பெரியபுராணம் – 54 – ( திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி )

This entry is part [part not set] of 29 in the series 20050902_Issue

பா. சத்தியமோகன்


1452.

பெரிய பெருமாட்டி உமாதேவியுடன் தோணி மீது

உயிர்களைப் பேணி வீற்றிருந்து அருளும் பிரான் முன் நின்றார்

பாவுறு செந்தமிழ்மாலையாக பக்தியோடும்

“பார் கொண்டு மூடி” எனும் பதிகம் போற்றிப் பாடினார்

அங்கிருந்து நீங்க அரிய வகையில் வெளியில் வந்து

திருஞானசம்பந்தர் மடத்தில் எழுந்தருளி அமுது செய்தார்

பொருந்திய நண்புடன் கூடிய கேண்மை அன்று போலவே

என்றும் வளரும்படி உடனாகப் பலநாட்கள் இருந்த காலத்தில் –

1453.

அவ்விதமாக திருநாவுக்கரசரும் ஆளுடைப் பிள்ளையாரும்

அளவளாவுவர் மகிழ்ச்சியாக.

அளவிலாமல் பெருகியது சித்த நெகிழ்ச்சி

அவ்வித நாட்களில் திருநாவுக்கரசு திருவுள்ளம்தனில்

நஞ்சு பொருந்திய அழகான கழுத்துடைய சிவபெருமான்

காவிரி பாயும் சோழநாட்டில்

எழுந்தருளிய இடமெல்லாம் வணங்கிப் போற்றிட

உள்ளத்தில் எழுந்த பெரும் காதலை

ஞானசம்பந்தருக்கு விளம்பினார் அவரும் அதை ஒப்பினார்.

1454.

திருநாவுக்கரசர் புறப்பட

அவருடன் ஞானசம்பந்தரும் கிளம்பி

திருக்கோலக்கா சென்று இறைஞ்சி அன்பு விடைபெற்று மீண்டார்

நாவுக்கரசரும் விடைபெற்று

வேதநாயகரான சிவபெருமான் விரும்பும் பதிகளான

பெருமையால் நீண்ட திருக்கருப்பறியலூர், திருப்புன்கூர்

திருநீடூர் , குறுக்கை வீரட்டம், திருநின்றியூர்

காணும் தகைமையுடைய திருக்குறுக்கை ஆகிய இவை சேர்ந்து

நெற்றிக்கண் உடையவரின் திருவடி வணங்கிச் செல்பவராகி-

1455.

நீர் மேவும் காவிரியின் இருகரையும் சார்ந்து

காளைக்கொடி உயர்த்திய சிவபெருமானின்

“திருச்செம்பொன்பள்ளி” பாடினார்

சோலைகள் உயர்ந்து சூழ்ந்த மயிலாடுதுறையையும்

காவிரியின் இருகரைகளில் உள்ள

திருத்துருத்தி, வேள்விக்குடி, திருஎதிர்கொள்குடி

ஆகியன தொழுது

செந்தமிழ் மாலையான பதிகங்கள் பாடினார் போற்றினார்

திருக்கோடிக்கா சென்றார் வணங்கினார்

திருவாவடுதுறை சார்ந்தார்.

1456.

திருவாவடுதுறை இறைவரை அடைந்து உய்ந்தேன்

என்ற கருத்துடைய

அளவுபடாத திருத்தாண்டகம் முதலில் அருளிச் செய்து

பின்னர் திருக்குறுந்தொகையும் நேரிசையும்

சந்த விருத்தங்கள் எனும்

வேறு வேறு பாக்களின் தன்மை மிக்க செந்தமிழ் மாலையால்

திருப்பள்ளித்தாமம் பலவும் சாத்தினார்

மிக்கெழுந்த பரிவோடும்

உலகம் போற்றுமாறு பலநாட்கள் அங்கு தங்கி

இடைவிடாது நினைத்துச் செய்யும்

திருத்தொண்டான உழவாரப் பணியைப் போற்றிச் செய்து வந்தார்.

1457.

எறியும் நீரால் பொன்னும் மணியும் சிதறும் அலைகள் கொண்ட

காவிரிக் கரையிலுள்ள

திருவிடைமருதூர் சென்று எய்தி அன்போடு

மான்கன்றைக் கையிலுடைய இறைவரை மிக வணங்கி

வளமையுடையத் தமிழ்ப்பதிக பாமாலை பல மகிழச்சாத்தினார்

புள்ளியுடைய பாம்புகளைப் புனைந்த இறைவரைத்

திருநாகேசுரத்தில் வணங்கி

அரிய தமிழ் மாலை புனைந்து போற்றினார் பிறகு

நிரம்பிய நன்மலர் சோலைகள் கொண்ட

பழையாறை எனும் தலம் எய்தி

திருச்சத்திமுற்றத்தில் சென்று சேர்ந்தார்.

