கவிதைகள்

This entry is part of 27 in the series 20050930_Issue

கீதா சங்கர்


இதுவும் கடந்து போகும்

இன்று வாழ்கிறேன்;
வெடி குண்டாலோ
வெம்பிய இயற்கையாலோ
இறக்காமல்…!!

வாழ்வதற்கு
வைராக்கியத்தை விட
வரம் தேவையாகிப்போனது….

இறப்பை
இறைவன் முடிவெடுத்தது போய்..
அதிர்ஷ்டம் ஆணையிடுகிறது…!

மாண்புமிகு பூமியில்
மதமும் மதம் சார்ந்த

மனக் கலவரங்களும்,
மன்னிக்க முடியாப் போர்களும்..
மகிழ்வழிந்த வாழ்க்கைகளும்..
பேயாய் நாயாய் மாறிப்போன
மனிதர்களும்..
தேவைக்கே போராடும்
தேய்மானங்களும்..
தேவைக்கதிகமாய்
தேக்கி வைத்த தேரைகளும்….
நிரம்பி வழிகின்றன..

இலையுதிர் கால மரங்களாய்..
இவர்களை..
இங்கிதமாய், உதிர்த்து விட்டு,
மனிதம் மட்டுமே
மனங்களான
மா மனிதர்கள்
மண்ணில் தோன்றும் போது
புதியதாய் பிறக்கும் உலகு.

ஜனன இரத்தம் தவிர
ஜனங்களின் இரத்தம்
ஜனனியில் சிந்தக்கூடாது…

ஆணும் பெண்ணும்
ஆக இரண்டு மதம்..

நரகமாய் போன நகரங்களை
நாகரீகமாய் மாற்றவும்..
நாசகார சக்திகளை
நாறிப்போகச் செய்யவும்….

மண்ணும் பொன்னுமான
மாய வலையில்
மயங்கிப்போகாமல்,
மடக்கிப் போட
மனது வைப்போம்….

எண் சாண் வயிறு
ஏட்டுக் கல்வி
எட்டு முழ வேட்டி
எட்டடி நிலம்
போதாதா வாழ்வதற்கு….

ஆதிகாலம் போல,
கதிரவனைக் கை தொழுதால்,
பொதுவாகப் போய்விடும்!
புண்ணிய பூமியில்
பிரச்சனை எழாது.

உலகத்தின் வரைபடத்தில்
எல்லைக் கோடுகளை
எடுத்து விட்டால்….
ஓருலகமாய் வாழ்ந்திடுவோம்….

நம்பிக்கை இருக்கிறது….

இதுவும் கடந்து போகும்
புதியதோர் உலகம்
இவ்வுலகம் காணும்.


யுத்தம்

வெறிக்கைகளால்
பலரது ரத்த துளிகளை
தெறிக்கச் செய்து
பல பெண்களின்
நெற்றிப் பொட்டுகளை
இழக்கச் செய்து
தான் பொட்டிட்டுக் கொண்டது
யுத்தம்!!

எழுதக் கூடாத வாழ்க்கையை
எம் பெண்களுக்கு
எழுதி விட்டு,
ஏடுகளில்
எழுத்தாகிப்போனது.

அப்போதெல்லாம் இயற்கை
சொல்லாமல் செய்த நாசத்தை
இப்போதோ யுத்தம்
சொல்லி விட்டு செய்கிறது.

மனிதர்களின்
மன்னிக்கும் மனதை
மடக்கிப் போட்டுக் கொண்டு
மாசு படுத்திச் செல்கிறது.

மனிதன்
யுத்தத்தில் வென்றது போய்,
இப்போது
யுத்தமில்லா உலகை
யுக்தியுடன் வெல்ல
யக்ஞும் செய்ய வேண்டும்!

போதும்
யுத்தத்திற்குக் கூழைக்
கும்பிடு இட்டது.
யுத்தத்தைக் காலால்
எட்டி உதைக்கும்
காலம் வந்து விட்டது.

யுத்தமே!
மனித யுத்தத்திற்கு
சித்தமாயிரு!
மனிதன்
விழித்து விட்டான்.


எனக்கு கொஞ்சம் சோகம் வேண்டும்

சோகத்திலும் ஒருசுகம் உண்டு.

மனதில் மெல்லிய ராகம் இசைக்க
வாழ்வில் சோகமும் சுகமுமாக….
மனிதர்கள் நடுவில்.. ..சுவை உண்டு.
பிரச்னைகள் வரும் போது
ஓடிய கால் நின்று
ஓரு நிலையாய்
மனம் குவிந்து சீராகும்.
இது நாள் தேடிய
நண்பனும் எதிரியும்
தெளிவாகும்.

