பெரியபுராணம் – 25

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

பா.சத்தியமோகன்


550.
சுந்தர மூர்த்தி சுவாமிகள் துதி
தாமரையில் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும்
காணுதற்கு அரிய சிவபெருமான்
பலரும் புகழும் திருவெண்ணெய்நல்லூரில்
(ஆவண) ஓலையின் பழைமை காட்டி
உலகம் உய்வதற்காக ஆளப்பட்ட
நம்பியாரூரர் திருவடிகள் தியானித்து
தலை மீது வைத்து வாழும் தலைமையே நம் தலைமையாகும்.
3. இலைமலிந்த சருக்கம்
( இச்சருக்கத்தில் எறிபத்த நாயனார் புராணம்
ஏனாதி நாயனார் புராணம்
கண்ணப்ப நாயனார் புராணம்
மானக்கஞ்சாற நாயனார் புராணம்
அரிவாட்ட நாயனார் புராணம்
ஆனாய நாயனார் புராணம் என்று 06 நாயன்மார் புராணம் கூறப்படுகிறது )
[எறிபத்த நாயனார் :-
கருவூரை தலைநகராக கொண்ட சோழநாட்டில் சிவனடியார்களுக்கு தொண்டு செய்பவர்
ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ?எறிபத்தர் ?. அவர் சிவனடியார்க்கு எவரேனும்
ஊறு செய்தால் தண்டிப்பதற்காகக் கையில் மழுவாயுதம் ஒன்றை வைத்திருந்தார்.
அவ்வூரில் ?சிவகாமி ஆண்டார் ? என்பவர் வாழ்ந்து வந்தார்.
அவர் இறைவர்க்கு மலர்களைப் பறித்து கொண்டு சாத்தும் திருப்பணியை மேற்கொண்டவர்.
ஒரு நாள் ஆற்றில் நீராடிப் புகழ்ச் சோழமன்னனின் பட்டத்து யானை வந்தது.
அது அப்போது மதம் பிடித்ததாக இருந்தது. அதனால் சிவகாமி ஆண்டார் கொண்டு
சென்ற மலர்க் கூடையைப் பறித்து கீழே சிதறுமாறு செய்தது.
பாகர்கள் அதனை விலக்கவில்லை. அவர் அந்த யானையைத் தாக்கச் சென்றார்.
ஆனால் அதற்குள் ஓடி விட்டது. சிவகாமி ஆண்டார் கீழே விழுந்து விட்டார்.
?சிவசிவ ? என்று அலறினார். அப்போது அங்கு வந்த எறிபத்த நாயனார் அந்த யானை
எந்தப் பக்கம் சென்றது என்று கேட்டறிந்து அந்த யானையைத் தம் கையில்
உள்ள மழுவால் வெட்டினார். உடன் வந்த பாகரையும் கொன்றார்.
யானையும் பாகரும் மடிந்த செய்தியைப் புகழ்ச்சோழர்க்கு அவருடைய ஆட்கள்
தெரிவித்தனர். சினம் கொண்டார் மன்னர். போருக்கு புறப்பட்டார். போர் வந்துவிட்டது
என எண்ணினார் போலும்!
யானை இறந்து கிடந்த இடத்தில் எறிபத்தரை மன்னர் பார்த்தார். எறிபத்தர்
தாம் யானையையும், யானைப் பாகரையும் கொன்றவர் என அறிந்தார். தக்க காரணம் இன்றி
அவர் யானையையும் பாகரையும் கொன்றிருக்க மாட்டார் எனவுணர்ந்தார்.
சிவனடியார் ஒருவருக்குச் சினம் உண்டாகும் நிகழ்ச்சி உண்டாகிவிட்டதே ! என்று
கவலை கொண்டார். நிகழ்ந்ததை எறிபத்தர் விளக்கினார். மன்னன் எறிபத்தர் கொடுத்த
தண்டனை போதாது; தம்மையும் தண்டிக்குமாறு வேண்டினார்; தம் வாளையும் தந்தார்.
?இத்தகைய உயர்ந்த மன்னருக்கு யானையைக் கொன்று தவறிழைத்து விட்டேனே!
என்னை மாய்த்துக் கொள்வதே தக்க தண்டனை! ? என்று தம்மை மாய்த்துக் கொள்ள
எறிபத்தர் முயன்றார். அதைப் பார்த்த மன்னர் திடுக்கிட்டு எறிபத்தரையும் அவருடைய
கையில் இருந்த வாளையும் பிடித்துக் கொண்டார்.