1458.

திருச்சத்திமுற்றம் என்றபதி சென்று சேர்ந்து

அங்கு வீற்றிருக்கும் சிவக்கொழுந்தீசரை

மலையரசன் மகளான பார்வதியம்மை

தன் மனக்காதல் குலவும் பூசை ஏற்று அருளும்

என்றும் இனிய இறைவரைத் தொழுது

இயல்பாய்ச் செய்யும் திருப்பணிகள் செய்து

மொழி மாலைகள் சாத்துவார்.

1459.

கோவாய் முடுகி எனத் தொடங்கி

கூற்றம் வந்து உயிர் கொண்டு செல்லுமுன்

ய வார்ந்த திருவடியை என் தலைமேல் பொறித்து வைப்பாய் எனப்புகன்று

நாவில் நிறைந்த திருப்பதிகம் பாடவும்

இறைவர் அருள் செய்தார்-

“நீ திருநல்லூரில் வா. வா”

வணங்கி மகிழ்ந்தார் வாகீசர்.

1460.

நன்மை பெருகும் அருள்நெறியின் வழி வந்து

நிலைத்த திருத்தொண்டனார் வணங்கி மகிழ்ந்து எழும் போதில்

“உனது நினைப்பை முடிக்கின்றோம்” என்று அவர் தம் தலைமீது

பாதமலர் சூட்டினான் சிவபெருமான்.

1461.

“நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார்” எனும்

திருத்தாண்டகம் புனைந்து போற்றி இசைத்தார்

புனிதரான இறைவரை நினைத்து உருகி விழுந்தெழுந்து

நிறைந்து மலர்ந்து

குறையாத செல்வத்தைப்

பெரிதும் பெற்றுக் களிக்கும் வறியவன்போல் மனம் தழைத்தார்.

1462.

நாவுக்கு மன்னர்

திருநல்லூரில்

சிவபெருமானிடம் மேவுற்ற திருப்பணிகள் விரும்பி நாளும் செய்து

தமிழ்மாலை பலவும் பாடி பணிந்து ஏத்தித்

தெய்வம் பொருந்தும் திருத்தொண்டு செய்தொழுகிய நாளில்-

1463.

திருக்கருகாவூர் முதலாகிய

நெற்றித்திருவிழியான் அமர்ந்து அருளும்

திருவாவூர், திருப்பாலைத்துறை இன்னும் பிறவும் போய்

இறையை இறைஞ்சி

பெருகும் ஆர்வத்துடன் திருத்தொண்டு செய்து

பெருந்திருநல்லூரை

ஒருகாலும் பிரியாமல் உள்ளம் நெகிழ்ந்துருகிப் பணிகின்றார்.

1464.

தம்மை ஆளும் நாயகன் தன் அருள் பெற்றதும்

அங்கிருந்து அகன்று போய்

வாளைமீன்கள் பாயும் நீரின் சிறப்புடைய

“திருப்பழனம்” அருகில் சேர்ந்து

விஷம் உண்டு இருண்ட கண்டரான நீலகண்டரும்

பாம்புகள் அணிகலனாக அணிந்து ஊழியில் ஆடுவபவருமான

இறைவரின் திருவடிகளை நேரே வணங்கும் பேற்றைப் பெற்றார்.

1465.

அந்த இடத்தைச் சூழ்ந்த திருப்பதியில்

சிவபெருமான் மகிழும்

ஒப்பற்ற திருக்கோவில்களை உள்ளம் உருகிப் பணிந்து சேர்ந்தார்.

மெய்ப்பொருள் தேர்ந்து தெளிந்தவரான நாவரசர்

தாம் செப்ப இயலா சிறப்புடைய

அப்பூதி அடிகளாரின் ஊரான திங்களூர் அடைந்தார்.

1466.

அந்தணர்களுக்கும் மேம்பட்ட அப்பூதி அடிகளார்

தம் மைந்தருடன் சாலைகள்,கிணறு,குளம், மரம், தண்ணீர்ப்பந்தல்

முதலான பல அறங்களையும்

ஆண்ட அரசு எனும் பெயரால் அமைந்திருப்பதைக் கண்டு

அங்கு வந்து சேர்ந்த வாகீசர் கண்டும் கேட்டும் அறிந்து

அவரது வீடு அடைந்து –

1467.

