பெரியபுராணம்- 38

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

பா.சத்தியமோகன்


22. முருக நாயனார் புராணம்
1017.
மகரந்தத்தாது சூழும் குழல் உடைய உமை அன்னையின்
தளிர்க்கை சுற்றித்தழுவும் திருமேனி மீது சூழும்
புனல் கங்கைக் கற்றை சூடிய சடை உடைய சிவபெருமான் விரும்பும் ஊர்
சோதி சூழ மணிமுடி சூடிய சோழர்களின் காவிரியாறு பாய்கின்ற
திருநாட்டின் உள்ள பூஞ்சோலைகள் சூழ்ந்த நீர்நிலைகள் சூழ்ந்த ஊர்
உயிர்கள் அடைக்கலமாகப் புகும் ஊர் புகலுர் அது திருப்புகலூர்.
1018.
புகழ் பொருந்திய முதிய ஊர் அதனில் நல்லோரது மனதைப் போல
அடியவர்கள் அணியும் திருநீற்றின் வெண்மை ஒளியான சேம நிலவு போன்றது
நடுயாமத்து இருளும் அதனால் இருளற்றுப் போகும்
மலர் மேல் தங்கி மது உண்டு தங்கும் கரிய வண்டும் கரிய நிறமற்றுப் போகும்.
1019.
பொருந்திய இசை தேர்ந்து பாடும் வண்டுகள்
மலரும் பருவத்தையுடைய அரும்புகள் கொண்ட மென்கிளைகள் அருகினிலே பறப்பதால்
நிறமும் இனிமையும் கொண்ட தேன்பொழிவன –
வாசமலர்களின் வாய்மட்டும் அல்ல!
குளிர்ச்சியான சோலையின் எப்பக்கமும் சார்கின்ற
இளமையும் மென்மையும் உடைய நாகண் வாய்ப்பறவையும்
திருப்பதிகத்தின் பண்களைப் செழுந்தேன் ஒழுகப்பாடும்.
(திருப்பதிகம் = அப்பர், சம்பந்தர், நாவுக்கரசர் பாடியவை)
1020.
வண்டுகள் பாட அதனால் நீர் பொருந்திய நீர்நிலையில் மலர்ந்து
கண்ணீர் அரும்புவன வாசம் வீசும் அரும்புகள் அவிழ்ந்த குளிர்ந்த தாமரைகள் மட்டுமல்ல
தேவர்களின் பெருமானைத் துதிக்கும் திருப்பதிகத்தின் அமுதம் பெருக
அதனைச் செவிமடுக்கும் தொண்டர்களின் உள்ளத் தாமரையும்
கண்ணீர் அரும்பித் துளிர்க்கும்.
1021.
இத்தகு பெருமையும் வளமும் சிறந்த அக்குளிர்ச்சி மிகு புகலூர் அதனில்
பெருமைமிகு வேதியர் குல மரபில் வந்தார் அவர்
நாகம் புனையும் முதல்வர் சிவனாரின் திருவடியில்
ஊனமிலாத அன்பால் உருகுவார் ஞான வரம்பு மிக்க முருகாஅர் அவர் பெயர்.
1022.
இலைகள் மீது உறங்கிய நண்டுகள் விழித்து எழ
மலரும் செந்தாமரைகள் கொண்ட வயலில்
கயல் மீன்கள் மடை மீது பாய இடமான திருப்புகலூரில்
காளை மீது சிவபெருமானுக்கு ஆளான மெய்த்தவத்தால்
அப்பெருமானின் கற்றைச் சடை மீது அணிய
திருப்பள்ளித்தாமம் சார்த்தி வந்தார்.
1023.
புலரும் பொழுதின் முன் எழுவார் புனித நீரில் முழுகுவார்
மலரும் பருவம் நோக்கி கமழக் காத்திருக்கும் அளவிலா மலர்களை
கங்கை ஆறும் பிறைச் சந்திரனும் உலவும்
இறைவரின் முடிமேல் சேர்க்க
வெவ்வேறு திருப்பூங்குடைகளில் அமைப்பார்.
1024.
கொம்பில் பூக்கும் கோட்டுப் பூக்களும் நிலத்தில் பூக்கும் நிலப்பூக்களும்
குளிர் நீரில் மலரும் நீர்ப்பூக்களும்
