கீதாஞ்சலி (41) படகில் நீயும் நானும்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 26 in the series 20050923_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


கீழ்வானம் வெளுக்கும் முன்னே,
வாயில் முணுமுணுத்தேன்:
நீயும் நானும் மட்டும்
நீண்ட பயணம் துவங்க வேண்டும்,
படகு ஒன்றிலே!
அவனியில் நம் பயணத்தை
அறியக் கூடாது எந்த ஆத்மாவும்!
எந்த தேசம் நோக்கி
ஏகுவோம் என்பதும்,
முடிவில்லாப் பயணத்தை
தொடருவோம் என்பதும்
தெரிய வேண்டாம்!
கங்கு கரையற்ற அந்த பரந்த
கடல் வெளியில்
உந்தன் மெளனப் புன்னகை
எந்தன் செவிகளில் பட்டால்,
இன்னிசையில் உருக்கிடும்
கான வெள்ளம்
பொங்கி எழும் எனக்கு,
கட்டுப் படாத அலைகள் போல,
பந்த பாசப் பிணைப் பெல்லாம்
விட்டு விலகி!

அந்த வேளை நமக்கின்னும்
வந்திட வில்லையா ?
நின் பணிகள் யாவும் முடியாமல்
நீடித்துச் செல்பவையா ?
அந்தோ!
மாலை மங்கிய வெளியில்
கடற்கரை முழுதும்
மப்பு மந்தாரம்
அப்பி விட்டது!
கூடுகளை நோக்கிக் கூட்டமாய்
நாடி வருகின்றன,
கடற் பறவைகள்!
அந்தி மயங்கும் சமயம்,
நங்கூரச் சங்கிலி நீங்கியதும்,
நகரத் துவங்கும்
படகில் நாம்
கடல் அடிவானில் அத்தமிக்கும்,
சூரியனின்
கடைசி மினுப்புக் காட்சி போல்
காரிருளில்
மறைந்து போவோ மென
யார் அறிவார் ?

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 18, 2005)]

Series Navigation