பெரிய புராணம் – 20. ஆனாய நாயனார் புராணம்

This entry is part [part not set] of 46 in the series 20050401_Issue

பா சத்திய மோகன்


926.
நீர் வளம் மிக்க மேல்மழநாடு எனப்படும் நாட்டின் பக்கங்களில்
பரவும் மணமுடைய அழகிய சோலையில்
வான் சந்திரன் வந்து ஏற
சூடு அடிக்கும் நெல் பரப்பிய பண்ணையின் வரம்புகளில் வண்டுகள் ஏறின
மேன்மேல் அடுக்கப்பட்ட உயர்ந்த வைக்கோல் போர்களில்
மேகங்கள் இளைத்து ஏறின.
927.
உழத்தியரின் நெய் பூசப்பட்ட கரிய கூந்தல் மேவி
மென் சிறகுடைய வண்டுகள் உறங்குகின்ற தாமரைப்பூவில்
கயல் மீன்கள் உறங்கும்
தேமாஞ்சோலையினது நறுமணமும் குளிரும் உள்ள நிழலில்
கரிய எருமைகள் உறங்கும்.
928.
வன்மையுடைய உழவர்கள் செலுத்த
எழுகின்ற இணைமரங்கள் பலமுறையும் சுற்றி வருவதால்
எழுகின்ற ஓசையின் முழக்கத்தால்
அன்னங்கள் தங்கும் குளிர்துறை உடைய நீர்நிலைகளின் அருகில்
மேகத்தின் தோற்றமும் பல ஓசை கூடிய ஒலியும் ஏற்படும் –
கருப்பஞ்சாறு காய்ச்சும் புகையினால்.
929.
பெருகிய பெரு ஆற்றில் நீண்ட அலைப்புனல் செலுத்திய சங்குகள்
பெரிய இலைகளுள்ள வாழைப்புதர் மீது தொடர்ந்து போய்
வாழையைச் சுற்றிய கொடிகள் வழியே
பசிய பாக்கு மரத்தின் உச்சியில் ஏறி
பாளைகள் பூ உதிர்ப்பது போல
சங்குகள் உதிரும்.
930.
உள் இதழ் நிறைந்த மலர்கள் உள்ள வயல்களின் அருகில்
மிக்க இளமையுடைய பசுக்கள் ஈன்ற கன்றுகள்
முல்லை நிலத்திலுள்ள மரம் செடிகொடிகள் நாடி
கூட்டமாக குதித்து ஓடும் வளமுடையது.
931.
கார்காலத்தில் மலரும் முல்லைக்கொடியின்
குளிர் பற்கள் போன்ற வெண் மலர்களில் உள்ள வண்டுகள்
கண்களைப் போல் மலரும் மலர்களில் பாய்வது போலிருந்தன
காயா மரத்தின் அழகிய கிளைகளில் உள்ள நாரைகள்
பெரிய நெற்பயிர் உடைய வயல்களிலிருந்து மேலெழும்
கயல்மீன்கள் மீது பாய்வன போலிருந்தன.
932.
மரக்கொம்பின் பக்கமுள்ள வண்டுகள்
அலைவதற்கு இடமான சோலைகளின் மேல்
வானவீதியில் செல்லும் கதிரவனின் கிரணங்கள் தங்குமாறு
விளங்கிற்று மேல்மழநாடு எனும் மழநாடு
அந்நாடு மண் உலகத்திற்கு அணிகலம்
அதற்கே ஓர் நல்வாழ்வு அளிக்கும் திருமங்கலம் எனும்
பழைய ஊரானது
அந்நாட்டுக்கு ஓர் ஒப்பிலாத மங்கலம்.
933.
ஒப்பிலாத பெருங்குடிகள் நீண்ட காலமாய் இருப்பதினால்
தவறாத வளங்கள் பெருக்கினர்
அறம் செய்யும் இயல்புக்கே உதாரணமாய் விளங்குமளவு சிறப்பு மலிந்தது
புகழ் மிகுந்த அந்த ஊரில்
ஆயர் குலத்தைச் சேர்ந்தவர் ஆனாயர்.
