பூகம்பத்தில் எமனாய் எழுந்த பூதக்கடல் அலைகள்!

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

சி. ஜெயபாரதன், கனடா


கங்கு கரையின்றி கண்ணுக்கு எட்டாது,
களைப்பே அடையாது,
பொங்கிப் புரண்டு சுழற்றி
சிங்கக் கால்கள் போல்
ஓங்கி அடித்து
அலைப் படைகளால் தாக்கி
ஆக்கிரமித்து
அடிமேல் அடி வைத்து
கரை மண்டலத்தைக் கைப்பற்றி,
தரையை வெறிதாக்கி
குடிநீரில் உப்பிட்ட
ஓங்காரி,
ஆங்காரி அன்னை
அடிக்கடல் மடியில் உடுக்கடித்து
உசுப்பி விட்டு
ஒரே மூச்சில் எளியோரை விழுங்க,
ஆயிரம், ஆயிரம்
வாய்திறந்த
பேய்த் திமிங்கலங்களைப்
பாயும்படி
ஏவி விட்டாளா ?

கடல்கன்னி வயிற்றைக் கொட்டியது
கருந்தேளா ?
அன்றிப் பெருந்தேளா ?
கடற் சட்டிக்குள் வெடித்தது என்ன ?
எவரும் காணாத சமயத்தில்
கடல்மாது
பெருத்த பீப்பாய் இடையில்
தட்டி விட்டு
ஒட்டியாணத்தில் ஒளிந்திருந்த
அணுகுண்டுகள் வெடித்தனவா ?
அதிர்ச்சியில்
அசுரக் குமிழி குடைபோல் விரிந்து
ஆயிரம் ஆயிரம்
சுறாமீன்கள் கரைநோக்கிப்
புறப்பட்டனவா ?
துடிப்புடன்
புடைத்து வீங்கிடும் கடல்மேனி!
பொங்கிப் பொங்கி எழுந்திடும் பரமனின்
கங்கை வெள்ளம்!

பெருங்கடல் எழுப்பிய பேரதிர்வால்,
கரையில் இட்ட
வரை எல்லை தாண்டி
படையெடுக்கும் பூத வெள்ளம்!
படுத்துக் கிடக்கும் பல்லாயிரம் பாம்புகளை
நெளியவிட்டு
கடலலை மதில்களாய்ப்
படமெடுக்க வைத்து
பாமரரைக்
குடம்தூக்க வைத்தாளா ?
கடலைக் கலக்கி
எட்டுவால் ஆக்டபஸ் கூட்டம்
எமனாய் வந்து மாந்தரை
ஏழு திக்கில் அழித்தனவா ?
பூதேவி அடி வயிற்றில்
பூகம்பக் குத்து விட்டு
கடல் தூக்கி
கரகமாடி
கால்களில் மிதித்து, மிதித்து
கோர தாண்டவக் கூத்தில் மாந்தரைக்
கொள்ளை யடித்துப்
போனாளா ?

ஈழத்து விடுதலைக்குப் போராடி
எண்ணற்ற வீரர்
வாழாது உயிர் நீத்தார்!
அந்தோ!
எந்த விடுதலைக்கு
இத்தனை உயிர் குடித்தாய்,
ஈழத் தீவினிலே ?
ஈராக் விடுதலைக்கு ஆயிரக் கணக்கில்
ஏவுகணை வீசி
ஏராள மான
அரேபிய மக்கள்
ஈசல்போல் மாயும் இடுகாடு ஒருபுறம்!
வேண்டாம் விடுதலை,
வெளியேறிச் செல்லென்று
வெடிகளில் உயிர்விட்டு
மார்க்க மற்ற மக்கள்
உயிர்குடிக்கும்
மூர்க்கர் சுடுகாடு மறுபுறம்!
வரலாற்றுக் கல்லறையில் இத்தனை
நரபலிகள் போதாவோ ?
பெற்று வளர்த்து பெயரிட்ட
சிற்றுயிர் மழலைகளை
வெற்றுடலாக்கி
ஆங்காரி அன்னை அலங்கோலமாய்
கடல் உப்பில் கலக்கி
கருமாதி செய்வாளா ?