கொழுமையான கொடியில் பூக்கும் கொடிப் பூக்களும்
மறைகள் மலர்கின்ற திருவாயில் காட்டும் முறுவலின் ஒளி வெளிப்பட
மேருமலை என்ற வில்லில் பாம்பாகிய நாண் பூட்டிய சிவபெருமானின்
திருமுடி மேல் புனைய மலர்கள் தேர்ந்தெடுத்து –
1025.
அசையும் பூணூல் அணிந்த மார்பரான முருகனார்
கொண்டு வந்த பூக்களைத் தனியிடத்தில் அமர்ந்து
கோக்கும் கோவைகளாக, இண்டைகளாக தண்டில் கட்டும் கண்ணிகளாக
தாளில் பிணைக்கும் பிணையல்களாக
நுட்பான தாதுக்களைச் சிந்தும் தொடையல்களுமாக கட்டுவார்.
(கோவை,இண்டை, மாலை,கண்ணி, பிணையல், தொடையல் என்பன மாலையின் வகைகள்)
1026.
ஆங்கு அத்தகு பூத்திருப்பணிகளை அவற்றுக்கு அமைத்த காலங்களில் கட்டி
தாங்கி எடுத்துச் சென்று அன்போடு சாத்தி
பொருந்திய அர்ச்சனைகள் விரும்பிப் பரிந்து செய்வார்
பரமனின் திருப்பதிகப் பற்றான
ஓங்கிச் சிறந்த அஞ்செழுத்தை விடாமல் நாவில் கண்ட உணர்வுடையவர்.
1027.
நூல்களினால் விலக்கப்பட்டவை ஒழிந்திட
நல்லொழுக்கத்தில் நின்ற மறையவரான முருகனார்
மறைகளில் எடுத்துக் கூறப்பட்ட சிவஞானத்தை
செம்பொன் கிண்ணத்தில் அள்ளி
அகில உலகமும் ஈன்றளித்த உமை அம்மையின்
முலைப்பால் உண்ட ஞானசம்பந்தரின் நண்பராகும் பெருமையுடையவர் ஆயினார்.
1028.
அன்னப்பறவையின் வடிவும் பன்றியின் வடிவமுமாய்
அறியப்புகுந்த நான்முகனும் திருமாலும் அறியாமல்
நிலைபெற்ற திருப்புகலூரில் வீற்றிருந்து அருளும் சிவபெருமானை
?வர்த்தமான ஈச்சரத்தில் ? நல்ல மகிழ்ச்சி மனம் கொள்ள
ஒரு நாளும் தவறாமல் வழிபாடு ஆற்றி
பெருமை மிகு ஐந்தெழுத்தைப் பயின்று பணிந்து வழிப்பட்டார்.
(வர்த்தமான ஈச்சரம் என்பது திருமுருகனார் ஆத்மார்த்தமாக வழிபட்ட கோவில்.
திருப்புகலூர் ஆலயத்தின் வடக்கிழக்கில் உள்ளது)
1029.
அவ்வாறு இருந்து வந்த திருமுருகனார்
அழகான புகலியில் தோன்றிய ஆளுடைப் பிள்லையான
திருஞான சம்பந்தரின் சிவம் பெருகும் திருமணத்தில்
முன் செய்த பூசையின் பயனாலே புகுந்தார்
செங்கண் உடைய வலிய காளையுடைய சிவபெருமானின் சிறந்த அருளான
இனிய பொருளை அளித்தார்
தம் இறைவரின் திருவடி நிழலில் நிலைபெற்ற தன்மை அடைந்தார்.
(புகலி – சீர்காழி)
1030.
பாம்பினை அணிந்த அரை உடைய சிவபெருமானை அர்சித்து
அவர்தம் திருவடியில் பொருந்திய
திருப்புகலூர் முருக நாயனாரின் மெய்த்தொண்டின் திறம் போற்றி
ஒளித்தல் இல்லாதவரிடம் வரும் சிவப்பெருமானைக் கருத்தில் எண்ணி
திரு உருத்திரத்தால் துதித்த அன்பரான பசுபதியார் பணிந்த பெருமையை
பகரத் தொடங்குகிறேன்.
( முருகநாயனார் புராணம் முற்றிற்று )
திருவருளால் தொடரும்
sathiyamohan@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்