பெரியபுராணம் – 61 (திருநாவுக்கரசு நாயனார் புராணம் தொடர்ச்சி)

This entry is part [part not set] of 31 in the series 20051021_Issue

பா.சத்தியமோகன்


1669.

சிறப்புடன் திகழும் பாண்டிமாதேவியார்

திருநீற்றின் சார்பால் கூன் நிமிர்ந்த சீர் நெடுமாறர்

இவர்களோடு உலகம் புகழும் குலச்சிறையார்

மூவரும் வாகீசரைப் பணிவுற்றுப் போற்றி நிற்க

நிரம்புதல் பெறாது பெருகிய காதல் மிகுந்தபடி அங்கே தங்கியிருந்தார்.

1670.

திருவாலவாயில் அமர்ந்திருக்கும்

செழுமையான செஞ்சுடர் போன்ற இறைவரை

செழுமையான அகப்பொருள் நூல் தருகின்றவனை

திருநேரிசையும் திருத்தாண்டகமும் முதலான

பெருவாய்மையுடைய தமிழ் பாடிப் பேணினார்

திருப்பணிகள் செய்தார் பிறகு

பகைவரின் திருபுரங்கள் எரித்த சிவபெருமானின்

திருப்பூவணத்தை அடைந்தார் நாவுக்கரசர்.

1671.

கொடிகள் கட்டிய மாடங்கள் நிறைந்த

திருப்பூவணத்தின் கோவிலினுள்

திருமாலுக்கும் அரியவரான சிவபெருமான்

நேரில் தோன்றக் கண்டு இறைஞ்சினார்

“வடிவேறு திரிசூலம்” எனும் தொடக்கமுடைய

திருத்தாண்டகப் பதிகத்தால் பணிந்து துதித்தார்.

திருநீறு நிறைந்த திருமேனியுடைய சிவபெருமானின்

திருத்தலங்கள் பிறவும் பணிந்தார்.

1672.

தெற்கில் உள்ள இலங்கை மன்னன் இராவணின் தலைகள்

பத்தினையும் துண்டித்த மன்னவனான இராமனுக்கு

அதனால் வரும் பெரும் பாதகத்தைத் தீர்த்த சிவபெருமானைத்

தொழுவதற்கு நினைத்து சென்றார்

பெருமகிழ்ச்சி உண்டாக

மனம் கரைந்து உருகத் தொழுது எழுந்தார் சொல்லரசர்.

1673.

வானவர் தொழுகின்ற தனி முதல்வரான இறைவரை

திருஇராமேச்சுவரத்தில் வீற்றிருக்கும் சங்கரனை

எதிர் நின்று விருப்பம் மிகுந்த மொழியால்

திருநேரிசைகள் முதலான தமிழ்ப்பதிகங்கள் பாடி

நாவுக்கரசு நாயனார்

திருத்தொண்டு செய்து நலம் பெருகத் தங்கியிருந்தார்.

1674.

அங்கு பலநாட்கள் தங்கியிருந்து

நெற்றியில் கண்ணுடைய சிவபெருமானின் அடி சூடினார்

பிறகு அகன்றுபோய்

பொங்கு தமிழ்த் திருநாட்டில்

புறம்பணையால் சூழப்பட்ட திருநெல்வேலியும்

செங்கண் உடைய காளையூர்த்தியினரான இறைவர் இருக்கும்

திருக்கானப்பேர் முதலான தலங்கள் எல்லாமும் சென்று தொழுதார்.

(கானப்பேர் கோயில்- காளையார் கோயில்)

1675.

பலவகையாலும் தொழுது

சொல் தொடைகளால் ஆன வளமுடைய தமிழ்ப்பதிகம் பாடி

குற்றமில்லாத திருப்பணி செய்து

மனம் கசிவுற்று எப்போதும் கண்ணீர் ஒழுகும் கண்களுடன்

நீங்காமல் திருவடிகளை

உணர்ச்சியில் தழுவிக் கொண்ட சிந்தையுடன் ஒழுகி வந்தார்.

1676.

தேன்பொழியும் செந்தமிழ்நாட்டில் எங்கும் சென்று இறைஞ்சினார்

பாம்பு அணியும் இறைவர் தம்மை வணங்கிப் பணிவார்

சோழநாடு (பொன்னிநாடு) அணைந்து

நீரையுடைய வளநகர்கள் இன்னமும் போய் வணங்கி

பொய்யான பற்றை ஒழிக்கும் திருநாவுக்கரசர்

பூம்புகலூர் வந்தடைந்தார்.