நேர்க் கோட்டில் போகும்
நிர்ணயித்த வாழ்க்கையை
நிிறுத்தி வைக்கும்
கடிவாளக் குதிரை
கண்ணை சுழற்றி பார்க்கும்.
இறந்த, நிகழ், எதிர்
காலங்கள் அலசப்படும்.

பிரச்னைகளே இல்லாத போது
பயம் வரும்-
பெரிதாய் என்ன வருமோ என்று.

தினசரி உணவு
செரிப்பதற்கு விரதம்
தினசரி நடைமுறை
சரிபடுத்த சோகம்.

நிழலைப் போல
சோகம்- நம்மோடு
இழைந்தே இருக்கும்.

இரவுக்கு பின் பகலாய்
சோகத்திற்கு பின் சுகத்தை
மனம் எதிர்நோக்கும்.
குளிா; கால வெயிலாய்
அவ்வபோது தேவை
சோகம் வாழ்க்கையில்.

புயலுக்கு பின் அமைதியாய்
சோகத்திற்கு பின் மனம்
நிதானம் காக்கும்.
அலசிஆராய்ந்து முடிவெடுக்கும்.
பழைய சோகம் நினைத்து பார்த்து
பரிதவிக்கும்.
அனுபவத்தில் பாடம் கற்கும்.
திரும்ப தவறு
நேராமல் தடுக்கும்.
கர்வம் கொண்ட போதெல்லாம்
இறந்த கால கஷ்டம்
மறக்காமல் நினைவு வரும்.
யதார்த்தம் தரும்.

வாழ்க்கையை உணர்த்தும்
இந்த சோகம் எனக்கு பிடிக்கும்.
நிதானம் உணர்த்தும்
இந்த சோகம்
எனக்கு வேண்டும்-அவ்வப்போது
என்னை உணர்த்த…


ஆயிரம் முகம் உடையாள்..

மங்கையராய் பிறப்பதற்கு
மாதவம் செய்துள்ளோம்!!
முந்தைய மாதர்களை
முந்தி வருகிறோம்!!

பள்ளிப்படிப்புக்கு
புள்ளி வைத்தது
பழைய கதையாயிற்று.

பெண்ணைப் பெற்றால்
பாரமாய் எண்ணியது
மண் மூடிப்போயாச்சு.

புத்திசாலி பெறுவாளாம்
தலைச்சனை பெண்ணாய்.
நிஜம் தான்!
அலுவலகத்தில் அன்னை
ஆழ்ந்து பணியாற்ற
அன்னையாயிருந்து
உடன் பிறந்தவர்களை
கவனிக்கிறாளே!!

பத்து வயதில் பையன்கள்
பந்து விளையாட
கண்மணிகளோ
கணிணியில்
கலக்குகிறார்கள்..

பூப்பெய்தும் போதே
பூ விழியாள்
குறிக்கோளை
குறித்துக்கொள்கிறாள்!!
டாக்டரையா பொறியாளரையா ?
எவரைத்திருமணம் செய்வதென்பதல்ல.

டாக்டராவதா ? பொறியாளராவதா ? ?
பொறித்துக் கொள்கிறாள்
பெண்- பொன்மனதில்.

ஈரெட்டு வயதில்
அடுப்படியில் கால்வைத்தது
அந்தக்காலம்.
பத்து வயதிலேயே
அடுப்படியின்
அடிப்படையை
கற்றுத் தெளிகிறாள்;.

பாட்டு, பரதம்
கைவினை என-
தெரியாதது
இல்லையென ஆயிற்று.
இருபத்துநான்குமணி
போதாமல் போயிற்று.

நுழைவுத்தேர்விலிருந்து
விண்ணப்பபடிவம் வரை
தனியாளாய்த்
தேர்ந்தெடுக்கிறாள் பெண்.

கடனாய்ப் படிக்காமல்,
கடனுக்குப் படிக்கிறாள்.
ஆம்.
கல்விக்குக் கடனை,
வங்கியில் வாங்கி,
கற்ற பின்
வேலை வாங்கி,
அடைத்து முடிக்கிறாள்.

மது, மாது, புகையென
தரிசு நிலமாய்; போகாமல்
விளைநிலமாய் ஆகிறாள்.

இப்போதெல்லாம், இவளுடைய
தகப்பனெனவும்>கணவனெனவும்
அடையாளம் காட்டிக்கொள்ள
ஆவலாயுள்ளனர்-
ஆண்கள்.

