ஏ.எம். குர்ஸிதின் ஒரு கவிதை

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

ஏ.எம். குர்ஸித்


புணர்தலின் பின்
மீண்டெழும்
கலவரத்தோடு இன்றைக்கும்
அதீத பிரயத்தனத்தோடு
ஏற்புடையதாக்க வேண்டும்
இந்தப் பொழுதை.

எதுவுமே பிடிபடாத
எத்தனிப்புகளினின்றும்
நிச்சயங்களினின்றும்
மறுபடியும் என்னை
காப்பாற்றியாக வேண்டும்.

ஆவன் விரும்பும் மேல் சட்டையையும்
அவளுக்கான உள்ளாடைகளையும்
நிர்ப்பந்தங்களின் சாயம் குலைந்து போகாதபடி
அணிந்தாக வேண்டும்.

யாருமே அறிய முடியாதபடி
பவுடரோடு குழைத்தெடுத்து
முகம் நெடுகிலும் பூச வேண்டும்
அளவில் பொிதான பாசாங்கை..
சிறு அசைவுகளிலும் தொியும் எனப் பயந்தால்
இன்னும்
அப்பிக்கொள்ள வேண்டும் கொஞ்சம் மணத்தையும்.

ஒரு காட்டோியாய்
ரத்தம் காட்டும் வெளி உலகின்
எ/கு பிம்பங்களின் சேதங்களினின்றும்
தப்பித்துக் கொள்ள
கட்டாயப்படுத்தியாக வேண்டும்
தேனில் குழைந்தபடியான புன்னகையை.

வலுத்தொலித்து உயிர்கொல்லும் தேனீர்க்கடைப் பாட்டு
எச்சில் தெறிக்க ஊரளக்கும் பெண்கள்
மாயையின் அடர்சுழியில் மிதந்தலையும் வாலிபங்கள்
உயிரைக் கூறிட்டு காசாக்கும் தடித்த மனத்தோர்.
இத்தனையையும் ஒரு இசைவோடே
கடந்தாக வேண்டும்.

தேனீர் உறிஞ்சும்போதே
தயார் செய்ய வேண்டும்
மாலை மேடையில்
ஏல்லோரும் கைதட்டும் படியாயும்
நம்பும்படியாயும்
ஒரு பசுமை தோய்ந்த பேச்சை.

இத்தனையையும் முடித்து
கனத்த நாசங்களோடு மண்மீண்டு
சில்லுாறு கதறும்.
ஒரு நடுநிசியில்
படுக்கச் செல்லும்போது
எனக்கு முன்னால்
படுக்கையை நிரப்பிய என்மனச்சாட்சி
வழமை போலவே கேட்கும் :
@நீ.. ஏன் விழுந்தாய்
சுயத்தை கொன்று போடும்
இந்த அரசியலுள்.

ஏ.எம். குர்ஸித்> இலங்கை

Series Navigation

ஏ.எம். குர்ஸித்

ஏ.எம். குர்ஸித்