1677.

நீர்நிலையில் சூழ்ந்த பூம்புகலூரில் வீற்றிருக்கும் இறைவரின்

புனித மலரடிகளை வணங்கி

நெகிழ்ந்து கரையும் மனதின் பரிவோடு

நாள்தோறும் திருமுற்றத்தில்

அன்புடைய கைத்தொண்டுகள் செய்து

மிக்க பெருங்காதலுடன் தங்கியிருந்தார்

அந்நாளில் எண் இலாத வளமைமிக்க

தமிழ்மாலைகளை அருளிச் செய்பவராகி-

1678.

நின்ற திருத்தாண்டகமும் நீடிய தனித்தாண்டகப் பதிகங்களும்

அம்பலத்தில் இறைவர் நின்று உறைகின்ற பதிகளை (இடங்களை)

வணங்கிப் போற்றும் திருத்தாண்டகமும்

கொன்றைமலர் சூடுகின்ற இறைவரிடம்

குறைந்து அடையும் கருத்தினை கொண்ட திருநேரிசையும்

பொருந்திய தனித்திரு நேரிசை முதலான பதிகங்களும்

தொடுத்தார் அமைத்தார்.

1679.

ஆரூயிர் திருவிருத்தமும் தசபுராணத் திருப்பதிகமும்

உலகம் போற்றி உய்யும் பாவநாசத் திருப்பதிகமும்

பலமுறையும் நேர்படும்படி நின்று

இறைவரை நினைத்து சர்க்கரைத் திருப்பதிகம் ஆகிய பதிகங்களால்

பேரரருள் கடலை

அடியார்க்கு அளிக்கும் சிவபெருமானைப் பாடினார்.

1680.

அந்நிலைமையில் திருநாவுக்கரசர் திருப்பணி செய்துவர

அவரது நல் நிலைமையை உலகறிய செய்வதற்காக

சிவபெருமான் அழகிய முற்றத்தில்

திருப்பணிக்காக நுழைந்த இடமெல்லாம்

பொன்னுடன் நவமணிகளும் வெளிப்பட அருள் செய்தார்.

1681.

செம்பொன்னும் நவமணியும் நெடுந்தொலைவு ஒளிவீசின

அவை சிவபெருமானின் திருமுற்றத்தில் உருள்கின்ற

மற்ற பருக்கைக் கற்களுடன் ஒத்திருந்ததால்

எம் தலைவரான நாவுக்கரசர்

உழவாரப்படையில் ஏந்திச் சென்று

மணம் வீச மலர்கின்ற மென் பூக்களான

தாமரைப் பொய்கையில் புகுமாறு வீசி எறிந்தார்.

1682.

புல்லோடும் கல்லோடும் பொன்னோடும் மணியோடும்

சொல்லோடும் வேறுபாடு இல்லை எனும் நிலையில் இருந்த

நல்லோரான நாயனாரின் முன்பு

திருப்புகலூர் இறைவரின் திருவருளால்

வில்லை ஒத்த நெற்றியுடைய பெண்கள்

வான் வழியே வந்து இறங்கினர்.

1683.

வானத்தில் உள்ள மின்னல் கொடிகள்

பூமிக்கு வந்து இறங்கியது போல

உரிய தானங்களிலிருந்து வரும் சுருதியால் உண்டாகும்

தக்க இனிமையுடன் இசை அமுதம் பரப்பும்

கொவ்வைக்கனி போன்ற வாயால் ஒளிபரப்ப

நீல மலர் போன்ற நீண்ட கண்களை வெளியில் பரப்பி

இசை பாடலாயினர்.

1684.

கற்பக மரத்தின் இளம் தளிர்கள் போன்ற அடிகள்

அழகிய சாரிகை செய்தது

செங்கழுநீர் மலர் அரும்பு போன்ற மென் விரல்கள்

வர்த்தனையுடன் சுழற்றிக் கைகள் பெயர்ந்தது

அழகு பொருந்தும் அக்கைகளின் வழியே

கயல்மீன் போன்ற கண்கள் புடை பெயர்ந்தன

பொன்னால் ஆன கொடிகள் ஒசிந்து ஆடுவது போல் ஆடினர்.

1685.