மகளெனவும் மருமகளெனவும்
சகோதரியெனவும் அண்ணியெனவும்
மனைவியெனவும் அன்னையெனவும்
அலுவலரெனவும் தோழியெனவும்
ஆயிரம் முகமாயிற்று.
எம் குலப் பெண்களுக்கு.

இரண்டு கைகளை
இணைத்து வைத்து
ஈடில்லாமல் செய்து விட்டாள்.

கல்பனா சாவ்லா, இந்திராநுாயி
வகுத்த பாதையில்
நித்தமும் பெண்கள்
சித்தமாய் போகிறார்கள்.
பெண்ணைப் பெற்றவர்கள்
பெறும் பேறு
பெற்றவர்களாகிறார்கள்.

ஆயிரம் முகமுமுண்டு
ஆயிரம் கைகளுமுண்டு
எம் பெண்களுக்கு!!


கண்ணுக்குத் தீ எழுது!

பெண்ணே!
இத்தனை நாளாய்
உன் கண்ணுக்கு
மை எழுதியது போதும்.
இனி தீ எழுதி
நீ-
பழகு!!

நெற்றிப் பொட்டில்
நிலவை தூக்கி எறி
சூரியனை வைத்துக் கொள்.!

உதட்டில் சாயம் பூசியது
போதும்.
எரிமலைக் குழம்பை
ஏற்றிக் கொள்!

வண்ணப் பூக்களை
சூடிக் கொண்டது போதும்.
அக்னி தணல்களை
தலையில் சூடு!

ஆடையுடன்
அக்னிக் கவசத்தையும்
அணிந்து கொள்!

பிறந்த பெண் குழந்தைக்கு
பெரிய விழி வேணுமென
மையிட்டு அழகு செய்து
ஏழு வயதில்
காம வேட்டைக்கு
பலியிட்டது போதும்.

இனி.
பெண்ணுக்கு பிறந்தது முதலே
ரெளத்திரம் பழக்கு.

கண்ணுக்கு மை எழுதி
மயங்கச் செய்தது போதும்.
இனி-
கண்ணுக்கு தீ எழுதி
தீவிரமாக்கு.

தீ எழுதி
தீண்டுபவரை தீர்த்துக் கட்டு.
சுட்டெரித்து பஸ்பமாக்கு.

சகியே!
சகித்தது போதும்.
உன் சுட்டு விழிச் சுடரால்
சூரியனையும் சுட்டு விடு.
நிலவாய் தணிந்தது போதும்.
நெருப்பைக் கக்கி விடு.
வார்த்தையால்
விளையாடுபவனின் மேல்
அமிலத்தை உமிழ்.

கோலமும் ஜாலமும் பயின்றது போதும்
சிலம்பும் கராத்தேவும்
பயிற்றுக் கொடு!

உனக்கில் இருக்கும்
ஆண்மையை
வெளியில் அரங்கேற்று.

உன்னால் எதுவும்
முடியுமென
உன் திறனை
எதிலும் பங்கேற்று.

கண்ணுக்கு மை எழுதி
மயங்கச் செய்தது போதும்.
இனி-
கண்ணுக்கு தீ எழுதி
தீவிரமாக்கு.


நாணல்களாய் வாழ

கிணற்றுத் தவளைக் கூட்டம்
காதல் மணம் புரிந்தவரை
மயக்கத்தில் முடிவெடுத்ததாய்
உளறுகிறது.

தனக்குத் தானே
விலை பேசிக் கொண்ட
பேதைகள்- இவர்கள்
பேத்தித் திரிவதை
பெரிது படுத்தாதீர்கள்;

இருவர் நல்ல தனத்தையும்
முலதனமாகக் கொண்டு
நாணல்களாய் வாழுங்கள்.

உள்ளங்கள் கொள்ளையில்
உலகப் பட எல்லைகள்
உருவம் இல்லாது போகட்டும்.

அன்புப் போரில்
அகிலப் போர்
காணாமல் போகட்டும்.

ஜாதி மத இன நிற
மனித பேதம் மறைந்து
மாக்களாய் இல்லாது
மக்களாய் வாழ்ந்திட.

ஆதலினால் காதல்
செய்யுங்கள்
உலகத்தீரே!!

உயிருடன் இருப்பது
இல்லை வாழ்க்கை.
உயிர்ப்பாய் இருப்பதே
வாழ்க்கை.!!

ஆதலினால் காதல்
செய்யுங்கள்
உலகத்தீரே!!


யாதுமாகி நின்றாய் நீ!!

