மீட்டெடுக்கச் சொல்கிறேன்

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

செல்வநாயகி.


****
அடுக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கிறது
என் மனம்
அறைகளால் ஆன
அப்பத்தா சுருக்குப்பை போல
நிகழ்வுகளின் எச்சங்கள்
அடுக்குகளுக்குள் சொருகப்படுகின்றன
ஞாபகக்கட்டுக்களாய்

ஒழுங்குகள் அற்றுப்போய்
ஒரு சீட்டாட்டக்கட்டுக்கான தன்மையில்
கலைந்துகிடக்கின்றன ஞாபகங்கள்
இழுக்கப்பட்டும் சொருகப்பட்டும்

ஒவ்வொருமுறையும் முதல்ரேங்க்குடன்
முன்னேற்ற அறிக்கை வாங்கியபோது
அகிலம் ஜெயித்ததாயுணர்ந்த
பள்ளிநாட்களின் பிள்ளைப்பிராயங்களுடன்
உலகம் புரியத்துவங்கி
வழிகளில் தட்டுப்பட்ட
கால்கிழிக்கும் கண்ணாடிகள்
சுமப்பதாய்ச் சொல்லி
சிறிது தூரத்தில்
தள்ளிவிட்டோடிய பொய்க்குதிரைகள்
என்பட்டம் கைவிட்டு நழுவியபோது
மகிழ்ச்சியில் வெடித்த
வெறும் காற்றுப்பலூன்கள்
எப்போதேனும்
என் ஓட்டத்திற்கிடையிலும்
நீர்கொண்டு நின்ற
சில ஒற்றைக்குவளைகள்
இவையாவும் இன்னபிறவும்
என் மன அடுக்குகளில்
அங்கங்கு தத்தமது
அடையாளங்களைப் பதுக்கியிருக்கலாம்
எல்லாம் கிடக்கட்டும்

சுற்றிலும் பூப்பூத்திருந்தவேளையில்
நான் வாசித்துச் சுகித்த
உன் முதல் கடிதத்தின்
காதல் நினைவுகளைமட்டும்
அடிக்கடி மீட்டெடுக்கச்சொல்கிறேன்
என் மனதிடம்
அது நடந்த போதிருந்த
அதே தீவிரத்துடன்
—-
snayaki@yahoo.com

Series Navigation

செல்வநாயகி.

செல்வநாயகி.