சுவாசலயம்

This entry is part of 31 in the series 20051021_Issue

புதியமாதவி


மெளனவெளியில்
என் இருத்தலை
நிச்சயப்படுத்தும்
சுவாசத்தைப்போல
சத்தமின்றி ஒலிக்கிறது
காற்றுடன் கைகோத்த
சங்கீதம்.

செவிப்பறைகள் தீண்டாத
ஒலியின் அலைகளில்
எழுதப்பட்டிருக்கிறது
இந்த சங்கீதத்தின் மொழி.

எப்போதும் என்னுள் இசைக்கும்
பின்னணி இசையாய்
என் சுவாசலயத்துடன்
உயிர்ப்பறவைக்கு மட்டும் கேட்கும்
உன்னத ராகத்தில்
பாடிக்கொண்டிருக்கிறது
அந்தப் பறவை.

பெயர் தெரியவில்லை.
பெயரிடவும் விருப்பமில்லை.
எனக்காகப் பாடுகிறதா ?
எல்லாமே கற்பனையா ?
விழிதிறக்க அச்சப்பட்டு
கண்மூடித்தடவிக்கொண்டிருக்கிறது
வெளிச்சத்தின் கைகள்.
கண்விழித்தால்
கண்ணில் பட்டுவிடும்
பட்டுப்போன மொட்டைமரங்களின்
நிழல்களில்லாத நிஜத்தைக் கண்டு.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை