பெரிய புராணம் – 33 – 19. அரிவாட்டாய நாயனார் புராணம்

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

பா.சத்தியமோகன்


903.
வரும் புனல் காவிரி நாட்டில் வாழும் ஒரு இடம்
சுரும்புகள் வண்டுகளுடன் சூழ்ந்து ஒலிக்க
விரும்பப்படும் மென் கணுக்கள் கொண்டு
வாய்விட்டு நீளும் கரும்புகள்
தேன் பொழியும் ஊர்
கணமங்கலம்.
904.
செந்நெல் நிறைந்த வயல்களில்
களை என எண்ணிப் பறிக்கப்பட்ட செந்தாமரை
அவற்றின் முன்னர் சங்கு ஈன்ற முத்துகளும் சொரிந்திட
நெருங்கிய உழவர்கள் கையில் கொண்டு நிற்கும் காட்சி
பங்கயமாநிதி கொண்ட தேவர்கள் போல் உளர்.
905.
வளத்தினால் நீண்ட அந்த ஊரில்
வண்டுகள் குடையும் கூந்தலுள்ள பெண்களின் முகத்திலும்
நீலமலர்கள் போன்ற கண்கள்
அவர்தம் கழுத்தில் குழைவாய் செய்த நீலமணி அணிகள்
குளத்திலும் பூக்கின்றன குழையுடைய நீலமலர்கள்.
906.
அத்தகு நல்ல ஊர்தனில்
அறநெறியுடைய இல்வாழ்வு எனும் மனையில் தங்கினார்
பெருநிதியால் செல்வம் மிகுந்த
வேளாண்மையில் தலைமை கொண்டவர்.
907.
தாயனார் எனும் நாமம் தரித்தவர்
நீண்ட காலம் தொடர்ந்தும் தெளிவிலாத திருமால்
மண் தோண்டித் தேடியும் அறியா
அந்தத் தூய புதுமலர்த் திருவடிகளை தொடர்ந்தார்.
908.
மின்னும் செஞ்சடை கொண்ட வேதியரான சிவபெருமானுக்கு
செந்நெல் அரிசியின் இனிய சோற்றுடன் செங்கீரையும்
நிலைத்த பசுங்கொத்தான மாவடுவும் கொண்டு
ஒவ்வொரு நாளும் நியதியாய் அமுது செய்விப்பார்.
909.
இந்த நல்நிலைத் தொண்டினை
இன்னல் வந்த காலத்திலும்
சிந்தையிலிருந்து நீங்காமல் செயலில் உவந்த தாயனாரை
முந்தை வேதமுதல்வர்
அவர் கொண்ட செல்வம் முழுதும்
சென்ற வழி காணாமல் மாற்றினார்.
910.
பொருந்திய செல்வம் முழுதும் யானை உண்ட
விளாங்கனி என அழிந்தாலும்
அன்பினால் பாவையை ஒரு பங்கில் வைத்த இறைவர்க்கு
முன்பு பயின்ற குற்றமிலாத் தொண்டை
தவிர்க்கவில்லை தாயனார்.
911.
துன்பம் அளிக்கும் வறுமை ஏற்பட்டது
கூலிக்கு நெல் அறுத்து
உண்மையின் நீண்ட அன்பினால்
நல்ல செந்நெல்லில் பெற்றனவற்றை
சிவனார்க்கு இனிய திருவமுதாக ஆக்கி ஒழுகலானார்.
912.
செந்நெல் தேடி அறுத்து
பெற்ற கூலி எல்லாம்
திரு அமுதாக அமைத்தார் இறைவனுக்கு.
கார் நெல் அரிந்து பெற்ற கூலியில்
தாம் உணவு செய்து உண்டும் வாழ்ந்தார் இந்நாளில்
திருமாலுக்கும் நான்முகனுக்கும் அரிய இறைவன்
அதை மாற்றினார்.
913.
பொருந்திய வயல்களில் எல்லாம்
நாள்தோறும் காணுமாறு
அழகிய நீண்ட கதிர்கள் கொண்ட செந்நெல் விளைவதாய் ஆக்கிட
மகிழ்ந்து சிந்தை கொண்ட தாயனார்
செந்நெல் அறுத்த கூலி கொண்டு
“இஃது அடியேன் செய்த புண்ணியமே” என
இறைவர்க்கு அமுது செய்விப்பவர் ஆனார்.
914.
நாள்தோறும் உணவிலாததால்
குறையாத அன்புடைய மனைவியார்
வீட்டின் கொல்லையில் புகுந்து
கையால் பறிக்கும் இலைகளைப் பறித்துச் சமைத்து
உண்கலத்தில் இட அதை அருந்தித்
தங்கள் திருக்கடன் தவறாதபடி திருப்பணி செய்து வந்த நாளில் –
915.
வீட்டின் பக்கமிருந்த இலைக்கறிகள் இல்லாமல் போயின
வான்மீன் அருந்ததி போன்ற கற்புடைய மனைவியார்
தண்ணீர் வார்க்க
