பெரிய புராணம் – 65

This entry is part [part not set] of 31 in the series 20051118_Issue

பா.சத்தியமோகன்


1747.

அம்மையாரை விட்டு நீங்குவதே எண்ணமாகக் கொண்டு

அதற்கேற்ற முயற்சி செய்தான்

அலைகளுடைய கடல்மீது படரும் கப்பல் கொண்டு சென்று

நெடிய நிதி கொணர்வேன் என்று கூற

நெருங்கிய பல சுற்றத்தவரான குற்றமற்ற சிறப்புடையோர்

மரக்கலம் செய்வித்தார்கள்.

1748.

மரக்கலம் செய்து அதற்கு வேண்டிய மீகாமன் முதலான

தொழில் வல்லாளருடன்

கடல் கடந்த நாடுகளில் விரும்பும் பண்டங்களைப்

பொருந்துமாறு நிரம்ப ஏற்றிக் கொண்டு

கடல் நீர் தெய்வத்தை வணங்கி வழிபட்டு

அவ்வாணிகத் தலைவனான வணிகன்

நல்லதொரு நாளில் குளிர்ந்த அலைகளுடைய கடல்மீது

பயணம் புறப்பட்டான்.

1749.

கடலின் மீது மரக்கலம் ஓட்டி

கருதிய தேசம் அடைந்து

அங்குள்ள பல வளங்களும் நிறைத்துக் கொண்டு

இடையில் சில நாட்கள் நீங்கின

மீண்டும் அக்கலத்தில் (கப்பலில் ) ஏறிப்

படரும் நீர் கொண்ட பாண்டிய நாட்டில்

ஒரு கடற்கரைப் பட்டினம் சேர்ந்தான்.

1750.

அந்நகரத்தில் ஏறி

அளவிலாத பலவகைப் பொருள்களால் ஆன

ஒப்பிலாதப் பெரும் செல்வங்கள் எல்லாம்

ஒருவழியாகச் சேர்த்துப் பெருகினான்

மெய்யான புகழ் உடைய அவ்வூரார் விரும்பும்படி

வணிகன் ஒருவன் பெற்ற

சொல்லமுடியாத அழகுடைய

கன்னியைச் செல்வம் பெருக மணம் செய்து கொண்டான்.

1751.

பெருவதற்கரிய இலக்குமி போன்றவளை

பெருவிழாவுடன் பெருமணம் புணர்ந்தான்

முன்பு மணம் செய்து கொண்ட

கரிய மணலின் ஒழுங்கு போன்ற நறுமணமிக்க கூந்தலுடைய

புனிதவதியாரிடம் தான் செய்த வஞ்சனையை

வெளியில் காட்டாமல்

பொதித்து வைத்த மனதுடன்

மற்ற முறைமை எதுவும் வழுவாமல் வாழ்ந்து

முக மலர்ச்சியுடன் இருந்து வரும் நாளில்-

1752.

மணம் வீசும் பூஞ்சோலைகள் உடைய பழமையான ஊரில்

முதன்மையுடைய வணிகர்களுடன் கூடியதால்

குபேரன் போல் பொருந்தியது செல்வம்

அலைகள் மிதக்கின்ற கடலில் கப்பல்கள் செலுத்தி

வாணிகம் செய்யும் புகழுடைய அவ்வணிகன்

ஒளி பெருகும் விளக்கு போலொரு பெண்மகவை

அரிதாகப் பெற்றான்.

1753.

பெண் குழந்தையை பெற்று மங்கல சடங்கு செய்ய

தான் முன்பு உடன் வாழ்தலை அஞ்சி நீத்த

ஒப்பற்ற பெரு மனைவியாரைத்

இல்லறத் தொடர்பு அற நினைந்து

தெய்வத் தன்மை கொண்ட தொழ வேண்டிய குலம் என்று கொண்டான்

உரிய கடன் செய்து

அன்புடைய தன் மகளுக்கு புனிதவதியார் என்ற நாமம் இட்டான்.

1754.

இத்தகு நிலையுடன் இவன் இங்கு இருந்தான்

இப்பக்கம் நீண்ட கெடுதல் இல்லாத பெரும் மதில் சூழ்ந்த

மாடங்களுடைய காரைக்காலின் வணிகனுடன்

தனக்கு ஒப்பில்லாத செல்வமுடைய தனத்தத்தன்

மகளான புனிதவதியாரும்

நிலை பெற்ற கற்புடன் இல்லறம் புரிந்து தங்க-

1755.

