புண்ணாடை

This entry is part of 29 in the series 20050902_Issue

பிச்சினிக்காடு இளங்கோ


நண்பா!
எனக்காக நீ
நினைப்பதும் நடப்பதும்
எத்தனையோ…

அன்றும் எனக்காக
நீ
அந்தக்கடைகளில்
உன்
கரிசன விசாரணையில்
மலர்ந்தன
$100
$75
$50
$15
பொன்னாடைமுகங்கள்

கைகுலுக்கி
நாடிபிடித்து
$15யில்தான்
பத்திரப்படுத்தினாய்
என்மீதான அபிமானத்தை

உன்
இதய அரண்மனையில்
நூறு மதிப்பெண் உனக்கு

நீ
அங்கிகரிக்கிறாய்
அங்கீகரிக்கப்படுகிறாய்
அங்கீகரிக்கும்போது
மதிப்பெண்ணைக் குறைத்தும்
அங்கீகரிக்கப்படும்போது
மதிப்பெண்ணைக்கூட்டியும்
மனப்பால் குடிக்கும்
பூனைக்குட்டியாய் நீ

உனக்கு மட்டுமே அந்த
அபூர்வகற்பனை எளிது….!

அதற்காக என்னை
மனத்தராசில்
எடைபோட்டிருக்கத் தேவையில்லை

தவறு
உன்னுடையதுமில்லை

இல்லாத ஒன்றை
இருப்பதாய்க் காட்டும்
வழக்கமும் உனக்கில்லை

நீராம்பலாய்
நீ

நீர்மட்டம்
குறைவாய் இருக்கையில்
நீர் மட்டும்
எப்படி உயரத்தில் ?

நூலாடையைப்
பொன்னாடையாய்ப் பெருமிதப்படும்
நீ
பொன்னாடை தேர்வில்மட்டும்
பெருமிதமாய் இருந்ததில்லை

என் கேள்விக்குச்
சடங்குதான் முக்கியம்
சரக்கின் விலையன்று…
மெளனப்பதில் உன்னிடம்

உன்னிடம் நானும்
என்னிடத்தில் நீயும்
சடங்குகளாலும் இல்லை
என்பதே முக்கியம்.

—-
pichinikkaduelango@yahoo.com

Series Navigation