அவர்கள் யாவரும் ஆடினர் பாடினர்

மலர்மழை போலே பொழிந்தனர்

அவர்மேல் தழுபவர்கள் போல் சேர்ந்தனர்

கூந்தல் அவிழ இடை துவள ஓடினர்

மன்மதனுடன் மீளக்கூடியவராகி காம ஒளி பெருகினர்

நீண்ட உடை நழுவ நிற்பவருமாக ஆயினர்.

1686.

இவ்விதமாக தேவமங்கையர்கல்

எல்லாவிதமாகவும் செயல்புரிய

அத்தனின் திருவடி மீது வைத்த நினைவு அகலாமல்

அன்பு உருகும் மெய்யான தன்மை உணர்வு கொண்ட

மேலோரான நாவுக்கரசர்

தம் சித்த நிலை திரியாமல்

செய்யும் பணியிலேயே உறைந்து நின்றார்.

1687.

இந்த மாயத் தொடர்பான பிறவித் தொடக்காகிய

இருவினைகள் வடிவமானவர்களை நோக்கி

உம்மால் இங்கு ஆக வேண்டிய குறை யாது உடையேன் ?

நான் திருவாரூர் அம்மானுக்கு ஆளானேன்

நீவீர் வீணே அலைய வேண்டாம் என்று

“பொய்மாயப் பெரும் கடலுள்” எனத் தொடங்கும் திருத்தாண்டகம் புகன்றார்.

1688.

அத்தகு தேவமங்கையர் மிக நெருங்கி

மனமதன் வயப்பட்ட காதலுடையவர் புரிகின்ற

வஞ்சமெல்லாம் செய்தும்

பிறழாத ஓருணர்வில் பெரியவரான நாயனாரைப் பெயர்த்தெடுக்க

வேறு எந்தவொரு செயலும் செய்ய இயலாமல்

இறைஞ்சினர் அகன்றனர்.

1689.

இந்நிலைமையை உலகம் ஏழும் அறிந்து துதித்தது

நிலைத்த அன்பு பொருந்திய பக்தியின் வடிவமே ஆன வாகீசர்

ஒளியுடைய சடையுடைய சிவபெருமானின் மெய் அருள்

பொருந்த வருகின்ற அந்நிலைமை அண்மையில் கண்டு

சில நாள் அத்தலத்தில் தங்கியிருந்தார்.

1690.

நிலைபெற்ற அறிவினை உள் உணர்வினால் பெற்றதைப்

தம்மைச் சரண் அடைந்திடும் அடியேனான என்னைப்

புகலூர் இறைவன் தமது சேவடிக் கீழ் இருக்கச் செய்வார்

என்று எழுகின்ற கருத்துடன்

முன்பிறவி உணர்வின் முயற்சியினால்

திருவிருத்தங்கள் பல பாடினார்.

1691.

இந்த மண்ணுலகம் முதலான எல்லா உலகங்களும் போற்றும்படி

நிலைத்த திருத்தாண்டகமான

புண்ணியா ! உன்னடிக்கே போதுகின்றேன் எனப் புகன்று

அடைதற்கரிய சிவானந்தத்துடன் பரம ஞான வடிவே ஆகி

அண்ணலார் சிவபெருமானின் திருவடிக் கீழ்

திருநாவுக்கரசர் அமர்ந்திருந்தார்.

1692.

அவ்வாறு திருநாவுக்கரசர் அமர்ந்திருந்த

சித்திரை மாதத்துத் சதயத் திருநாளில்

தேவர்கள் பெய்த மலர்மழை இவ்வுலகில் நிறைய

வான் உலகத்தின் மேல்

எங்கும் ஐவகைத் துந்துபியின் ஒலியும் மேலே நிறைந்தது

நான்முகன் முதலான எல்லாவித யோனி பேதங்களில்

வந்த எல்லா உயிர்களும்

தமக்குள் உயிர்க்கு உயிராய் நிறைவாகப் பெற்றதால்

பெருமகிழ்ச்சி நிறைப் பெற்றன.

1693.

அப்பரமுனிவனின் மணமுடைய மலர் போன்ற

மென்மையான சிவந்த திருவடிகளின் ஆதரவால்

ஆண்ட திருநாவுக்கரசின் சரிதத்தை

அறிந்தபடி பகர்ந்தேன் அம்மேலான முனிவரின் பாதம் தொழுது

குலச்சிறை நாயனாரின்

முடிவிலாத திருத்தொண்டின் முயற்சியினை மொழிகின்றேன்.

திருநாவுக்கரசு நாயனார் புராணம்
முற்றிற்று.

(இறையருளால் தொடரும்)

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்