எரியும் மழைத்துளிகள்

This entry is part of 22 in the series 20051006_Issue

புதிய மாதவி


====

என் ப்ரியமானவளே..
உன் ஊர்வலம்
என் தோள்களில்.
உன் மாலைகள் உதிர்ந்து
என் பாதங்களில்.
கடைசித்தடவையாக
உன் ஸ்பரிசத்தை
உணர்த்தும் மழைத்தூறலில்
நாம் நடந்தப் புல்வெளியில்
நான் மட்டும் நடக்கிறேன்
நீ இல்லாமல்.

சுமந்து கொண்டிருந்தவர்கள்
எரிந்து போன சாம்பலை
எடுத்து கரைத்து
கலைந்து போனார்கள்.
சுமக்க முடியாதப் பழியுடன்
உன் நினைவுகளைச்
சுமந்து கொண்டிருக்கிறது
என் இரவுகள்.

இருக்கும்போது
அணைக்காதக் கரங்கள்
இருளில் உன்னைத் தேடித்தேடி
என்னை விலக்குகிறது.
என்னிலிருந்து விடுபட்ட
என் விழிகள்
என்னில் கலந்த உன் நினைவுகளை
தேடித் தேடி சல்லடையாக்கி
இருண்டுப்போகிறது.
நானே அறியாமல் நான் சுமக்கும்
உன் நினைவுகளில்
கிழிந்து கொண்டிருக்கிறது
என் நாட்காட்டி.

….
புதியமாதவி, மும்பை.

(வாழ்வின் அர்த்தங்களை எனக்குக் கற்பித்த
என் இனிய தேவதை..
18-09-05 மண்ணிலிருந்து மறைந்த
செல்வி பாவைராஜன் நினைவாக)
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation