கூடாரமாகி வாழ்வும் அலைச்சலாகி

This entry is part of 32 in the series 20050513_Issue

றகுமான் ஏ. ஜமீல்


அந்தி படர்ந்து இருளி
படுவான்கரைக் காடுகளில் கரைந்து
ஆந்தைகள் ஒருமித்தலறி
காற்றும் உறுமி
பேய்களின் கூத்துகளோடு
இரவு மயானமாகி
உயிர் மீளவும் ஊசலாடும்.

வெளிச்ச விளக்குகள் மட்டான
சிறு கூடாரங்களில்
துயர் சூழ்ந்து பரிதவித்து
ஒருத்தருக்கொருத்தர் ஆதர்சமாகி
உலைமூட்டி பரிமாறி
துயின்று சாமத்தில் கலவி
வாழ்தல் அபத்தமாகி.

காதல் பாடல்கள் ஒலித்த
எங்கள் வாழ்வானது
தெருக்களில் கிடந்து நசிந்து
மிகுந்த இம்சையும்
நீண்ட அலைச்சலுமான
இந்தக் கோடைத்தகிப்பில்.

மலை உச்சிகளில்
அல்லது வனாந்திரங்களில்
புறாக்கூடுகள் போன்று
பரண்கள் மாதிரி
சிறு வீடொன்றுதான் வேண்டும்.
வாழ்ந்தும் மடியவுமாய்.

றகுமான் ஏ. ஜமீல்> இலங்கை

Series Navigation