பெரியபுராணம் – 48 – திருநாவுக்கரசு நாயனார் புராணம்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

பா. சத்தியமோகன்


திருநாவுக்கரசு நாயனார் புராணம்

சுந்தரமூர்த்தி நாயனார் துதி

1265.

நேசம் நிறைந்த உள்ளத்தால்

நஞ்சு பொருந்திய அழகிய கழுத்துடைய சிவனடியார் பெருமையினை

எல்லா உயிரும் தொழுது ஏத்துவதற்காக தேசம் எல்லாம் உய்வதற்காக

திருத்தொண்டத் தொகை முன் அருளிச் செய்த திருவாளரான

ஆளுடைநம்பியின் மணம் பொருந்திய

மெல்லிய திருவடிகளை வணங்கக் கிடைக்கப் பெற்ற இந்தப் பிறப்பை வணங்குவோம்.

மும்மையால் உலகாண்ட சருக்கம் முற்றிற்று.

5. திருநின்ற சருக்கம்

இச்சருக்கத்தில் திருநாவுக்கரசர் , குலச்சிறையார், பெருமிழலைக் குறும்பர்,

பேயார்(காரைக்கால் அம்மையார்)

அப்பூதியார், நீலநக்கர், நமிநந்தியார் எனும் ஏழு நாயன்மார்கள்.

27. திருநாவுக்கரசு நாயனார் புராணம்

1266.

திருநாவுக்கரசு எனவும்

சிவபெருமான் திருத்தொண்டின் நெறி வாழ

ஞானத் தவமுனிவர் வாகீசர் எனவும்

வாய்மை திகழ் பெருமையுடைய திருப்பெயரின் சிறப்பை

ஒரு நாவுக்கும் உரை செய்ய உணராத நான்

சொல்ல முயல்கிறேன் பேருலகில்.

1267.

என்றும் வளமை பொருந்திய நாடு திருமுனைப்பாடி நாடு

தொன்மை முறையால் வரும்

மண்ணின் துகளான புழுதி தவிர வேறு குற்றம் ஏதும் இல்லா நாடு

நன்மை நிலையிலும் ஒழுக்கத்திலும் நலம் சிறந்த குடிமக்கள் வாழும் நாடு

உச்சியில் சந்திரன் தவழ உயர்ந்த மணிமாளிகைகள் கொண்டு

செழித்த இடங்கள் கொண்ட நாடு.

1268.

குறிஞ்சி நில மூங்கீல்களின் முத்துக்களை

முல்லை நிலத்தின் மணமிகு மலர்த் தொகுதிகளை

அளவிலா அலைகளுடன் சுமந்து

இருபக்கக் கரைகளில் சேர்க்கும் அது

பெரிய எருமைகள் பூட்டிய இடமான வயல்களில் பரவும் உலவும்

எவ்வுலகிலும் தன் அழகு வியக்கப் பாயும்

மாநதியாகிய பெண்ணை பாயும் நாடு.

1269.

நீர்வாய்க்கால்களிலெல்லாம் தகட்டு வரால்மீன்கள்

கரும்புகளில் எங்கும் கணுவுக்கு கணு பொழிகின்ற தேன்

நெற்பயிர்களின் கதிகளிலெல்லாம் பால்

அகன்ற பரப்பெங்கும் குலை தள்ளும் கமுகு மரங்கள்

ஏர் உழுத படைச்சால்களிலெல்லாம் முத்துக்கள்

பொய்கைகளெல்லாம் செங்கழுநீர் மலர்கள்

எப்போதும் விருந்துள்ள மனைகளெல்லாம் அகில் தூபம்.

1270.

ஊர்களில் உழவர்கள் கரும்புகள் வெட்ட

நெருங்கிய கரும்புகள் சாறு பொழிகின்றன

அக்கரும்புகளிடையே கட்டப்பட்டிருந்த தேன்கூடுகள் அழிய

தேன் ஒழுகிப் பக்கங்களில் பரவி

வண்டுகள் மொய்த்து ஒலிக்க அந்தத் தேன்நதி

மடையை உடைக்கிறது ஊர்களில்

அவ்வாறு உடைக்கப்பட்ட மடைகளை அடைக்கிறார்கள் –

கருப்பஞ்சாற்றினால் காய்ச்சப்பட்ட வெல்லக்கட்டிகளால்.

1271.

கருங்கதலி என்ற வாழையின் பெருங்குலைகள்

யானையின் துதிக்கை முகத்திற்கு சமம்

அதன் அருகில் வளரும் கதிர்ச்செந்நெல்

வெற்றியுடைய குதிரைகளின் முகத்திற்கு சமம்

பெருகிய வண்டிகள் தேர்களுக்கு சமம்

உழவர்களின் ஆரவாரப் பொலிவும் –

நெருங்கிய மருத நிலத்தோற்றமும் –

நான்கு வகைப் படைகளைப் போலத் திகழ்ந்தன.

1272.

மணம் மிகுந்த பாக்கு மரங்களின் மணம்

சோலைகள் சூழ்ந்த வண்டுகள் ஒலிக்கின்ற

பெண்ணையாற்றின் அலை மேல்படர்ந்து ஏறுகிறது —

நவமணிகள் பதித்த அணிகள் அணிந்த கழுத்துடன்

கூந்தலின் சுமை பொறுக்க இயலாமல் அலைகின்ற மகளிரைப் போல.

1273.

கரிய கடலின் படியும் வடிவுடைய மேகங்கள்போல-

மணம் கமழும் மலர்கள் இருந்தன

கரிய நிற எருமைகள் உள்ளே புகுந்தன

நெருங்கி நின்ற கரிய கன்றுகள் போல

பெருவண்ணமும் சிவந்த கண்ணும் கொண்ட வரால் மீன்கள்

எருமைகளின் மடியில் முட்டியதால்

பாலைச் சொரிகின்றன நீர்நிலைமேல்.

1274.

மொய்த்த வண்டுகள் சூழ்ந்த வரிசைகள்

முழு நீலமணிகள் பதித்த வளையல் போல் அலைந்தன

சிவந்த துளிர்களாகிய விரல்களும் செழிப்பான அரும்பு நகங்களும்

கொண்ட கையுடன் கூடிய மணமகள்

தன் உடலின் ஒளி நிழல் காணும் கண்ணாடி இதுவே என

வெண்மையான பிறையை அணைத்தது போல

மலர்ச்சோலைகள் வான் வரை உயரும்.

1275.

மணம் உடைய வயல்களின் அகன்ற இடங்களில்

பரந்து உயரும் நெல் கூடுகளில்

ஒளியுடைய காதணி அணிந்த மென்மகளிர் மாடங்களில்

மயில் பறவைகளும் மேகங்களும்

எதிர் எதிராக ஒன்றையொன்று விஞ்சுவது போல ஆடுகின்றன.

1276.

பாவம் தரும் தீயநெறி மாறுவதற்காக –

நீலகண்டம் கொண்ட சிவனாரின்

வாய்மை நெறியும் அறமும் தருகின்ற

நாவுக்கரசும் ஆலால் சுந்தரரும்

பிறந்து அருளியது திருமுனைப்பாடி நாடு என்றால்

இப்பெரிய உலகில் அதன் சிறப்பை பாடும் திறமை

நம் அளவில் அடங்குவதோ!

1277.

இப்படிப்பட்ட திருமுனைப்பாடி நாடு

பல ஊர்களுக்கும் உண்மை தரும் வளங்கள் கொண்டது

ஓங்கிய அவற்றுள் சைவநெறியை ஏழுலகிறகும் வழங்குவதால்

தெய்வநெறியில் விளையும் சிவம் பெருக்கும் ஊர் திருவாமூர்

அருள் செல்வமெனும் திரு ஆகின்ற ஊர் திருவாமூர்.

1278.

அந்தத் திருவாமூரில்

அழகிய கொங்கைகளைச் சுமந்து வருந்துகின்றன மகளிர் இடைகள்

நூபுரங்கள் எனும் அவர்கள் காலணிகள் ஒலித்து ஏங்குகின்றன

அவர்கள் அணியும் மணிகள் பதித்த காஞ்சி இரங்குகின்றன

நீங்குகின்றன தீமையுள்ள நெறிகள்

பெருங்குடிகளே நெருங்கி வாழ்கின்றன.

