மதியழகன் சுப்பையா கவிதைகள்

This entry is part of 40 in the series 20050630_Issue

மதியழகன் சுப்பையா


துளி-1
—-
நீ நனையக் கூடாதென நானும்
நான் நனையக் கூடாதென நீயும்
குடையை விட்டு விலகுகிறோம்
குழப்பத்தில் நனைகிறது குடை

துளி-2
—-
தலை நனைக்கும்
மழை தவிர்க்க
மரத்தடி
கட்டிட ஓரம்
தேடுகிறேன்

கையையும்
மாராப்பையும்
குடையாக்கி என்
தலை காக்கிறாய்

தொப்பளாய்
நனைந்து போகிறதென்
மனம்.

துளி-3
—-
மழை கண்டதும்
பிள்ளையாகிறாய்

கை நிறைய
கண் நிறைய
உடல் நிறைய
மழை வாங்கிக் கொள்கிறாய்

வலுக்கிறது மழை
கொட்டுகிறது மழை
அடிக்கிறது மழை

துளி-4
—-
நீர் கொட்டும்
ஆடையுடன்
வீடு நுழைந்தாய்

மாற்று ஆடை கேட்டு
மாற்றிக் கொண்டாய்

ஊறிய உதடு குவித்து
முத்தம் துப்பினாய்

வெளியே மழையடித்தது
மனதில் அனலடித்தது

துளி-5
—-
மஞ்சு உரசலில்
மின்னல் ஒளிர்ப்பு

மஞ்சு உரசலில்
இடிகள் இடிப்பு

மஞ்சு தழுவலில்
மழையின் பொழிப்பு

மஞ்சு தழுவலில்
ஆக்கம்- சிறப்பு

நம் உரசலில்
நம் தழுவலில்
மின்னி
இடிந்து
பொழிகிறது இன்பம்.

madhiyalagan@rediffmail.com

Series Navigation

மதியழகன் சுப்பையா