934.
அவர் ஆயர் குலத்தை விளங்கச் செய்ய உதித்தார்
தூய ஒளி வீசும் திருநீற்றை விரும்பும் தொண்டில் நின்றார்
வாக்காலும் மெய்யாலும் வாழ்த்தும் மனதாலும்
பேயுடன் ஆடும் சிவபிரான் அடி அல்லால் பிற வேண்டார்.
935.
பசுக்கூட்டங்களை அகன்ற முல்லை நிலக்காட்டில் கொண்டு சென்று
காட்டின் கொடிய விலங்கோ நோய்களோ தாக்காத வண்ணம்
தூய நறும் புல்லை மேய வைத்து
தூய நீரைக் குடிக்க வைத்து
குற்றமிலாதவாறு பசுக்கூட்டங்கள் அளவிலாமல் பெருக வைத்தார்.
936.
கன்றுகளுடன் பால் கறத்தல் மாறிய இளம்பசு
சிறிய மயிர்த்தலையும் மென்மையும் உடைய சினைப்பசு
ஈன்ற பெருமையுடைய பசு
இவை யாவும் காளைகளின் கூட்டத்துடன்
தனித்தனியாக நெருங்கி நிறைந்த
இடங்களுடன் விளங்கின பல தொழுவங்கள்.
937.
பசுக்களின் தொகுதிகள் அவ்விதம் பல்கிப் பெருகியது
கோவலர்களாகிய இடையர்கள் ஏவல் புரிந்தனர்
ஆயர்குலம் காக்கும் சான்றோரான ஆனாயர்
தன் பெருமான் அடிகளில் அன்பு பொருந்திய இசையுடன்
துளைக் கருவிக்குழல் இசைப்பதை மேற்கொண்டார்.
938.
முந்தைய இசைக்கலை வேதநூல்களின் மரபுப்படி
எழுந்து வளர்ந்த மூங்கிலின் நுனியில் நான்கு பங்கிலும்
அடியில் இரண்டு பங்கிலும் அரிந்து
இடைப்பட்ட பகுதியில்
துளைகளின் வரிசை ஏற்படுத்தி
முதலில் காற்று உண்டாக்கும் துளையையும்
கேடிலாச் சிறப்புடைய இடைவெளியின்
ஒவ்வொரு அங்குல அளவிலும் துளைகள் செய்து –
939.
இவ்விதம் அமைத்த குழல் கருவியினில்
எம்பிரானின் ஐந்தெழுத்தும் தொகுத்து
முறையாக வரும் ஏழிசை கருதி வாசித்து
தடுக்கப்பட்ட சராசரங்களெல்லாம் பொருந்துமாறு
தன் கருணை இசை அமுதளித்து வாழ்ந்து வரும் நாளில் –
940.
மணம் கமழும் மாலை பொங்க
மயிரைக் கோதிப்
பக்கத்தில் உயருமாறு அழகுடைய சிகைமுடியில்
செறிவாகத் தொடுக்கப்பட்ட மலர்மாலை சூடி
பசுமை இலை கொண்ட மென்கொடி மாலையில்
நறுவலி புனைந்து பொன்காசுகள் கட்டிய கயிற்றாலே
கரியமயிர் முடியின் புறத்தைக் கட்டி –
941.
வெண்காந்தள் இலைச் சுருளில்
பச்சை இதழும் மணமும் கொண்ட செங்காந்தளின்
அழகிய மலர் சூடிய
காதின் ஒளி விளங்க
திண்மையான அழகான நெற்றிமீது திருநீற்றின் ஒளி
கண்டோர் கண்களைக் கொள்ளை கொள்ளும்படி அணிந்து –
942.
நிறைவாய்த் திருநீறு பூசிய மார்பில் வரிசையான முல்லை அரும்புகள்
அவை சுருக்கி நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ளன
பருத்த தோள்களில் மாலையின் மலர்கள்
வண்டுகள் மொய்க்கும் இசையினால் மலர்ந்தன
இடுப்பில் உடுத்த
மரவுரியின் வெளிப்பக்கத்தில்
தழைகளால் ஆன பட்டு போன்ற மேலாடை அழகாக அசைய –
943.
