எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )

This entry is part [part not set] of 39 in the series 20050203_Issue

தமிழாக்கம் : நாகூர் ரூமி


எறியப்பட்ட பந்தின் நீள்வட்டத்தின் கீழே
பெரியவனாகிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை.
வெகு நேரம் வானம் பார்த்துக்கொண்டிருந்தேன் நான்.
பந்து விழுந்தது என் கையில், அது பாடியது
மூடிய என் கைகளில் : திற திற
கொலை செய்ய வடிவமைக்கப்பட்ட
பரிசுப் பொருளைப் பார்.

என் குறிபார்க்கும் கண்ணாடியில் தெரிகிறான்
சாகப்போகும் ராணுவ வீரன்.
அவன் புன்னகைக்கிறான், அங்கும் இங்கும் அலைகிறான் —
அவன் அம்மா மட்டுமே அறியும் பழக்கங்கள்.
என் விசை அழுத்தல் அவன் முகம் தொடுகிறது : நான் அழுகிறேன்
இப்போது, பிசாசைப் போல, கேட்கிறது மரணம்

பார், மனசால் ஆன மனிதன் ஒருவனை
மண்ணாக ஆக்கிவிட்டது.
இந்த சூனியம்
நான் செய்கிறேன்.
சபிக்கப்பட்ட எனக்கு
அன்பின் மையம் சிதைந்து பரவுவதில்
இன்பமிருக்கிறது
அன்பின் அலைகள்
வெற்றிடத்தை நோக்கி பயணிக்கின்றன.
ஒரு பேயை உருவாக்குவதுதான் எவ்வளவு எளிது!

கல்லின் மீது தெரியும்
தன் குட்டி நிழலைத் தொடுகிறது எடையற்ற கொசு.
மனிதனும் நிழலும் அங்கு சந்திக்கின்றனர்
எடையற்ற இலகுவில்.
அவர்கள் ஒன்றாகின்றனர்.
மனிதன் என்பது ஒரு நிழல்தான்
கொசு போல சாவு வரும்போது.

அருஞ்சொற் பொருள்
—-
பந்து — துப்பாக்கிக் குண்டையோ அல்லது எறிகுண்டையோ குறிக்கும். சின்ன வயதில் பந்தை எறிந்து விளையாடும் சிறுவன் ராணுவ வீரனாக குண்டை எறிந்து விளையாடுவதும் உட்குறிப்பு.

யந்திரமயமாக்கப்பட்ட போர் மனிதனையும் மனிதாபிமானத்தையும் சேர்த்துக் கொல்லுவதை இந்தக் கவிதை தனது பாணியில் அழகாகச் சொல்கிறது.

கவிஞர் பற்றிய குறிப்பு
====
கெய்த் டக்ளஸ் (1920 – 1944)

கெய்த் டக்ளஸ் இங்கிலாந்தின் கெண்ட் மாகாணத்தில் டர்ன்ப்ரிட்ஜ் வெல்ஸ் என்ற ஊரில் ஜனவரி 1920ல் பிறந்தார். வீட்டுக்கு ஒரே பிள்ளை. அப்பா ராணுவத்தில் பணி புரிந்ததனாலோ என்னவோ, சின்ன வயதிலிருந்தே ராணுவம் சம்பந்தப்பட்ட சமாச்சாரங்கள்தான் கெய்த்துக்கு இஷ்டம். விளையாட்டு பொம்மைகள்கூட டாங்க், துப்பாக்கி போன்றவைதான்! தன் 14வது வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்துவிட்டார்.
முதல் உலகப்போர் 1939ல் தொடங்கியபோது கெய்த் ஆக்ஸ்ஃபோர்டு மெர்ட்டன் காலேஜில் சேர்ந்திருந்தார். உடனே படிப்புக்கு கல்தா கொடுத்துவிட்டு ராணுவத்தில் சேர பெயர் கொடுத்தார். ஆனாலும் உடனே அவர் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. கொஞ்ச காலத்துக்கு கல்லூரிப் படிப்பை மீண்டும் தொடர வேண்டியிருந்தது.