அப்போது ஓர் அசரீரி. ?உங்கள் இருவரின் அன்பைப் புலப்படுத்தச் சிவபெருமான்
அருளால் யானை மலர்களைச் சிதறியது ? எனக் கூறியது.
எறிபத்தர் மன்னரை வணங்கினார். மன்னரும் எறிபத்தரை வணங்கினார்.
சிதறிய மலர்க்கூடையில் மலர்கள் நிறைந்தன. யானையும் பாகரும் உயிர் பெற்றெழுந்தனர்.
சிவகாமி ஆண்டார் இறைவன் அருளை வியந்து திருக்கோயிலுக்குச் சென்றார்.
எறிபத்தர் தொண்டு செய்யச் சென்றார்.
14. எறிபத்த நாயனார் புராணம்
(அடியவர்க்கு உண்டாகும் இடரை பரசு எறிந்து தீர்க்கும் வகையினால் பக்தி செய்து
இப்பெயர் பெற்றார் )
551.
செழுமையான நீர் சூழ்ந்திட இம்மண்ணுலகத்தில்
இளமையான எருதை ஊர்தியாய் உடைய
சிவனடியார்க்கு இடையூறு உண்டான போது
விரைவாய் வந்து போக்கும் செயலைச் செய்யும் தன்மை கொண்ட
எல்லையிலாப் புகழுடைய எறிபத்தர் பெருமை எம்மால்
சொல்லில் அடங்குகின்ற தன்மையன்று
எனினும் ஆசையால் சொல்லத் தொடங்குகிறேன்.
552.
பழமையான நெடிய ?கருவூர் ? எனப் பேசப்படுகிற
ஒளியும் அழகு வீதியும் கொண்ட பழமையான ஊர்
வெற்றிக்குறியாய் இமயமலை உச்சியில் புலிச்சின்னக் கொடி விளங்க
அம்மலையை இடித்து காவல் பொருந்த உண்டாக்கிய
புதிய வழியே வழியென விளங்க மற்ற வழிகள் அடைத்து விட்ட
கரிகால் சோழன் முதல் அநபாயர் சோழர் வரை
சிறப்பில் நிலை பெற்ற முடிமன்னர்கள் தலைநகரம்.
553.
மிகமிக உயர்ந்த மதில் மேகத்தைச் சூழும்
மாளிகையோ விண்ணைச் சூழும்
தூயமணிகள் வாயிலைச் சூழும்
சோலையில் பூவாசனை சூழும்
தேன்மலர் கூந்தலைச் சூழ சில பெண் நிலவுகள் தெருவில் சூழும்
தேவர்கள் குழுமிய இந்திரனின் நகரம் இதனால் தாழும்!
554.
மதயானைகள் நீர்த்துறையில் ஆடும்
களிக்கும் மயில்கள் காட்டில் ஆடும்
அடர்ந்து பதித்த மணிகள் ஆடல் அரங்கில் ஆடும்
பெண்கள் கூந்தலில் வண்டுகள் ஆடும்
படர்ந்த ஒளி கொண்ட வீதியில் கொடிகள் ஆடும்
அவை சந்திர சூரியர் மீது ஆடும்
அகன்ற நெடிய உலகம் கொண்டாடும் நகரின் வளமை இத்தகையது.
555.
நிலைத்த சிறப்பால் மிக்க வளநகர் கருவூர்
அதனில் பொன் வேலைப்பாட்டால் ஆன மதில் சூழ
உழைப்புடைய அன்பால் மிக்க தொண்டர்கள் சிந்தையில்
நீங்காதிருக்கும் நிலை போல
அரசனார் நிலை பெற்று வாழ்கின்ற
?திருவானிலை ? எனும் கோயில் விளங்கியது.
556.
உண்மைப் பொருள் தரும் வேதங்கள் கடந்த
புனிதரான சிவபெருமானை இனிதாய் அக்கோவிலில்
மருளான பிறவிப்பகை போக்கு நெறியால்
வணங்கி வழிபடும் தொழில் கொண்டவராய்
இருள் போன்ற வி ?ம் ஒடுங்கிப் பொருந்திய
கழுத்துடைய சிவபெருமானுக்கு அடிமை பூண்டவருக்கு
அருட்பெரும் தொண்டு செய்வார் ஒருவர்
அவரை எறிபத்தர் என அழைப்பர்.