1279.

மலர்கள் நீலம் வயல்காட்டும்

மை பூசிய நீலம் போன்ற மங்கையர் கண்கள் நிலவு காட்டும்

தாமரை முக மங்கையர் பிறை நெற்றியும்

அவர்கள் அணிந்த ஊசலாடிக் காட்டும்

புலர்கின்ற காலைப்பொழுதின் நீளம் இருள் காட்டும்

அப்போது உழவுத் தொழில் ஆரவாரம் காட்டும்

பலபண்டங்கள் கலங்கள் நிறைந்த மனைகள் பெருவளங்கள் காட்டும்.

1280.

திருவாமூர் எனும் ஒப்பற்ற ஊரில்

அனைத்து நலனிலும் வழுவாத ஒழுக்கம் மிகுந்த குடிகளுள்

குற்றமிலா இல்லற ஒழுக்கத்தில் மெம்பட்ட நிலையிலே

வேளாளர் குலத்தில் வரும் பெருமையான குடியாக

குறுக்கையர் குடி விளங்கியது.

1281.

எல்லாத் திக்குகளிலும் பெருமை திகழ

அக்குடியில் சிறப்பாகத் தோன்றிய பெரும் தன்மையினார்

மிக்க அறம் மிகுந்த இல்லறம் நடத்தி விருந்தளிக்கும் மேன்மையினார்

பெரும் சிறப்பு வளர்ந்து வளர்ந்து உடையவர் ஆனார்

எல்லாத் திசையிலும் புகழ வாழ்ந்தார் புகழனார்.

(புகழனார் – இயற்பெயர் )

1282.

அப்புகழனாரது உரிமையான

ஒப்பிலாத குலமும் குடியும் கூடிய மரபில்

மகிழ்ச்சி தரும் மணம் புரிந்த மாதினியார் எனும் அம்மையார் வயிற்றில்

செந்தாமரை மலரின் வரிசையான இதழ்களில்

திருமகளைப் போன்று திலகவதியார் பிறந்தார்.

1283.

திலகவதியார் பிறந்து முறையாய் சில ஆண்டுகள் கழிந்தன

அதன்பின் அளவிலாத கலைகளின் துறை தழைக்கவும்

அரிய தவம் செய்வோர் நெறி வாழவும்

உலகில் வரும் இருள் நீக்கி பின்மலரும் ஒளிக்கதிர் போல

?மருள் நீக்கியார் ? தோன்றி அருளினார்.

1284.

மாதினியார் திருவயிற்றில் தோன்றிய புகழனார்

செய்கடன் முறைமையால் வரும் மங்கலச் செயல்கள் யாவும்

மேம்பட்ட நல் வினை சிறக்கும்படி விரும்பிய பாராட்டுடன்

குற்றமிலாத உறவினர் செய்ய மருள்நீக்கியார்

இளம் குழவிப்பருவம் கடந்தார்.

1285.

மருணீக்கியாருக்குதலைமயிர் நீக்குதல் எனும் மணவினையை

அறிவுடைய மக்கள் பலரும் மகிழ்ந்து சிறப்பு செய்த பின்

நற்பொருட்களை வெள்ளம் போல் பெருக்கச் செய்தனர்

அதன்பின் —

உள்ளம் சுருளாமல் மலர்விக்கும் கலைகளைப் பயில்வித்தனர்.

1286.

சிந்தை மலர்ந்து எழும் உணர்வினால்

செழுமையான கலையின் திறங்களை

முந்தைய முறை தொடர்பினால் எளிதில் கற்று

முதிர்ந்த அறிவு கொண்ட மைந்தன்

களங்கம் நீங்கிய இளம்பிறை போல் வளர்ந்தது கண்டு-

தந்தையரான புகழனார் கொண்ட பெருமகிழ்ச்சி மென்மேலும் வளர்ந்தது.

1287.

அந்நாளில் திலகவதி அம்மையாருக்கு பன்னிரண்டு வயதானதும்

ஒப்புடைய வேளாண்குலத்திலும் குடியிலும் வந்தவரும்

மின்போல் ஒளி வீசும் சிவந்த சடை அண்ணலான பெருமானிடம்

மெய்யான அடியாரும்

பொன்னால் ஆன மணிகள் பதிக்கப்பட்ட முடி தாங்கிய மன்னனிடம்

அருள் உடையவரும் –

1288.