அவருடைய ஆசிரியர்களில் ஒருவரான எட்மண்ட் ப்ளண்டன் என்ற கவிஞர் முதல் உலகப் போரில் பங்கெடுத்தவர். பதுங்கு குழிகளில் இருந்த அனுபவம் கொண்டவர். அதைப்பற்றி கவிதைகள் எழுதியவர். ஆகவே கெய்த்தின் கல்லூரிச் சூழலும் அவருக்கு யுத்தத்தை அறிமுகப்படுத்துவதாகவே இருந்தது.

1940ல் ராணுவத்தில் குதிரைப்படை அதிகாரியாக சேர்ந்தார். மத்திய கிழக்கு நாடுகளிலெல்லாம் பணியாற்றிவிட்டு ஆப்பிரிக்க பாலைவனத்தில் பீரங்கி யுத்தப் பயிற்சிக்காகச் சென்றார். பின்னர் அலெக்சான்ட்ரியாவுக்கு அனுப்பப் பட்டார். அங்கு 1942ல் நடந்த ‘அல் அமீன் ‘ என்ற போரில் நான்கு நாட்களுக்கு மேல் அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதுதான் அவருடைய முதல் நேரடியான யுத்த அனுபவம். அவருடைய கவிதைக்கு நிறைய தீனி போட்டது அது.

1943, ஜனவரி 15 அன்று வாடி ஜம்ஜம் என்ற இடத்தில் நடந்த போரில் அவர் காயமடைந்தார். சுகமடந்து திரும்ப பாலஸ்தீனத்துக்கு அனுப்பப்பட்டார். இங்கிருந்தபோதுதான் ‘அல் அமீனிலிருந்து ஜம்ஜம் வரை ‘ என்ற தலைப்பில் தனது உணர்ச்சி கலக்காத முதல் போர்க்கவிதைகளை எழுதினார். ‘எப்படிக் கொல்வது ‘ என்ற கவிதையும் அந்த தொகுப்பில் உள்ளதுதான். இரண்டாம் உலகப் போர்க்கவிதைகளில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் கவிதை இது.

1944, ஜூன் 6ம் தேதி நார்மண்டியின் கோல்டு பீச்சில் நடக்க இருந்த தாக்குதலுக்கு தலைமை தாங்கி பீரங்கிப்படை அதிகாரியாகச் சென்றார். ஆங்கிலக் கணவாயைக் கடந்து வடக்கு ஃப்ரான்ஸில் ஜெர்மானியர் ஆக்கிரமித்திருந்த நார்மண்டிக்கு செல்லத் தயாராக இருந்ததது பீரங்கிப் படை. ‘ஐரோப்பாவின் சிறகுகளில் காத்திருக்கும் நடிகர்கள் ‘ என்ற கவிதையை அப்போது எழுத ஆரம்பித்தார். பீரங்கியை விட்டிறங்கி ஜெர்மானிய ஆக்கிரமிப்பிலிருந்த செய்ண்ட் பியர் என்ற கிராமத்தை நோக்கி கெய்த் நடக்க ஆரம்பித்தார். அப்போது வெடித்த ஒரு நிலத்தடி குண்டில் அங்கேயே உயிரிழந்தார்.

அப்போது அவருக்கு வயது 24.

‘ஐரோப்பாவின் சிறகுகளில் காத்திருக்கும் நடிகர்கள் ‘ முடியவில்லை.

இரண்டாம் உலப் போர் பற்றிய கவிதை எழுதியவர்களில் மறக்க முடியாத, தவிர்க்க முடியாத ஒரு பெயர் கெய்த் டக்ளஸ்.

Series Navigation

நாகூர் ரூமி

நாகூர் ரூமி