கீதாஞ்சலி (38) என்னிதயம் நாடுவது உன்னை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part of 29 in the series 20050902_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நெஞ்சம் நாடுவது உன்னை என்றும்,
நின்னை மட்டுமே, என்றும்
வேண்டிக் கொண்டிருக்கும்,
என்னிதயம்,
நிற்காமல், முடிவில்லாமல்
மீண்டும், மீண்டும்!
இராப் பகலாய்,
என் மனதைத் திசைமாற்றும்
உலக இச்சைகள் எல்லாம்
உட்கருவில்
முற்றும் கூடாய்ப் போன,
வெற்று மாயைகளே!

இதயம் சோர்வடைந்து,
இரவானது தன்னிருள் குழிக்குள்ளே
பரிதியின் வெளிச்சம் வேண்டி
பதுக்கி வைத்திருக்கும்
பத்திரமாக! அதுபோல்
ஆழ்ந்து மெய்மறந்த நிலையில்
ஆலயமணியாய்
ஓலமிடும் எந்தன் கூக்குரல்:
உன்னை நான் நாடுவதை!
உன்னை மட்டும்
தேடுவதை!

சூறாவளிக் காற்று,
சீரான அமைதியைச் சீரழித்து
தீவிரமாய் அடித்த பின்
ஓய்ந்து போகும்! ஆயினும்,
பேய்ப்புயல் இறுதியில்
திரும்பவும்
தேடிச் செல்லும் அமைதியை!
அதுபோல்,
உன் கனிவு அன்பினை எதிர்த்து
இன்னமும்
போரிடும் என் வெறிக்குணம்
ஆரவாரக் குரல் எழுப்பும்:
என்னுளம் நாடுவது உன்னை என்று!
எனக்கு மட்டும் நீ
வேண்டும் என்று!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 28, 2005)]

Series Navigation