பெருகும் ஒளியுடைய மணிகளுடைய ஒரு கொம்பு போன்ற

புனிதவதி அம்மையாரின் உறவினர்

வாணிகத்தால் வளம் பெருக்க மரக்கலம் ஏறிச் சென்ற பரமதத்தன்

வளரும் புகழுடைய பாண்டிய நாட்டில் ஒரு நகரில் தங்கி

அளவில்லா செல்வங்கள் ஆக்கி

அங்கு நிலையாய் விரும்பி இனிதாய் இருந்தான் என கேள்விப்பட்டனர்.

1756.

அவ்விதமாய் கேட்டபோதே உறவினரும் சுற்றத்தாரும்

அவ்வணிகன் நிலையைத் தாமும் கேட்டறிந்து

துன்பம் கொண்ட மனத்தினராகினர்

அவன் இருந்த இடத்தில்

பருத்த வெம்முலையினராகிய புனிதவதி அம்மையாரைக்

கொண்டு போய் விடுதல் கடமை என்றார்.

1757.

பெரிய அழகிய பல்லக்கில்

மயில் போன்ற புனிதவதி அம்மையாரைத்

தாமரை இருக்கையில் வாழும் தனிச் செல்வமகள் போன்று ஏற்றிக் கொண்டு

அழகிய திரையை சூழ்வித்து

அன்பு செய்கின்ற உறவினர்களும்

இனிய மொழியுடைய தோழியர் முதலான பெண்களும் சூழ

நெடுந் தொலைவு

பல நாட்கள் கடந்து போயினர்.

1758.

பகல் நாட்களெல்லாம் நடந்து கடந்து

பாண்டியத் திருநாடு அடைந்து

மலரும் புகழுடைய பரமதத்தன் இருந்த

பட்டினத்தின் பக்கம் வந்து

குலத்தின் முதல் மனைவியாரைக் கொண்டு வந்தனர்

தாம் வந்துள்ள செய்திகளை எல்லாம்

தொலையாத சிறப்புடைய கணவனார்க்கு

அவன் அறியுமாறு முன்னே கூறி அனுப்பினார்.

1759.

அவ்விதம் வந்தவர் தம் நகரம் சேர்ந்த சொல் கேட்டதும்

வணிகன் சிந்தையில் அச்சம் எய்தினான்

பின் நாளில் சிறப்பாக மணம் கொண்ட மனைவியுடன்

பெற்ற பெண் மகவியுடன்

அவர்கள் இங்கு வருமுன் நான் அங்கு முந்திச் செல்வேன்

என மொய்குழல் அம்மையாரிடம் வந்தான்.

1760.

தானும் அந்த மனைவியோடும் தளர்நடை பெண்மகவோடும்

மானின் இளம்பிணைபோல் நின்ற மனைவியாரின்

பாதத்தில் தாழ்ந்து-

நான் உமது அருளால் வாழ்வேன்

இந்த இளம் குழவிக்கு அப்பான்மையால்

உனது நாமமே சூட்டியுள்ளேன் என்று நிலம் பொருந்த வீழ்ந்தான்.

1761.

கணவர் தம்மை வணங்குவதைக் கண்ட

அழகிய பூங்கொடி போன்ற புனிதவதியாகும்

அருகில் நின்ற சுற்றத்தாரிடம்

அச்சத்தோடு ஒதுங்கி நிற்க

உணர்வுள்ள சுற்றத்தார் வெட்கமுற்று

உன் திரு மனைவி தன்னை-

மணம் மிக்க மாலையுடையோய்! நீ

வணங்குவது எதற்காக என்றனர்.

1762.

மற்றவர் தம்மை நோக்கி பரமதத்தன்

“இவர் மானிடப் பிறவி அல்லர் நல்ல பெரும் தெய்வம்

அதை நான் அறிந்தேன் அகன்றேன் பின்பு

பெற்ற இம்மகளுக்கும் அவர் பெயரே இட்டேன் ஆதலாலே

பொற்பதம் பணிந்தேன் நீங்களும் போற்றி வணங்குங்கள்” என்றான்.

1763.

என்று பரமதத்தன் கூறியதும்

சுற்றத்தாரும் இது என்ன ! என்று திகைத்து நின்றனர்

மணம் தங்கிய கூந்தலுடைய புனிதவதியாரும்

வணிகனது வாய்ச் சொல் மாற்றம் கேட்டு

கொன்றை மலர் சூடிய சடையினார் சிவனாரின்

ஒலிக்கும் கழல் அணிந்த பாதங்கள் போற்றி

சிந்தை ஒன்றிக் குவித்து மிக்க உணர்வு கொண்டு

உள் உணர்ச்சியை உரை செய்தார்:-

1764.

இங்கு இவ்வணிகன் குறித்த கொள்கை இது

இனி இவனுக்காக நான் தாங்கிய வனப்பு நிற்கும்

தனது பொதிந்த சுமையை கழித்துவிட்டு

உன்பால் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவை

அடியேளாகிய எனக்கு பாங்குடன் அருள வேண்டும் என்று

பரமர் தாள் பரவி நின்றார்.