557.
மழை வளரும் உலகில் எங்கும்
நிலை பெற்ற சைவம் தழைக்க
தீ நிறம் கொண்ட சடையானின் அன்பர்க்கு
உண்டாகத் தகாத இடர் விளைந்த போது
குகை விட்டுப்பாயும் சிங்கம் போலத் தோன்றி
முரண்பட்ட வன்மையை எறிந்துபோக்கும் படைக்கலமான
பழம்மறைகள் போற்றிய மழு என்ற படைக்கலம்
எப்போதும் ஏந்தியிருந்தார் எறிபத்தர்.
558.
அவ்வாறு எறிபத்தர் வாழ்ந்த நாளில்
திருவானிலை கோவிலுறை சிவபெருமானின் மீது
திண்மையான அன்பு கூர்ந்த
சிவகாமி ஆண்டார் எனும் புண்ணிய முனிவர்
விதிப்படி மலர்கள் கொய்து மாலையாய்க்கட்டிச் சாத்தி
உள்ளத்துள் நிறைந்த காதலோடு ஒழுகுவார்
அப்படி ஒரு நாளில் –
559.
விடியற்காலம் உறக்கம் விட்டெழுந்து
வெளியே சென்று புனலில் மூழ்கி வாயும் கட்டி
கொத்துமலர் சூழ்ந்த பூஞ்சோலை சென்று
பழகிய கையினால் அன்று மலரும் அரும்புகளாகக் கொய்து
அவற்றை தெய்வநாயகர்க்குச் சாத்தும்
திருப்பள்ளி மாலைகளைக் கொய்து —
560.
தம் அழகிய மலர்க்கூடை நிறைத்தார்
நெஞ்சில் தூய நேசம் கொண்டு நிரப்பினார்
அழகிய கையில் தண்டும் கொண்டு அங்கு
ஆலயம் நோக்கி மாலைகட்டிச் சாத்தும் காலையில்
வந்து உதவ விரைவாக வரலானார்.
561.
சிவகாமி ஆண்டார் இவ்வாறு வருகையில்
வளமையான கருவூர் நகரின் நிலை பெற்ற மன்னர்
அநபாய சோழன் வழியிலான புகழ்ச்சோழனாரின்
பட்டர்த்தனம் எனும் பெயர் கொண்ட யானை வந்தது
பகைவரின் போர்முனைகளை வெல்லும் யானை அது
அலங்காரம் மிக்க யானை நவமியின் முதல்நாளில் –
562.
மங்கல திருவிழா அணி அணிந்து ஓடி வரும்
நதித்துறையில் நீராடிய களிப்போடு
மதநீர் ஒழுக
அங்கங்கு நிற்பவர் அஞ்சி ஓட
மலை போல் தோன்றி அச்சம் தர வந்தது.
563.
வெற்றியுடைய அந்த யானை
தன் மீது கொண்ட பாகரோடு சென்று ஒரு தெருவில் முட்டியது
முன் சென்ற சிவகாமி ஆண்டாரைப் பின் தொடர்ந்து பறித்ததால்
தண்டில் தூங்கும் மலர் கொண்ட பூக்கூடை சிந்திவிட்டது.
564.
களிற்றின் மேலிருந்த பாகர் அதனைக் கண்டவுடன்
ஊழிக்காற்றால் கொண்டு செல்லப்படுபவர் போல அகன்றார்
நூல் கொண்ட மார்புடைய தொண்டர்
யானையை நோக்கிப் பதைத்து பொங்கி
மதம் கொண்ட யானையின் பின்னால் தண்டு கொண்டு அடிக்க வந்தார்.
565.
அப்பொழுது அந்த வலிய யானை
சிவகாமி ஆண்டார் நெருங்க முடியாதபடி அகன்றது
உண்மைத் தன்மையுடைய அத்தொண்டரால்
முதுமையினால் விரைவாகப் பின்தொடர இயலவில்லை
எனவே அதைப்போக விட்டார்
பிறகு தரையில் விழுந்து கையால் தரையில் அடித்து மோதி
சொல்லவியலாத் துன்பம் மிகப் பெற்றுச் சினந்து
சிவதா சிவதா என்பார்.
(சிவதா – நன்மை செய்பவனே! என ஓலமிடும் சொல்)
566.
