சைமிளகாய் இளவரசி கவிதைத் தொகுப்பிலிருந்து)

Series Navigation