பெரியபுராணம் – 62

This entry is part of 43 in the series 20051028_Issue

பா.சத்தியமோகன்


28 . குலச்சிறை நாயனார் புராணம்

1694.

பழமையும் தொன்மையான புகழும் உடைய பாண்டிய நாட்டில்

செந்நெல் நிரம்பிய வயல்களும்

கரும்புப் பயிர்களின் பக்கத்தில் செறிவான பாக்கு மரங்களும்

கொண்ட புற இடங்களும் நிலை பெற்ற வளமை நகரம் மணமேற்குடி

1695.

முதல்வர் வன்தொண்டர் (சுந்தரர்)

ஒப்பிலாத பெரு நம்பி என்று போற்றிய சிறப்பு கொண்ட

குலச்சிறையார் அப்பதியில் இருந்தார்

திண்ணிய தன்மையால்

திருத்தொண்டின் திறத்திலிருந்து தவறாதவர் ஆவார்.

1696.

கண்ணுதலான் அன்பர்களே அருள் பெறக்காரணம் என்று

அவர்கள் திருவடிகளில் அன்பு நிறைந்து மகிழ்வார்

அவர்கள் திருவடிகளில் வீழ்ந்து அஞ்சலி செய்வார்

ஈர நன்மொழி சொல்பவராக விளங்கினார்.

1697.

குறியினால் நான்கு வித குலத்தவராயினும்

நெறிப்படி அந்தந்த குலம் விட்டு நீங்கியவர் எனினும்

சங்கரர் ஆகிய சிவபெருமானிடம்

அறிவு நிலை பெற்ற அன்பர் என அறியப்பட்டால்

மனம் செறியும்படி பணிந்து

துதிக்கும் செய்கை உடையவராக இருந்தார் குலச்சிறையார்.

1698.

ஆம்!ஆம்! என்று உலகினர் நன்மையுடையவராயினும்

இல்லை!இல்லை! என தீமைகள் அளவின்றி உடையவராயினும்

பிறைச்சந்திரன் விளங்கும் சிவந்த சடையுடைய

சிவபெருமானுக்கு அடியாரெனில்

நிலம் பொருந்த வீழ்ந்து போற்றும் தகைமை கொண்டவர் குலச்சிறையார்.

1699.

பண்பால் மிக்கவர் பெருங்கூட்டமாக வந்தாலும்

உண்ண விரும்பி ஒருவராக வந்தாலும்

எண்ணுதலில் மிகுதிப்பட்ட அன்பின் திறம் காரணமாக

திரு அமுது ஊட்டும் இயல்பை மேற்கொண்டிருந்தார் குலச்சிறையார்.

1700.

திருநீறும் கோவணமும் உருத்திராக்கமும் ஆன

சிவச்சின்னங்களால் பொருந்திய

ஆதி தேவரான சிவபெருமானின் திரு ஐந்தெழுத்தை

நாவினால் வணக்கம் செய்து உரைப்பவரின் பாதத்தை

நாளும் பரவிப் போற்றும் பண்புடையார் குலச்சிறையார்.

1701.

இத்தகு நல்லொழுக்கத்தில் நின்ற குலச்சிறையார்

தென்னவனான (பாண்டியர்) நின்றசீர் நெடுமாறருக்கு

பெருமை மிகு அமைச்சர்களுள் மேலாகி நின்றவர்

பகைவர்களை அழித்து

உறுதி பயக்கும் துறையிலே நிலை நின்றவர்.

1702.

அத்தகைய செயலை உடையவராக

கங்கையைத் தலையில் சூடிய நாயகரான

சிவபெருமானின் திருவடிகளையே இடைவிடாமல் கூறுவார்

பரவிய புகழுயுடைய பாண்டிமாதேவியாகிய

மங்கையர்க்கரசி அம்மையாரின் தொண்டுக்கு

உண்மைத் தொண்டர் ஆகினார்.

1703.

நன்மையால் குறைவுடைய சமணர் பொய்மை நீக்கவும்

தென்னர் நாடு (பாண்டிய நாடு) திருநீற்று நெறி போற்றவும்

பொருந்திய சீகாழி வள்ளலான ஞானசம்பந்தரின்

பொன்னார்ந்த திருவடிகளை

தலையில் சூட்டி மகிழ்ந்த சிறப்புடையவர் குலச்சிறையார்.

1704.

வாதத்தில் தோற்ற சமணர்களை

வன்மையான கழுமரத்தில் தீமை நீங்கிட ஏற்றுவித்த குலச்சிறையார் திறம்
யாது போற்றினேன் !

(எதுவுமில்லை)

வேத நெறி விளங்கும் பெருமிழலைக் குறும்பரின் திருவடிகளை

இனி போற்றப் புகுகின்றேன்.

(குறும்பர்- சிற்றரசர்)

குலச்சிறை நாயனார் புராணம் முற்றிற்று.

-இறையருளால் தொடரும்.

Series Navigation

பா. சத்தியமோகன்