கீதாஞ்சலி (44) எப்போதும் வருகிறானே! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 22 in the series 20051014_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


அமைதியாக அவன் வைக்கும்
காலடிகள்
அரவத்தை உன்
காதுகள் கேட்க வில்லையா ?
வருகிறான், வருகிறான், எப்போதும்
வருகிறானே!
வருகிறான் ஒவ்வொரு யுகமும்!
வருகிறான் ஒவ்வொரு கணமும்!
வருகிறான் ஒவ்வொரு நாளும்!
வருகிறான் ஒவ்வோர் இரவும்!
வருகிறான், வருகிறான், எப்போதும்
வருகிறானே!
வெவ்வேறான என் மனோநிலைப்
பின்னலில்
எண்ணற்ற கீதங்களை
இசைத்துப்
பாடி இருக்கிறேன்!
என் கான இசையெல்லாம்
முழக்கிடும் எக்காலம்,
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறான்,
என்பதை!

வேனற் காலச் சித்திரை மாதம்
கானகப் பாதையின் மீது
நறுமணம் பரவிடும்,
நாட்களில்
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறானே!
ஆடி மாதக்
கோடை மழை
கொட்டி முழக்கும் போது
இருண்ட வானில்
இரவு வேளைகளில்
கருமுகில் இடி இரதத்தில்,
வருகிறான், வருகிறான், அவன்
எப்போதும் வருகிறானே!
இடர்மேல் இடராய் அமுக்கி,
அவனது கால் மிதிப்புகள்
தடமிட்டு எனது
நெஞ்சத்தில் பளுவாய் அழுத்தும்!
ஆயினும் அவனது
மென்மையான பாதங்களின்
பொன்மயமான
தொடுகை எந்தன்
பூரிப்பில்
பேரொளி ஊட்டும்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 9, 2005)]

Series Navigation