அப்பூதி அடிகளுடன் மனைவியார் மைந்தர் பெரும் சுற்றம்

யாவரும் மனம் மகிழ்ந்து களிகூரத் தொழுது எழுந்து சூழ வந்து

நாவுக்கரசரை தம் திருமனையில் அமுது செய்ய வேண்டிக் கொள்ள

இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட பெரும் தவத் தொண்டர்

திருவுள்ளத்தினால் சம்மதம் தரப் பெறும் பேறு பெற்றார்.

1468.

நேரே காணும் தன்மை இல்லாதபோதும்

முன் கலந்ததால் உண்டான பெரும் காதலினால் கேண்மையினால்

திரு அமுதும் கறி அமுதும்

வெவ்வேறு விதங்களில் வேண்டுமளவில் உண்பதற்கு

இறை ஆண்ட திருநாவுக்கரசர் திரு அமுதம் செய்ய சமைத்து-

1469.

திருநாவுக்கரசு அமுது செய்து அருள்வதற்காக

வாகீசரின் பெருநாமம் சூட்டப்பட்ட

தன் மூத்த பிள்ளைதனை அழைத்து

அன்பு பொருந்தும் ஞானத் திருமறையோரான அப்பூதி அடிகள்

வாழையின் பெரிய நாளமுடைய

குருத்து அரிந்து கொண்டுவர அனுப்பினார் தனியாக.

1470.

ஆங்கே அவனும் விரைந்து எய்தினான்

அங்கிருந்த தோட்டத்தில்

குருத்து அரியப் புகும் அளவில் ஒருநாகம்

மூத்த திருநாவுக்கரசான அம்மகனைத் தீண்டியதையும்

அதை பொருட்படுத்தாமல் திரு அமுது செய்தருள

ஓங்கும் வாழையின் குருத்தைக் கையில்கொண்டு

விரைவில் வந்து சேர்ந்தான்.

1471.

தீய விஷம் தலைக்கு ஏற மயங்கி

செழும் குருத்தைத் தன் தாயார் கரத்தினில் நீட்டித் தந்து தளர்ந்து

தன்னை தீப்போன்ற நாகம் தீண்டியதை

உணர செய்யாதவனாக விழுந்ததைக் கண்டு

கெட்டொழிந்தோம்!

தூயவரான நாவுக்கரசர் இங்கு அமுது செய்யத்

தொடங்கார் என்று ஒளித்தார்.

1472.

தம் புதல்வன் சவம் மறைத்தார்

தடுமாற்றம் இல்லாதவராய்

எம்பெருமான் அமுது செய்ய வேண்டும் என வந்து இறைஞ்சினார்

தேவர்களின் தேவரான திருத்தொண்டர் உள்ளத்தில்

தடுமாற்றம் இறைவர் திருவருளாலே உண்டானது

அதனை அறிந்து துன்பம் தீர்ப்பாராகி –

1473.

அன்று அவர்கள் மறைத்த செயலுக்கு

அளவுகடந்த கருணையராகி

கொன்றைமலர் சூடும் சடையார்

தம் கோவிலின் முன் அச்சவத்தைக் கொணர்வித்து

ஒன்று கெலாம் எனத் தொடங்கும் பதிகம் எடுத்துத்

தன்னை உடையானாகிய சிவனார் சீர் பாடியதும்

பின் வந்து தங்கிய விஷம் போய் நீங்கி

அம்மகன் உறக்கம் கலைந்து உணர்ந்தவன் போல் எழுந்திருந்தான்.

1474.

தன் அரிய மகன் உயிர் பெற்றது கண்டும்

அமுது உண்ணாமல் இருக்க நேர்ந்தமைக்கு

அப்பூதியார் மனைவியார் ஆகியோர் உற்ற துன்பம் நீங்கும் பொருட்டு

வருந்துகின்ற அவர்களின் மனை புகுந்து

வாகீசத் திருமுனிவர்

விருந்து அமுது செய்து அருளினார்

விருப்போடு அங்கு தங்கியிருந்த நாளில்-

1475.

திங்களுரிலிருந்து அப்பூதியார் தன் பின்னே வர

பசுங்கண் காளையின் தனிப்பாகர்

ஒப்பற்ற சிவனாரின் திருப்பழனப்பதி புகுந்தார் நாவுக்கரசர்

தங்கிய பெரும் காதலோடும் தம் பெருமான் கழல் சார்ந்து

பொங்கிய அன்புற வணங்கி

முன்னே நின்று போற்றி இசைத்தார்.