1765.

அவர் வேண்டிய அப்பொழுதில்

அம்பலத்தில் ஆடுபவரின் அருளாலே

மேலான நெறிதரும் உணர்வு மிகுதலால்

வேண்டியதை அப்படியே பெற்றார்

உடம்பில் தசை அடைந்த வனப்பை எல்லாம் உதறி

எலும்புக்கூடான உடலே தம் மேனி ஆக

வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும்

பேய் வடிவமான சிவகணநாதரின் வடிவம் ஆனார்.

1766.

அப்போது மலர்மழை எங்கும் பொழிந்தது

தெய்வதுந்துபியின் நாதன் வானிலிருந்து

உலகெங்கும் பரவிக் கேட்டது.

உலகெலாம் நிறைந்து விம்மிற்று

தேவரும் முனிவர்கள் தாமும் கலந்து மகிழ்ந்தன

பூத கணங்கள் குணலைக் கூத்து இட்டன

முன்னால் நின்ற குறைவிலாத சுற்றத்தார் பலரும்

தொழுது அஞ்சி அகன்று போயினர்.

(குணலை- மகிழ்ச்சிமிகும் போது பாட்டுடன் ஆடும் ஆட்ட வகை)

1767.

உள்ளே பரவி எழுந்த ஞானத்தின் ஒருமையினால்

உமைபாகரான சிவனாரைத் துதித்து

அற்புதத் திருவந்தாதியை அப்பொழுதே பாடி அருளிச் செய்தார்

அழகிய சிவந்த பாத தாமரைகளைப் போற்றும்

நல்ல சிவ கணத்தினில் (பூதங்களுள்) ஒன்றானேன் என்று நயந்து பாடினார்.

1768.

ஆயந்த சிறப்புடைய இரட்டைமணிமாலை பாடினார்

அற்புதத் திருவந்தாதி பாடினார்

பொருந்திய பேருணர்வு பொங்க

மதிகளுடைய மூன்று புரங்களையும்

முன் நாளில் எரித்த சிவபெருமான் வீற்றிருந்த

வெள்ளிக் கயிலை மலை அடையும் பொருட்டு

வாய்த்த பேரருள் கூடவும் வழிபட வழியால் வந்தார்.

1769.

அவர் ஏற்ற பேய்வடிவத்தைக் கண்டவர்கள்

வ்யப்புற்றர் அஞ்சினர் அங்கிருந்து ஓடினர்

அக்கோலத்தைக் கண்டவர் உள்ளபடி சொல்லக் கேட்டு

அண்டங்களின் நாயகனான சிவபெருமான் என்னை அறிவாரேல்

உண்மை அறியா நிலையில்

ஐந்தறிவுடைய மாக்களுக்கு

நான் எந்தவுருவில் காணப்பட்டால் என்ன என்பார்.

1770.

வடதிசைத் தேசம் எல்லாம்

மனதின் வேகத்தைவிட வேகமாய்க் கடந்து சென்று

மாலைபோல மலர்கின்ற கொன்றை மாலை சூடிய

சூலம் ஏந்திய திருக்கை உடைய சிவபெருமான் மேவும்

ஒளி படரும் கயிலை மலையின் பக்கம் அடைந்து

காலால் நடந்து செல்வதை விட்டு

நிலத்தில் தலையால் நடந்து சென்றார்.

1771.

தலையினால் நடந்து சென்று

சங்கரனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும்

வெள்ளி மலை மீது ஏறும்போது

மகிழ்ச்சி மிகுதலால் அன்பு பொங்க

கலையுடன் இளமையுடன் பிறைச் சந்திரனால் ஆன

மாலை சூடிய நெற்றிக் கண்ணரின் ஒரு பாகத்தில் அமர்ந்த

வில் போன்ற நெற்றியுடைய உமை அம்மையின்

திருக்கண் பார்வை அப்போதே பொருந்தியது.

1772.

அம்பிகையாகிய உமையம்மை தன்

திருவுள்ளத்தில் அதிசயித்து அருள் செய்தாள்

தம் தலைவரான சிவபெருமானை நோக்கி

“தலையினால் நடந்து இம்மலை மீது ஏறும்

ஓர் எலும்புக்கூடு பெற்ற அன்புதான் என்னே!” என்று.

1773.

உமையே ! நீ சொல்லியவாறு வரும் இவள்

நம்மைப் பேணும் அம்மையே ஆவாள்

இப்பேய் வடிவத்தை பெருமை சேர் வடிவத்தை

வேண்டிப் பெற்றாள் என்று கூறியருளியதும்

அம்மையார் அருகே நெருங்கி அவரை நோக்கி

அம்மையே எனும் செம்மை தரும் ஒரே ஒரு சொல்

உலகம் உய்யும் பொருட்டு அருளினார்.