மதம் உடைய யானையை உரித்து அதன்தோல் போர்த்திக் கொண்ட சிவதா!
எளியோரைக் காக்கும் வலிமையே ! இறைவா! சிவதா!
அன்புடைய அடியவரின் அறிவே ! சிவதா!
தன்னைத் தெளிபவரின் அமுதமே! சிவதா!
567.
கங்கை ஆறும் பிறைமதியும் அணிகின்ற சடைமேல்
அணிய வேண்டிய மலரை யானை சிந்துவதோ !
மாறுபட்ட எண்ணமுடைய அசுரனின் புரங்கள் வெந்து சாம்பலாகும்படி
சினந்து சீறி வில்லையெடுத்தவரே சிவதா சிவதா!
568.
தஞ்சமே ! சரணமே எனப்புகுந்த
மார்க்கண்டேயரின் நெஞ்சுத் துயரம் கெடுமாறு
அவரைத் தொடர்ந்த கரியமேகம் போன்ற எமனுக்கு
சிறிதே நீண்ட செம்மைத் திருவடியே சிவதா சிவதா!
(காலனை உதைத்தவரே என்பதை சிறிதே நீண்ட என்ற சொல் குறிக்கிறது)
569.
முடிவிலாத முதல்வரே …
நெடிய திருமாலும் அறியாரே …
சிவநெறி நின்று தாம் அறிந்த நெறியில்
அடிமைப்பணி செய்து ஒழுகும் அடியார்களில்
யாரென எனைக் கருதி அணைவாய் என
சிவகாமி ஆண்டார் மொழிந்ததும் —
570.
எதிரே வந்த எறிபத்த நாயனார்
சிவகாமி ஆண்டார் கூற்றைக் கேட்டு
மூளும் தீயைப்போல் பெருமூச்சுவிட்டு
சினத்தால் பொங்கினார்
மன்றில் ஆடும் நடரா ?ப் பெருமானின் அடியார்க்கு
யானை என்றும் வழிப்பகை அன்றோ
அதைக் கொன்று வீழ்த்துவேன் என்று
கொலை செய்யும் மழு எடுத்துவந்தார்.
571.
அங்கே சிவதா சிவதா என அழைத்துக் கொண்டிருந்த
தொண்டரைக் கண்டு வணங்கி
உம்மை இத்தகு இடும்பை செய்த யானை எங்கு சென்றது என வினவ
எம்பெருமான் அணியும் பூவை
என்கையிலிருந்து பறித்து மணல் மேல் சிந்தி
தப்பிப் பிழைத்து இத்தெரு வழி சென்றது என்றார்.
572.
இங்கு இந்த யானை இனி பிழைப்பது அரிதே என்ற
வார்த்தைகளை வாயிலிருந்து தீப்போல சொல்லி
உள்ளங்கையில் ஏந்திய மழுவும் அவரும்
தீயும் காற்றும் கூடியதைப்போல விரைவாக
யானையைப் பின் தொடர்ந்து பற்றுகின்ற
சிவந்த கண் கொண்ட சிங்கம்போல் நெருங்கினார்.
573.
யானையைக் கண்டதும் –
இது முன்பு சிவன் உரித்த அதே யானை போன்றதாகும்
தேவரும் இவ்வுலகரும் தடுத்தாலும் எதிர்த்து
அந்த யானை சிந்தி விழும்படி
தண்டித்துக் கொல்வேன் என்று
ஒளி வீசும் மழு என்ற ஆயுதத்தை வலக்கையால் வீசி எழுந்து சென்று
கால்கள் குலுங்கப் பாய்ந்தார்.
574.
எறிபத்தர் பாய்ந்தே
தன் மீது அமரும் பாகனைச் சீறும் குணமுடைய யானை
சிவந்த கண்ணுடன் திரிந்து இவர் மீது பாய்ந்து தாவியது
தாயின் சிறந்த அன்பு முன் நிற்குமோ அச்சம் ?
ஒப்பிலா நீண்ட துதிக்கை தரையில் வீழ
மழுவினால் துண்டாக்கினார் தொண்டர்.
575.
துதிக்கையைத் துண்டித்தபோது
யானை கடலெனக் கதறி வீழ்ந்தது
கரிய மலை என வேழம் புரண்டது
ஆங்கே வந்த கொடியகுத்துக்கோல் பாகர் இருவர்
ஆக ஐவரையும் கொன்று நின்றார்
மலை போன்றே தோளார் எறிபத்தனார்.