அதனையே உணவாக உண்டு வந்த தாயனாரும்
விசை செயல் முடித்து வந்த ஒரு நாளில்
இறைவனாரின் தொண்டர்க்கு
அங்கு நிகழ்ந்ததை மொழியும் பேறு பெற்றேன்.
916.
முன்பு போல் முதல்வனாரை அமுது செய்விக்க
மூண்டிடும் ஆசைபோல் தூய செந்நெல் அரிசி, மாவடு,மென்கீரை யாவும்
துன்பம் நீங்கிய மனது கொண்ட தாயனார்
கூடையில் சுமந்துபோக
பின்போகும் மனைவியார் “ஆன் ஐந்து” என்ற பஞ்சகவ்யம் ஏந்திச் சென்றார்.
917.
இவ்விதம் தாயனார் நின்றபோது
கால் தளர்ந்து தப்பியதால் வருந்தி வீழ்ந்தார்
காதலால் மனைவியார் விழாமல் காக்கும் ஆசையால் அணைக்க
எல்லாம் தரைப் பிளவில் சிந்தக்கண்டு
பூத நாயகரின் தொண்டர் “இனி எங்கு போவேன்” என்று –
918.
“நல்ல செங்கீரை தூய மாவடு அரிசி சிந்திவிட்டதால்
அல்லல் தீர்த்து ஆளவல்ல சிவனார் அமுது செய்யும் பேறு
எல்லையிலா தீமையேனுக்குக் கிட்டவில்லையே” என்று
விரைவில் அரிவாளைப் பூட்டி
கழுத்தின் முன் பகுதியை அரியத்தொடங்கினார்.
919.
“ஆட்கொள்ளும் இறைவர் இங்கு அமுது செய்யவில்லையே”என
பூட்டிய அரிவாளைப் பற்றிப் பிடித்து
பொருந்திய பிறப்பை அரிவார் போல
குற்றம் நீங்கிப் பொருந்தும் அன்பு காட்டிய வழியில்
கழுத்துடன் பின் கழுத்தும் பிளவுபட அரிந்தார்.
920.
குற்றமிலா சிந்தையுடைய தாயனாரின்
கழுத்தை அரிகின்ற அரிவாள் பற்றும்
குற்றமிலா வண்மையுடைய கையைத் தடுத்து மாற்ற
அம்பலத்தில் ஆடும் இறைவரின்
வீசிய செய்ய இடக்கையும்
மாவடுவினது “விடேல் விடேல்” என்ற ஓசையும்
நிலவெடிப்பினின்று ஒரு சேர எழுந்தது.
(விடேல் = மாவடு கடித்தலால் எழும் விடேல் என்ற ஓசை)
921.
அவ்விதம் எழுந்த இறைவரின் திருக்கை
வலிய கையைப் பிடித்ததும் அவர் அஞ்சினார்
அப்போதே புண் நீங்கி வினை நீங்கி
தம் பெருமானை நோக்கிய கைகளை அஞ்சலியாகக் குவித்தார்.
922.
அடியேனின் அறிவிலாமை கண்டும்
என் அடிமையை வேண்டிப் பொருட்படுத்தி
நிலவெடிப்பிலே வந்து இங்கு அமுது செய்கின்ற
தூய நற்சோதி போற்றி
திருநீற்றுப் பொடியணிந்து உமாதேவி அருகில் சென்று
புரிசடையும் பவளமேனியும் கொண்ட புராணா போற்றி.
923.
என்று தாயனார் துதிக்க
காளை வாகனராய் தோன்றி
“நன்று! நீ புரிந்த செய்கை! நல் நெற்றியுடைய
மனைவியுடன் என்றும் நம் உலகில் வாழ்வாய்” என
அம்பலத்தில் ஆடும் இறைவர் அருள் செய்ய
தாயனாரும் அவர் மனைவியாரும் உடன் புறப்பட்டனர்.
924.
பரிவு பொருந்திய சிந்தை உடைய அன்பர்
“பரம் பொருளான இறைவர் அமுது செய்யும்பேறு
பெறாதவன்” என வரியுடைய மாவடுவின்
விடேல் என்ற ஓசை கேட்கும் முன்
தம் கழுத்தை அரிவாளால் பூட்டி அரிதலால்
“அரிவாள் தாயர்” என்ற தூய பெயர் பெற்றார்.
925.
செந்நெல் அரிசி முதலியவை சிந்த
அவை சிந்திய நிலவெடிப்பு முன்னிலையாய்
இறைவர் அமுது செய்து அருள
அந்நிலையில் மாவடுவினது
“விடேல்” என்ற ஓசையைக் கேட்கும் பேறு பெற்ற
தொண்டரின் திருவடி வணங்கித் துதித்து
நிலை பெற்ற ஆனாயரின் செய்கை
அறிந்தவாறு துதிக்கத் தொடங்குகிறேன்.
(அரிவாட்டாய நாயனார் புராணம் முற்றிற்று )
—-
cdl_lavi@sancharnet.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்