நண்பர் சுரா அவர்களுக்கு

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


மூங்கில்கள் அசைகிற உன் மாடியில்
மாமர நிழற் குடையில்
என்றும் என் நினைவுகள் நண்ப.
நீ துஞ்சிய சேதி
இதயத்துள் புழுக்களாய் நெளிகிறது.
இன்னும் உன் மாடியில் பூக்கும் மல்லிகை
தமிழர் நினைவின் மாடியில்
நீ பூத்திருப்பதைச் சொல்கிறதா.

நம் வரலாற்றின் சந்தியில்
நிழல் பரப்பும் உன்னுடைய புளியமரம்
கதை சொல்ல மகிழ்ந்திருந்தேன்.
என்னுடைய ‘காட்டை வகிடு பிரிக்கும்
காலச் சுவடான
ஒற்றையடிப் பாதை ‘ ஓரத்தில் சந்தித்தோம்.
எட்டாத தூரத்தும் இணையாத பாதையிலும்
ஒட்டி உறவாடும் உளம் திறந்த மாமுனிவ

விந்தைச் சிறகசைய தேவதைகள் உலாவந்த
சிந்தைக்கினிய உன் திரு மாட முற்றத்தில்
முந்தைப் பொழுது மகிழ்ந்திருந்த தமிழ் கலைஞர்
நொந்தழுத தொலைபேசி இன்னும் கரைகிறது.
இறுதியிலே எம்மோடும் இனிய தமிழோடும்
அப்பா இருந்தார் அகமகிழ்வாய் என்ற உங்கள்
செல்வியின் சொல்லில் தேறி மனம் ஆறியது.
வள்ளுவன் நடுகலாய் துளிர்த்தோங்கும்
தென் குமரிக் கரையோரம்
கடற்கோள் பின் ஐயிரண்டாம் திங்கள்
அனல் கடலில் சேர்த்தாலும்
காலத்தீ தீண்டாதுன் கற்புளி பூச்சொரியும்.
—-
visjayapalan@yahoo.com

Series Navigation