1476.

பக்கத்தில் மாலைக்காலத்தில் தோன்றும்

பிறைச்சந்திரன் எனும் மாலையை உடைய

புரிசடையாரது பொற்பாதங்களின் கீழ் அடைகின்ற இயல்பாகிய

ஒழுக்கமுடைய அப்பூதி அடிகள் தமை உயர்வாகச் சிறப்பித்து

நன்மை புரியும் தீந்தமிழின்

இனிய சொல்மாலையாகிய திருப்பதிகம் பாடினார்.

(திருப்பழனத்தில் பாடியது சொல்மாலை எனத் தொடங்கும் பதிகம்)

1477.

எழும் படத்தையுடைய பாம்பும்

இளம்பிறையும் அணிந்த இறைவரை

எப்பக்கமும் சென்று தொழும்பணி மேற்கொண்டு அருளியபடி

திருச்சோற்றுத்துறை முதலாகிய பதிகள் அடைந்து

பாடி வணங்கினார்

வணங்கும் பணியை கேண்மையில் விரும்பி

தாண்டகங்கள் பலபாடி

திருப்பழனத்து இறைவரின் கோயிலில் திருத்தொண்டு செய்திருந்தார்.

(பொய்விராமேனி- எனும் திருநேரிசை

காலை எழுந்து – எனும் திருவிருத்தம்

கொல்லை- எனும் திருக்குறுந்தொகை

முத்துவனா- எனத்தொடங்கும் திருத்தாண்டகம் ஆகியன திருச்சோற்றுத்துறையில்
பாடப்பட்டது)

1478.

பலநாட்கள் அங்கே அமர்ந்து

தன் தலைமேல் திருவடி வைத்த

திருநீலகண்டரின் மலர்ச்சேவடி நினைந்து

சேல்மீன்கள் உலவும் காவிரியின் தென்கரை ஏறிச்சென்று

அழகுமிகு மணிமாடக்கோவிலான திருநல்லூர் அடைந்தார்.

1479.

அங்கு சேர்ந்து தம் இறைவரின் திருவடிகள் வணங்கி

ஆராது பொங்கிய அன்போடு திளைத்து போற்றி இசைத்துப் பணி செய்யும்
நாளில்

தங்கிய பெரும் காதலினால்

தாமரைமேல் இருக்கும் நான்முகனும்

சிவந்த கண்ணுடைய திருமாலும் அறியமுடியாத

சிவபெருமானின் திருவாரூர் தொழ நினைத்தார்.

1480.

திருநல்லூரில் இறைவரிடம் அருள் விடைபெற்றுக் கொண்டு போய்

பழையாறையில் பற்கள் வெளித் தெரிய

வெண்மையான தலையோட்டைக் கையில் கொண்ட

இறைவர் எழுந்தருளும் இடம் பலபணிந்து

நல்சொற்கள் நிரம்பிய வண்தமிழ் பாக்கள் பாடி

திருவலஞ்சுழியைத் தொழுது ஏத்திச்சென்று

மாலையில் தோன்றும் வெண்பிறை அணிந்த இறைவர்

திருக்குடமூக்கினை அணைந்தார் பணிந்து.

1481.

திருநாலூர், திருச்சேறை ,குடவாயில்,திருநறையூர்

ஆகிய தலங்களும் வீற்றிருக்கும்

பால் ஊர்கின்ற இனிய மொழியாள் பார்வதி அம்மையின்

பாகனாரான இறைவர் கழல் பரவி பணிந்து துதித்து

விடை மேற்கொள்ளும் ஊர்தியாகவும் கொடியாகவும் கொண்ட இறைவர்

வீற்றிருக்கும் இடம்பல பாடி

சேல்மீன்கள் உலவும் திருவாஞ்சியம் அடைந்தார்.

1482.

மிக்க வாசமுடைய மலர்ச்சோலை உடைய

திருப்பெருவேளூர் பணிந்து துதித்தார்

வாசனையுடைய கொன்றைமலர்களை அணிந்த

முதல்வனாராகிய இறைவரின் பிற தலங்களையும்

திருவிளமர் எனும் தலமும் சென்று இறைஞ்சி வாகீசர்

திரிபுரம் எரித்த சிவபெருமானார் வீற்றிருக்கும்

திருவாரூர் வந்தடைந்தார்.

( இறையருளால் தொடரும் )
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்