வீரத்தன்மை கொண்ட போரில் ஆண்சிங்கம் போன்றவர்

காண ஆசையுண்டாகத் தக்க பேரழகு உடையவர்

?கலிப்பகையார் ? எனும் பெயர் உடையவர் —

கொடையறம் பூண்ட புகழனாரிடம்

அவரது ஒப்பிலா மகளைக் கொள்ள விரும்பி

காதலால் பெரியோர்களை அனுப்பினார்.

1289.

திருமகள் போன்ற திலகவதியாரை

அங்கு கலிப்பகையாருக்கு

மணம்பேச வந்தவர் தாம் வந்த செய்தி தெரிவிக்க

குணங்களைப் பேசி குலம்பேசி குற்றமிலாப் புகழுடைய புகழனார்

பசுமையான வளையல் அணிந்த

பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய

தம்மகளை மணம் செய்து தர இசைவு தந்தார்.

1290.

கன்னியின் திருத்தந்தை மணத்திற்கு இசைவு தந்ததை

கலிப்பகையாரிடம் அறிவித்தனர்

மணச்சடங்கு முடிப்பதன் முன் மன்னனுடன்

வடநாட்டரசர்கள் பகை மேற்கொள்ள

கலிப்பகையார்க்கு விடை கொடுத்தான் மன்னன்

அதைச்செய்யச் சென்றார் கலிப்பகையார்.

1291.

வேந்தனுக்காகப் போர் செய்ய நேர்ந்தால்

போருக்காக விடை பெற்றுக் கொண்டு கலிப்பகையார்

போர் ஆற்றும் படைகளை உடன் கொண்டு சென்றார்

சினத்துடன் அடர்ந்து வந்த பகைவரை சில நாட்களில் அடைந்து

பகைக்கடலுள் புகுந்து

நிறைவான கொடிய போரைச் செய்தார் நெடுநாட்கள்.

1292.

அத்தகைய நாட்களிடையே

திருமகளைப் பெற்ற தூய குலம் கொண்ட புகழனார்

தொன்று தொட்டுவரும் நிலையாமையின் வினை பயனாலே

இவ்வுலகை விட்டு நீங்கினார் —

தீய அரும் பிணியினால் பாதிக்கப்பட்டு.

1293.

தன் கணவர் உயிர் நீத்ததும் மனைவியார் மாதினியார்

சுற்றத்தையும் மக்களையும் துகளாக எண்ணி —

மேன்மையுடைய தன்மையால்

என்றும் உடன் பிரியாத உலகு எய்தும் கற்பு நெறியால்

கணவனாருடன் தானும் உயிர் நீத்தார்.

1294.

தந்தையும் பெற்ற தாயும் இறந்தபின்

மாதரார் திலகவதியாரும்

அவருக்குப்பின் தோன்றிய மருணீக்கியாரும்

மனக்கவலையினால் வருந்தும் நல் சுற்றத்துடன்

பெரும் துயரில் ஆழ்ந்தனர்.

1295.

ஒருவிதமாக பெரும் சுற்றத்தினர் உள்ளம் தேற்ற

துயர் நீங்கி விண்ணுலகு அடைந்தவருக்கு

செய்ய வேண்டிய கடன்கள் யாவும் செய்தனர்

மன்னனுக்காகப் போர் செய்யச் சென்ற கலிப்பகையார்

பகைமை நிறைந்த போர்க்களத்தில்

உயிர் கொடுத்துப் புகழ் கொண்டார்.

1296.

அரசனின் ஏவலால் போர்முனைக்கு கலிப்பகையார் சென்று

அம்முனையில் பகை அழித்தார்

விண்ணுலகம் ஆள தனது கடன் நிறைவேற்றி இறந்தார் எனும்

பெரு வார்த்தையை ஊரார் கூற

செந்தாமரை மீது இருக்கும் இலக்குமி போன்ற

திலகவதியார் கேட்டார்

— திருவருளால் தொடரும்

sathiyamohan@ sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்