விதி யென்னும் வேடன்
சர்வ மாந்தரைச் சமாதியில் தள்ளும்
மர்மச் சதியா ?
உன் வயிற்றில் உதித்த மதலைகள்
கடலில் மூழ்கிய போது
கண்களில் கருமுகில் பெருகி
நீர்மழை வரவில்லை!
அசுர உடல்களை நசுக்கி
பழகிப் போன
பரமனின் பாதங்கள்
மனிதச் சடலங்கள் மீது
கடல் திடலில்
சடுகுடு ஆடின!
உடுக்கை அடித்து தாண்டவம் ஆடும்
காலக் குயவன்
ஞாலத்தைக் குலுக்கி
கண்ணிமைப் பொழுதில் வயிறு புடைக்க
காலனுக்கு விருந்தளித்து
நமக்கு
நிரூபிப்ப தென்ன ?
நிலையாமை என்னும்
புரியாத புதிரை மீண்டும்
நினைவூட்டு கிறானா ?
பிரபஞ்ச முடிவை
பிரதிபலித்து
கண்முன்னே திரையிடும்
பிரளயக் கூத்தின் ஒத்திகைப்
புராணமா ?

கணவனை இழுந்தோர் எத்தனை ? எத்தனை ?
காயமுற்றோர் எத்தனை ? எத்தனை ?
மனைவியை இழுந்தோர் எத்தனை ? எத்தனை ?
மதலைகள் இழுந்தோர் எத்தனை ? எத்தனை ?
தாயை இழுந்த குழந்தைகள் எத்தனை ?
தந்தை இழுந்த மழலைகள் எத்தனை ?
உற்றார், உறவினர், தோழர்
செத்தார்! மறைந்தார்! புதைந்தார் கடலில்!
கால் மில்லியன் உயிர்களைப் பறித்து
காலனுக்கு ஈந்து
ஐந்து மில்லியன் நபர்க்கு
ஆருயிர்ப் பிச்சை அளித்தாளா ?
உருக்குலைந்து அனைவரையும்
அகதிகளாய் ஆக்கி
தெருப்பிச்சை வாங்க வைத்தாளா ?
குடிக்க நீரில்லை!
கும்பிக்கு உணவில்லை!
உடுக்க உடையில்லை!
படுக்கப் பாயில்லை!
மடியில் பணமில்லை!
ஒதுங்க நிழலில்லை!
உறங்கக் குடிலில்லை!
மீன்பிடிக்க வலையில்லை!
கடல்மீது செல்லப் படகில்லை!
சோலை வனத்தைச் சூறை யடித்து
பாலை ஆக்கினாள்,
பாதகி அன்னை!

குடிமக்களை ஒரு துடைப்பில்
வழித்து
முடிவோலை வாசித்து
விடுதலை அளித்த
இடுகாட்டு அன்னையே!
உயிரினத்தை
ஏனிந்தப் புவியில் மட்டும்
படைக்கிறாய் ?
படைத்த பின்
ஏனிந்த
மானிடத்தை மட்டும்
ஞானமற்று அழிக்கிறாய் ?
காடேறிக் கருமாதி யாகும் த்மாக்கள்
சூடேறிக் கொதித்துப்
பாடும் ஓலம் இது:
புத்த களத்தை
செத்த களமாக்கிய தாயே!
ஓயுமா உந்தன்
மாயத் திருவிளையாடல் ?
நிலநடுக்கத்தை நிறுத்து!
இலையேல் கூடுகளில்
கோடி கோடியாய் குஞ்சுகள் பொரித்து
வெளிவரும் முன்
முட்டைகளை உடைத்து நீயே
குடித்திடு!

****
jayabarat@tnt21.com (S. Jayabarathan January 4, 2005)

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா