என் மழை தட்டுகையில்

This entry is part of 28 in the series 20050506_Issue

நெப்போலியன்


என்னை
மழையில் நனையவிட்டு
மறைந்து போன
மின்னல் அவள்.

வானவில்லாய்
வளைந்து சிரித்து
நான்
வண்ணங்கள்
உணரும்முன்
குருடாக்கிப்போன
ஒளிப்பிறை அவள்.

விரித்த குடையில்
மோதும் நீர்க்குச்சிகள்
பரிகசிக்கும்
என் தோல்வியை.

ஈரக்காலணிகளுள்
பிசுபிசுக்கும்
மழைநீர்
இரங்கலிடும்
என் இயலாமையை.

அன்றுபோல்
மழையை ருசிக்கும்
மனம்
இன்று இல்லை.

உன்னிடத்தில்
பெய்யும் மழை
இந்த முறையும்
என்னைப்பற்றி
ஏதேனும்
சொல்ல வருகையில்
வழக்கம்போல்
சாரலைத் துரத்தி
ஜன்னலைச் சாத்தாதே.

என்
மழை தட்டுகையில்
உன்
கதவுகளைப் பூட்டாதே.

வாசலில் நின்று
‘ச்சோ ‘வெனக் கதறும்
இன்றைய மழையாவது
உன்
ஆலங்கட்டி
மனதைக் கரைத்து
இங்கே
என்
இதயக்கூரையில்
கொட்டாதா ?

வானம் பார்த்த
காதலில்
நீ வந்தால் மழை
இல்லையெனில்
காதல்
என்றும்
பிழை.
—-
kavingarnepolian@yahoo.com.sg

Series Navigation