சிவந்த திருவடியில் தோல் செருப்பும்
சிவந்த கையிலே வெண்கோலும்
இசை மேவும் வேய்ங்குழலும் விளங்க
ஏவல்படி தொழில் செய்கின்ற காவல் புரிகின்ற ஆயர்களும்
கன்றுகளுடன் கூடிய பசுக்கூட்டமும் தம்மைச் சூழ்ந்து வர
அரும்புகள் மலர்கின்ற மாலை அணிந்த ஆனாயர்
ஆனிரை மேய்ப்பதற்கு வெளியே வந்தார்.
944.
நீலநிறம் கொண்ட மயில்கள் ஏங்க
வரிசையான கொடிகளில் உள்ள வண்டுகள் முல்லைப் பண்பாட
அழகிய வெண்முல்லை அரும்புகள் புன்முறுவல் செய்ய
அசையும் மின்னலான இடையும்
சூழ்கின்ற மாலைப் பொழுதான கொங்கை அசைவும் கொண்ட
உலகம் என்ற பெரிய அரங்கில் ஆட
காலம் என்ற பருவ மங்கை வந்தாள்.
945.
எல்லாப்பக்கங்களிலும் பசுக்கூட்டம் பரவியிருக்க
மேய்க்க எடுத்த கோலுடைய ஆயர்கள் தொழுதபடி வர
முல்லைக் காட்டில் வரும் தலைவரான ஆனாயர்
அங்கு
கீழே தாழ்ந்த மரக்கிளையில் பூத்த பூக்களில்
தேன்குடித்து களிப்புடன் பொருந்தும் வண்டுகள்
சுழன்று பற்றிக் கொள்ளும் கொன்றை மரம் அருகில் வந்தார்.
946.
அவ்வாறு சேர்ந்த ஆனாயர்
கையால் செய்யப்பட்ட மலர்மாலை போல
மணம் கமழும் மலர்க்கொத்து தொங்கவிட்டு
இருபுறமும் சடைகள் தாழ்ந்து தொங்கும் சிவபெருமான் போன்று
நிறை மணம் கொண்ட கொன்றை மரத்தை
நேராக நோக்கி உருகி
ஒன்றிய சிந்தையால் அன்பை உடைய சிவனிடம் மடை திறந்தார்.
947.
அன்பு உள்ளே ஊறி அமுத இசை எழுப்பும் குழல் ஒலியால்
வன்மையான பூதகணப் படையாளும் இறைவரின் ஐந்தெழுத்தை வாழ்த்தி
தாம் முன் இசைக்கும் முறைப்படி எவ்வுயிரும்
எலும்புடன் உருக வல்ல
இனிய ஓசை தரும் வேய்ங்குழல் கருவிகளில் –
948.
ஏழு விரல்கள் இடையீடு செய்ய உண்டான இன்னிசைக்கருவி எடுத்து
தாழ்கின்ற மலர்களில் மகரந்தத்தை
வண்டு பிடிப்பது போல
சூழ்துளைகளில் தூய பெரும் தனித்துளையில்
நம் ஆனாயர் அழகிய உதடு வைத்து ஊத –
949.
முத்திரைத்துளை முதல்
முறையான தானம் வரை சோதித்து
வைத்த துளை ஆராய்ச்சி செய்வதான
வக்கரனையின் வழிப்பட்ட விரல்களை முறைப்படி செலுத்தி
இசை ஒத்திருப்பது கண்டபின்
அத்தன்மையுடன் ஆரோசை முதல் அமரோசை வரை அமைத்தார்.
950.
மாறி வரும் சுரமுள்ள குறிஞ்சிப் பண்ணின் பின்
முல்லைப்பண் ஆக்கி
பாலை யாழுக்குப் பொருந்திய தாரமும் உழையும்
கிழமை கொள்ள இடும் தானங்களில்
கங்கை உலவும் சடை முடியாரின் திரு ஐந்தெழுத்தின் இசையை
கூறப்பட்ட இளியைக் குரலாக உடைய கொடிப் பாலையில் நிறுத்தி .
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்