‘ ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘

This entry is part of 27 in the series 20050930_Issue

தேவமைந்தன்


‘உயர்ந்த நீதியை வழங்கும் என்று
மக்கள் நம்பும் நீதிமன்ற வாயிலும்
கொடுமை என்று அவர்களே அஞ்சும்
நரக வாயிலும் ஒன்றே; ஏனெனில்
எந்தப் பொழுதில் போக நேரினும்
திறந்தே இருக்கும் அவ்விரு வாயிலும் ‘
என்பது ஆங்கில நாட்டார் பழமொழி.
அரைமணி நேர வானப் பயணத்
தொலைவு மட்டுமே உள்ள பிரான்சு
முழுவதும் போற்றும் சிந்தனை யாளர்
ழான்போல் சார்த்(த)ரோ
பலபடி மேலே போனார்.
‘நரகம் என்பது வேறே எங்கும்
இல்லை; இந்த உலகில் வாழும்
ஒவ்வொரு வருக்கும் உண்மையில் நரகம்
மற்றவர் மட்டுமே ‘ —
என்றார். அதனை விளக்கும்
அமர நாடகம் ‘மீள முடியாது. ‘
இனிய சுதந்திரம் இன்னும் உயிருடன்
இருக்கும் நாட்டின் இரவு விடுதியில்
அரவு நடனம் ஆடும் மகளிரும்
விடுப்புப் போட்டுப் பார்த்து ரசிக்கும்
அரிய நாடகம். அதனை
அடிக்கடி படித்தும் அரங்கம் சென்று
பார்த்தும் வியந்தும் பலபட அதனை
‘வியாக்யானம் ‘ பண்ணியும்
யூரோ ‘வின் மாற்று மதிப்பைப் பற்றிக்
கொஞ்சமும் கவலை கொள்ளாது என்னுடன்
தொலைபேசும் எனது நெருங்கிய உறவினர்
ஒருவர் குறித்துநான் மற்றுமோர் உறவிடம்
உயர்த்திச் சொன்னேன். ‘ ‘அவரா ? ‘ ‘
என்று கேட்டுப் பல்லைக் கடித்தவர்,
‘ ‘எங்கள் இல்லம் ஒவ்வொன் றுக்கும்
வந்துஅவர் தங்கிப் போனபின் வந்திடும்
‘டெலிஃபோன் பில் ‘லைக் கண்டு
கதவின் சந்தில் கைவரல் விட்டதால்
நொந்தழும் பிள்ளைபோல் சர்வமும் வெறுத்து
வாய்த்தவ ளிடமும் வாங்கிக் கட்டி
வாடும் பாவிகள் நாங்கள்…
சொன்னதாய் அவரிடம் மறக்காமல் சொல்லும்:
‘ ‘மற்றவர்கள் நரகம் ‘- அவருக் கென்றால்,
எங்கள் அத்தனைப் பேர்க்கும்
அவர் ஒருவர்தான் நரகம். ‘ ‘
சந்தேகம் மெல்லப் புகுந்தது எனக்குள்..
ழான்போல் சார்த்தர் இப்படி எவர்க்கும்
‘டெலிபோன் பில் ‘லைக் கட்டியழ நேர்ந்ததோ ?….
pasu2tamil@dataone.in

Series Navigation