576.
எறிபத்தர் வெட்டி வீழ்ந்த பாகர்கள் தவிர
மற்றவர் ஓடிச் சென்றனர்.
மணங்கமழ் மாலை சூடிய மன்னரின்
அரண்மனை வாயிற் காவலரை நோக்கிக்
பட்டவர்த்தன யானையும் இறந்தது
பாகரும் இறந்தனரென்று
விரைந்து தெரிவியுங்கள் மன்னருக்கு
என்று இயம்பினார்.
577.
அவர்கள் கூறியதைக் கேட்ட
மணி கட்டிய வாயில் காப்போர்
சென்றார் மன்னனிடம்
உரைத்தார் வணங்கி –
பகைவர் இல்லாதவரே
உம்பட்டத்து யானை விழும்படி சிலர் கொன்றனராம்
எனப் பாகர் செப்பினார் என்றார்.
578.
சோழமன்னரும் பாகர்கள் கூறியதைக்கேட்டு
எதிர் எவரும் இல்லாது உலகம் ஆள்கின்ற
கிளர்ச்சியுடைய மணிகள் அணிந்த தோள்களில்
மாலையில் மொய்த்த வண்டுகள் எழ
அளவற்ற பெரும்தவத்தால் –
இதனைச் செய்தவர் யார் என்று கேட்கவும் இல்லை
இளம் சிங்கம் போல் நீங்கினான் எழில் மணிவாசல்விட்டு.
579.
தந்திரத் தலைவரான அமைச்சர்களும்
தம் மன்னரின் நிலைமை கண்டு
சேனையை மிக விரைவாக எழச் சொல்லி சாற்றினார்
துகில் கொடிகள் பறந்தன வானம் எல்லம் தூர்த்து நிறையும்படி
எந்திரத் தேர்களும் குதிரைகளும் யானைகளும் கிளம்பின.
580.
வில்லொடுவேலும் வாளும், தண்டும், பிண்டி பாலங்களும்
வன்மையான இரும்பு பலகையும்,
சக்கரங்கள், மழு , சூலம் ஏந்தி
பற்பல படைக்கலங்கள் கொண்டு
அழகான வீரக்கழல் வரிந்த அளவிலா படைவீரர்கள்
சுழன்று குதித்து எழுந்தனர் எங்கும் எங்கும்.
581.
சங்கு, தாரை, காளம், பேரி முழங்கியது
கொடிய குரல் உடைய பம்பை முழங்கியது
பம்பை, கண்டை, துடி, திமில், ஆகிய சகலமும் முழங்கியதால்
மேகம் நிரம்பிய வானின் கிளர்ச்சியும் வெட்கப்பட்டது.
(கண்டை : ஒரு வகைப்பறை)
582.
வாத்திய ஓசைகள்
தாக்குகின்ற ஒளியுடைய படைக்கல ஒலிகள்
குதிரைகளின் கழுத்து மணிகளின் ஒலிகள் யானைகளின் ஒலி
மிகப் பெரும் தேரின் ஆரவார ஒலி படைவீரர்கள் ஒலி
யாவும் எழுந்து கூடியபோது
யுக முடிவில் ஊழிப்பெரு மேக ஒலியுடன்
பொங்கும் கடல் போன்று ஒலித்தது.
583.
வகைப்படுத்திய நான்கு வகைப் படைகள்
உலகை அழிக்கும் ஊழிக்காற்றின் மேல் எழுந்தது போல
எழுந்த படையுடன் குதிரை மீதேறி
குளிரும் கருணையும் பொருந்திய கொற்றக்குடை உடைய
சோழ மன்னன் அரச மாவீதியில் சென்றான்.
584.
மன்னன் பெருவிசையோடு படையோடு
களிற்றோடு பாகன் வீழ்ந்து இறந்த களம் நெருங்கிச் சென்றான்
ஒளி வீசும் மழு ஒன்று ஏந்தி
பெரிய இருகைகளுடன் அழிக்கும் யானை போன்று
நின்ற அடியாரைக் கண்டான்.
585.
பொன் துகள்கள் நீருடன் கலந்து வரும் அருவியுடைய மலைபோல
புரண்ட யானையின் முன்பு நின்றவர் –
அம்பலத்தில் எப்போதும் ஆனந்தக் கூத்தினையே பயின்றவர்
சிவபெருமானுக்கு அடியவர்
ஆதலால் இவர்தான் கொன்றார் என எண்ணமுடியாதவன் ஆனான்
வென்றவர் யார் ? என்று வெடிபட முழக்கிச் சொன்னான்.