1774.

அங்கத்தில் கண் கொண்ட சிவபெருமான்

அம்மையே என்று அருள் செய்ததும்

“அப்பா” என்று தாமரை போன்ற பொன் பாதங்களில்

பணிந்தார் வீழ்ந்து எழுந்தார்

அவரை நோக்கி

சங்கினால் ஆன வெண் குழையை அணிந்த சிவபெருமான்

எதிர் நோக்கி

நம்மிடம் இங்கு வேண்டுவது என்ன என்றதும்

அம்மையார் இறைஞ்சி இயம்புகிறார்.

1775.

எக்காலமும் இறவாத இன்ப அன்பு வேண்டிப்

பிறகு வேண்டிக் கொண்டார்

இனி நான் பிறவா வரம் வேண்டும்

மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்

இன்னும் நான் வேண்டுவது

நீ மகிழ்ந்து பாடி ஆடும்போது உன் திருவடியின் கீழ்

இருக்க வேண்டும் என்றார்.

1776.

தம் திருவடியின் கீழ்க்கூடியிருக்கும் அருள் கொடுத்து

விளக்கமுடைய தெற்கு திசையில் என்றும்

நீடூழி வாழும் பழையனூர் எனும் பழைய ஊரில் நிலவும்

திருவாலங்காட்டியில் நாம் ஆடும் பெரும் நடனம் நீ கண்டு

ஆனந்தம் சேர்ந்து எப்போதும் நம்மைப் பாடிடுக என்றான்

பற்றுவோர்களுக்கு பற்றுக் கோடாய் நிற்கும் இறைவன்.

1777.

அப்பரிசு அருளப்பெற்ற அம்மையார்

வேதங்கள் செம்பொருள் என்றும் சத்து என்றும் கூறும்

மெய்ப்பொருளானாரிடம் விடைப்பெற்றுக் கொண்டு

வணங்கிச் சென்று

செப்புவதற்கு அரிதான பேரன்பினால் திகழும் திருவாலங்காடு

எனும் நல்ல திருத்தலத்திற்கு

தலையினால் நடந்து சென்று கோவிலுள் புகுந்தார் அன்றே.

1778.

திருவாலங்காட்டில் மேல் அண்டங்களில் பொருந்துமாறு

தம் திருவடி மேலே உயர்த்தி நிமிர்ந்து ஆடுகின்ற

கோலத்தைக் காணப் பெற்றபோது

“கொங்கை திரங்கி” எனத் தொடங்கி

தாம் தங்கும் மூலத்தைக் காண்பதற்கு அரிதான இறைவரை

நன்மையுடைய மூத்த திருப்பதிகம் பாடினார்

அன்பு கொண்டு உலகைக் காதலித்து

திருக்கூத்தைப் பற்றிக் கொண்டு தங்கியிருக்கும் நாளில்-

1779.

மணம் கமழ்கின்ற கொன்றை மலர் சூடிய இறைவரின்

திருக்கூத்தை முன் நின்று வணங்கும் விருப்பமிகு

பெருங்காதல் எழுந்தோங்க வியப்பு எய்தி

“எட்டி இலவம் ஈகை” எனத் தொடங்கி

கொட்ட முழவம் குழகன் ஆடும் என்ற முடிவுடைய

திருப்பாட்டுகளால் ஆன திருப்பதிகம் ஆடினார்.

1780.

கங்கை நீரை தங்க வைத்த சடையுடைய சிவபெருமான்

“அம்மையே” என மதுரமொழி கொடுத்தருளும் பேறுபெற்றவரை

அண்டம் பொருந்த விளங்கிய தாண்டவத்தில்

அவர் எடுத்தருளும் சேவடியின் கீழ் என்றும் இருக்கின்றாரை

பொருந்திய பெரும் சிறப்பு போற்றும் செயல்

யாருடைய அளவுள் அடங்கும்!

அது அளவற்றது! அற்புதமானது

1781.

ஆதியும் அந்தமும் இல்லாத இறைவன்

அருட்கூத்து ஆடும் போது

கீதத்தை முன்பாடும் அம்மையாரின்

ஒளியுடைய மலரடிகளைப் போற்றிக்

குளிர்ந்த நீர் வயல் சூழ்ந்த திங்களூரில் வாழ்ந்த

அப்பூதியார் எனும் ஞான முனிவர் செய்த திருத்தொண்டைப்

புகலத் தொடங்குகிறேன்.

(காரைக்காலம்மையார் புராணம் முற்றிற்று )

( திருவருளால்
தொடரும் )

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்