நான்
நானாகவேயிருந்த போது
நானாய் மட்டுமிருந்த போது
நாட்களும் நட்புகளும்
முட்களாய் உறுத்தியது.
நர்ட்காட்டி
நத்தையாய் நகர்ந்தது.
வருங்காலம் என்ன
வைத்துள்ளது ?
நெடுங்காலத்துக் கேள்வி.

வானமும் வையமும்
வாழ்ந்திடாத நாட்களும்
சுயம் அறியாத சூரியனாய்
சூம்பிய தேய் நிலவாய்
சூடர் இல்லாத தீபமாய்
சூனியமாய்ப் போயின.

வந்தாய் நீ
வானவில்லாய்!
வர்ணஜாலமானது
வாழ்க்கை !!

யதார்த்தத்தைக் கற்றேன்.
வார்த்தைகளில்
சித்தாந்தமாய்
வாழ்ந்து பார்த்தேன்.

சின்ன சின்ன
மின்னிய கவிதைகளாய்
நம் நாட்கள்!

என் வாழ்வில்
நீ வாராது போயிருந்தால்
நத்தையாய்
உள்வாங்கியிருப்பேன்.

கடலின் அலையிலும்
கருணையைக் கற்றேன்
கூட்டத்திலும் என்
வட்டத்தில் நான்
தனித்துவத்தை
நிலை நாட்ட
திடம் தந்தவன் நீ!!

நீ
கற்றுக் கொண்டாய்
கற்றுக் கொடுத்தாய்
தாயும் சேயுமாகி
தந்தையும் குருவுமாகி
யாதுமாகி நின்றாய்.!!


தொலைந்து போன என் பெயர்

எழுந்தது முதல்
எனக்காக வாழ்ந்தது
என்றோ நடந்ததாய்
எண்ணிப் பார்க்கிறேன்.

கையும் காலும் நகர்கின்றன
வாழ்க்கையும் நகர்கின்றது
மூளை மட்டும் மரத்துப் போனது
மூன்று முடிச்சு விழுந்த பிறகு!!

செய்தித்தாளை நான் படித்தால்
அதுவே தலைப்புச் செய்தியாயிற்று.
குழந்தை மலத்தை துடைக்கும் போது
ஏதோ தேதி பழைய பேப்பர்
அப்போது படிப்பேன் அதை.

மகளின் கட்டுரைப் போட்டிக்கு
மல்லுக்கட்டி எழுதித் தந்த போது
கனவாய் நினைத்தேன்
என் பெயர்
கவிதாயினியை.

பையன் உணவுப் பையை
மறந்த போது
தூக்கி ஓடிய கால்கள்
தூசி தட்டியது
என் பெயர்
ஓட்ட வீராங்கனை என்று.

அறிவியல் படம் பார்த்து
ஆசிரியை போட்ட நன்று
ஞுாபகம் படுத்தியது
என் பெயர்
ஓவியை என்று.

வீட்டு வேலையை
திட்டமிட்டு செய்திட்ட போது
அலுவலகத்தில் வாங்கிய
என் பெயர்
நல்ல திட்டமிட்டாளர் என்று.

மரத்துப் போன
மூளையும்
செல்லரித்துப் போன
இதயமும்
புத்துயிர் பெற்று
தொலைந்து போன
என் திறனைத்
தேடத் தொடங்கியது.


சும்மா இரு

என் வரியால்
ஏனையரை மாற்றுவது
எனது தொழிலன்று.

நீயும்
படிப்பது போலெல்லாம்
மாறத் துடிக்காதே.

இதுவாகவோ அதுவாகவோ
இல்லாமல்
இயல்பாய் இரு.

உலகிற்காக இதையோ
உலகிற்காக அதையோ
துறக்காதே.

நீ
நீயாயிரு.

காலையில் இறக்காமல்
கண் திறந்தால்
வாழ – இன்னுமொரு தினம்.
அதுவே நமக்கு
சுகாநுபவம்.

உன் திறமை,காலம்
கொடுத்து பெறுகிறாய்.
பணமும் பெருமையும்,
பெரும் பொழுது
உன்னை இழந்துவிட்டு

நீயே சிறந்தவனாய் இருக்க
நாயாய் சண்டையிட்டு
மூச்சு விடுவதைக் கூட
முனகித் தான் செய்கிறாய்.
முடிவில்
மனதில்
மரணமடைகிறாய்.

உலகை காப்பாற்றுவது
உன் கடனன்று.
உலகை படைத்தவர்
உன்னிப்பாய் பார்த்துக் கொள்வார்.

கற்கிறேனென
சுற்றியலைந்தது போதும்.
பற்றற்று இருக்க
பயின்று கொள்

சும்மா இரு.
அது போதும்;…

—-

geethashanker67@hotmail.com

Series Navigation