ஒரு கவிதாமரத்தின் இறப்பு

This entry is part of 26 in the series 20050923_Issue

சாரங்கா தயாநந்தன்


தலையணைகளைச் சரிப்படுத்துகிற
வழமையான ஒரு காலைப் பகலில்
கிளைத்திருந்த துளிர்கள்
யாவையும் தொலைத்திருக்கும்
கவிதாமரம் மனசிடறிற்று.
மஞ்சளாகி
மூத்துதிரா அதன் திடார் மரணம்
உன்னால்
என் மோதிரவிரலில் ஏற்றப்பட்டிருந்த
பொன்விலங்கினால் நிகழ்ந்தது.
ஒரு அழகிய நதி
குதியல் தொலைத்து
குளமாகிய
அதே கணத்தில் இருந்து தான்
என் கழுத்தில் ஆடுகிறது
உன்னால் இடப்பட்ட மூன்று முடிச்சு.
யாருமருகற்ற பொழுதுகளில்
நினைவுகள் குலுங்கிச்
சரிகின்றன,
நீளவானில் வெடித்துதிருகிற
நட்சத்திரவால்களின் துரதிஷ்டத்தோடு…
கனவுகளின் மீதேறியிருந்த
வானவில் துகில்
வர்ணம் தொலைத்துள்ளதில்
கனவுகளும்
மீத வெற்று நனவுகளோடு
சேர்ந்துருள்கின்றன
இருளில் பிணைதலுற்ற
இரு பாம்புகளாய்.
எனினும்….
முன்பொருநாளில்
மனசு தேங்கிய
பச்சிலைகளின் வாசத்தில் மயங்கி
விழிமூடிக் கிடக்கிறேன்
வாயில் மணி
உன் விரல் தொட்டு
அழும் வரைக்கும்….
—-
nanthasaranga@gmail.com

Series Navigation