ஆதி அதிகாரம்

This entry is part of 32 in the series 20050623_Issue

மனஹரன்


இது நிஜம்தானா ?

ஆதி அதிகார ராகம்

நின்றுவிட்டதா ?

மரண சாசனம்

வென்றிட

மாலையோடும்

கண்ணீரோடும் நாங்கள்

போப்பாண்டவரை

வரவேற்க

உங்களுக்கு மட்டும்

சிறப்பு அழைப்பு

கிடைத்தது எப்படி ?

30 ஆண்டுகளுக்குப்பின்

தமிழுக்கு ஞானபீடப்பரிசாம்

அதற்குப் பரிகாரமாகதானா

எங்களின் ஞானபீடமே

நீங்கள் நிறுத்திக்கொண்டார்கள்

நீங்கள் இருந்தபோது

அதன் பெயர் ஞான பீடம்

நீங்கள் மறைந்தபோது

அதன் பெயர்

ஆதி பீடம் என

முன் மொழிகிறேன்

ஆட்சேப அறிவிப்புக்கு

ஆளில்லாமல்

இருப்பது நல்லது

வறுமை கோட்டைவிரட்டி

வாழ்க்கைக்கு வந்தவரே

உங்களின்

அரசியல் தாகம்

தீர்ந்திருக்காது

எதை நீங்கள் சொல்லவில்லை

10 கோடி கணக்கு

சேரவேண்டியவருக்கு

சரியாக எட்டவில்லையென்பதை

சுட்சகமாயறிந்து

தலைப்புச்செய்தியாய்

ஆங்கிலத்திலும்

உங்களது ஆதங்கத்தை

வெளியிட்டார்கள்

அந்த அறிவு தீ

உங்களுக்குள் மட்டும் எழுந்ததெப்படி ?

தமிழ் வருடப்பிறப்பு

சித்திரை என

கொண்டாடிய வேளை

தைத்திருநாள்

தமிழர் திருநாள் என

முழங்க வைத்தவர் நீங்கள்

முடிவு சொன்னவர் நீங்கள்

கவித்துவ தலைப்புகளைச்

நாளிதழ் செய்திகளுக்குக்கூட

மகுடமாய்ச்சூட்டினீர்கள்

“தத்தளிக்குது தமிழினம்

தலைவருக்கேன் நீச்சல்குளம் ?”

இவை வார்த்தை கோவையல்ல

வாழ்வின் சவால்

வறண்ட சொற்களை

வெட்டியெரித்து

ஒவ்வொரு வாசகரையும்

வாசிக்க மட்டுமல்ல

சுவாசிக்கவும் வைத்தவர் நீங்கள்

கமன்வெல்த் போட்டியில்

தங்கம் வென்றதென்னவோ

சரவணன்தான்

தமிழினத்தின் மானத்தை

வைடூரியமாய்

மின்ன வைத்த

பெருமை

உங்களையே சாரும்

உங்களிடம்

வாங்கியவர்களெல்லாம்

கதை கதையாய்

சொல்வது காதில் விழுகிறது

கொடுத்தவர் நீங்கள்

சொல்லியதாய்

செய்தி ஏதும் கேட்டதில்லையே

தமிழுக்கு தீங்கு வந்தால்

ஆதி இருக்கிறார் என்போம்

அந்த நம்பிக்கை வேர்

அறுந்துவிட்டதே

மலேசிய தமிழ் இலக்கியத்தின்

தாயும் நீங்கள்

தந்தையும் நீங்கள்

எங்கள்

புதுக்கவிதை போர்வாளின்

தலைமை தளபதி நீங்கள்

மலேசிய தமிழர்களின்

இதயங்களில்

பதவி இல்லாமல் அமர்ந்த

முதலமைச்சர் நீங்கள்

உங்களை எரிக்கவில்லை

எங்களுக்குள் எருவாக்கியிருக்கிறோம்

மரணம்

ஏய்திய உயிர்களுக்கு

பிரிதொரு

உயிரைப்பறிப்பதற்கான

சக்தி உண்டாகுமாம்

இங்கே

உங்களால் மட்டுமே

பறிக்க வேண்டிய

உயிர் ஒன்று உண்டு

பறித்துச் செல்லுங்கள்

– மனஹரன்

kabirani@tm.net.my

Series Navigation