ஆயிரம் நதிகளாய்….(மூலம் :சித்தலிங்கையா – கன்னடம்)

This entry is part of 64 in the series 20050113_Issue

தமிழாக்கம் : புதுவை ஞானம்


என் மக்கள் வந்தனர்
நேற்று, என் மக்கள் வந்தனர்.
மலைகளைப் போலவும்
உருளும் பாறைகளைப் போலவும்
கருத்த முகங்களுடனும்
எரிக்கும் விழிகளுடனும்
ஜொலிக்கும் மீசைகளுடனும்
ஆர்ப்பரித்து வந்தனர் என் மக்கள்.

இரவையும் பகலையும்
தூள் தூளாக்கி
தூக்கத்தை உதறி
கோபாவேசத்தோடு அவர்கள்
உதைத்து எழுந்த போது
அவர்தம் கந்தற் படுக்கைகள்
அழுதன வலியால்.
பூமி நடுங்கியது
அவர் தம்
பாதங்களின் அடவுகளில்-
சிங்கங்களும், புலிகளும் போல்
கர்ஜித்து
படைப் பிரிவாய், அணி அணியாய்
என் மக்கள் வந்தனர்.

‘தீண்டாமை ஒழிக ‘
உடமை வர்க்கத்தின்
அகங்காரம் ஒழிக ‘ ‘ என
முழங்கிக் கொண்டு வந்தனர்.

புற்றிலிருந்து புறப்படும்
பாம்புகள் என….
தெருக்கள் வழி நுழைந்து
நகரம் முழுவதும் நிறைந்தனர்.
பாதாளம் வரை வேர்விட்டு
ஆகாயம் வரை நிமிர்ந்தனர்-
தெருக்களையும்
சந்துகளையும் நிரப்பினர்-
நிலப்பிரபுக்களும்
முதலாளிகளும் வசிக்கும் இடங்களை
வேலிகளாய்ச் சுற்றி வளைத்தனர்

என் மக்கள்…
பேசத் தொடங்கியதும்
ஆண்டைகளின் குரல்
அமுங்கிப் போயிற்று-
என் மக்கள்
நாவசைத்த போது
ஆண்டைகளின்
நாவுகள் பிணைக்கப்பட்டன.

சவுக்கால் அடித்தவர்களின்
குரல்வளையை நெறித்தன-
என் மக்களின் கரங்கள்.
ஆயிரம் நதிகளாய்..
ஆர்ப்பரித்து வந்த
என் மக்கள் வெள்ளத்தின்
போராட்டப் பிரளயத்தில்
காவல் துறையின் லத்திகளும்
கருங்காலிகளின் சவரக்கத்திகளும்
வேதங்களும், புராணங்களும்
சாத்திரங்களும்
ஆயுதக்கிடங்குகளும்
சருகுகள் போலவும்
குப்பைகள் போலவும்
மிதந்து சென்றன
சமுத்திரம் நோக்கி ‘
—-
ஆங்கிலம் வழியாக தமிழில் மொழிபெயர்ப்பு புதுவை ஞானம்

Series Navigation