இருத்தல்

This entry is part of 32 in the series 20050513_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


வாலாட்டி வாலாட்டி
நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய
மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள்.
காற்றில் முளைத்து
தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி.
மீண்டும் அமர்ந்தேன்.

தென்னங் கீற்றுத் தோகைக்குள்
இசைத்த சிறு குருவி சிறகை விரித்தாச்சு.
இனி வானத்துச் சிப்பி வயிற்றுள்
மிழிருகின்ற சூரியனும் செரித்துவிடும்.
நீர்க் கரையில் பாம்புகள் கண்விழிக்கும்.

கை பற்றிக் கதைத்திடவும்
மறையும்வரை பின்பக்கம் பார்த்திடவும் தூண்டுகின்ற
முலை அரும்பும் பரட்டைத் தலைத் தேவதைகள்
தம் மனசில் வண்னக் கனவாய் குமிழி விடும்
ரீங்காரம் எல்லாம் காற்றில் உமிழ்ந்தபடி
ஆடுகளின் பின்னாடி போய்விட்டார்.

வணங்கா முடிப் பனைகளின் பின்
தூரத்தே
இடி முழங்கிப் பறக்கும் அசுரர்களின்
சிறகோசை கேட்கிறது.
விரைந்தபடி ‘அண்ணே கவனம் ‘ என்ற
துப்பாக்கிச் சிறுவர் சிலரும் மறைந்துவிட்டார்.

இன்னும் நுனி நாவில்
அனுதாப வர்த்தைகளை கோர்த்தபடி
இருளில் இருக்கின்றேன்
-1994
(பெருந்தொகை, சென்னை 2000)

V.I.S.Jayapalan (Poet)
Raadyr Veien 3B – leil. 36
0595 Oslo, NORWAY.
Tel/Fax: 00 47 22 162235
Sri Lanka: 00 94 777 560 759

Series Navigation