பிணம் செய்த கடல்

This entry is part of 64 in the series 20050113_Issue

இளைய அப்துல்லாஹ்


—-

அலைகள் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டே இருந்தோம்
அது எங்களிடம் வரும் வரை
அலைகளை எப்பொழுதும் நேசித்துக்கொண்டே இருந்தோம்
அது எங்களை காவு கொள்ளும் வரை

அலைகள் ஒரு விருப்புக்குரிய ஒன்றாகவே இருந்தது
டிசம்பர் 26 வரை.

கால் நனைக்கவும் கட்டிப்பிடிக்கவும்
என்றுதானே எண்ணியிருந்தோம்
காவு கொள்ளப்படும்வரை.

அலைகள் அழகாகத்தானே இருந்தன
ஏன் இப்படி ஆவேசம் கொள்ளும்படியாய் ஆனதே

அலைகளே அலைகளே இனி
எப்பொழுதும் இப்படித்தானா ?

உல்லாசம் என்றால் கடல் என்றுதானே எண்ணியருந்தோம்.
காவு கொள்ளும் என்று யாருமே சொல்லவில்லையே..
உலகம் அழிந்து விடும் அழிந்து விடும்
என்றெல்லாம் சொன்னார்கள்
உலக அழிவு என்றால் இப்படித்தானா ?

ஊழிக்காலத்தில் வாழ்கிறோம் என்றார்களே
நம்பவில்லையே நாம்
ஆழிப்பேரலை எம்மை வந்து அள்ளும்வரை.

அலை அள்ளிய பிணங்களின் மீது நடக்கிறோம்
இன்னும் கரை நெடுக

அலையே அலையே உன்னைப் பார்க்க இன்னும்
பயமாய் இருக்கிறது.

இனிமேலும் கால் நனைக்க வரமாட்டோம் உன்னண்டை
எமது உடல்கள் மீது மிதித்து.

27.12.2004

இளைய அப்துல்லாஹ்-
இலங்கை—-
anasnawas@yahoo.com

Series Navigation