586.
மன்னர் இவ்வாறு சொல்ல
பாகர்கள் அருகில் சொன்று
மணம் கமழ் மாலை சூடியோய்! நினது வலிய யானை முன்
எதிர்த்து நிற்கும் மன்னர் உலகில் யார் உளார்!
பரசு முன் கொண்டு நிற்கும் இவரே அத்தீங்கு செய்தார்
எனப் பணிந்து சொன்னார்.
587.
குழை எனும் காதணி அணிந்த சிவபெருமானுக்கு
அன்பரான குணமுடைய இவர்
பிழை ஏற்பட்டாலன்றிக் கொலை செய்திருக்கமாட்டார்
என உள் நினைத்து
மழை போல் மதம் சொரியும் யானைப்படை முதலான
படைகள் வரவினைத் தடுத்து மாற்றினான்
தான் கொணர்ந்த கொற்றக்குதிரை விட்டு இறங்கினான் உலக மன்னன்.
588.
கரிய பெரிய குன்று போன்ற மதயானை எதிரே இந்த
மெய்த்தவ சீலர் சென்றபோது வேறு ஏதும் நிகழாமல் விட்ட
அத்தவம் உடையவன் ஆனேன்
அம்பலவாணரது அன்பர் இத்தனை சினம் கொள்ளும்படி
ஏது நேர்ந்ததோ! என அஞ்சிக் கொண்டே –
589.
தனை நெருங்கி வந்தவரையெல்லாம் தடுத்து
அன்பர் முன் தொழுது சென்று
இதை நான் அறியேன்! அடியேன் அங்கு கேட்டது வேறு
அது இருக்கட்டும்
மறித்த இக்களிறு செய்த குற்றத்திற்கு
பாகருடன் மாளும்படி எறிந்த செயல் போதுமா ?
கூறி அருள்க என்று நின்றார்.
590.
மன்னவன் தன்னை நோக்கிக் கேட்டதும் எறிபத்தர் :-
வானவர் ஈசருக்காக நேசித்து வணங்கி
சிவகாமியாண்டார் கொய்து சாத்துதல் பொருட்டு கொணர்ந்த
திருப்பள்ளித் தாமத்தை இந்த யானை பறித்து வீழ்த்தியதால்
அதனை துண்டித்து வீழ்த்தினேன் என்றார்.
591.
இந்த யானை தீங்கு செய்யும்போது
அதனுடன் வந்த குத்துகோல்காரர்களும் பாகர்களும்
விலக்காமல் விட்டதால் இறந்து பட்டனர்
இதுவே நிகழ்ந்தது என்றார் எறிபத்தர்
அப்போது அஞ்சி அவர் பாதம் பணிந்தான்
மலை போன்ற தோளுடைய மன்னன்.
592.
சிவபெருமானின் அடியவரிடத்துச் செய்த இந்த அபசாரத்திற்கு
இது மட்டும் போதாது! என்னையும் கொல்ல வேண்டும்!
மங்கல மழுவால் கொல்லுதல் பொருந்தாது;
இதுவே சிறந்தது என
சிவந்த கையினால் தன் உடைவாள் உருவித் தந்தான்
மன்னன் எறிபத்தரிடம்.
593.
வெந்தழல் போன்ற சுடர் வாள் நீட்டும் மன்னனை நோக்கி
ஓ! கெட்டேன்! எல்லையிலாப் புகழுடைய மன்னனது அன்பிற்கு
அளவின்மை கண்டேன் என்று நினைத்து
தந்த வாள் வாங்காமலிருந்தார். பிறகு வாங்கினார்
அதைப் பெறாவிடில் தன்னைத்தானே மாய்ப்பான் என்று உணர்ந்து
வாங்கிக் கொண்டார் அத்தீமை வாராமல் தீர்த்தார்.
594.
வாளைப் பெற்ற தொண்டர் முன்பு
மன்னனார் தொழுது நின்றபடி
இங்கு எனை வாளால் கொன்று என் பிழை தீர்க்க
இவரால் பேருதவி செய்யப் பெற்றேன் என மகிழ்ந்ததும்
எறிபத்தர் அச்சம் கொண்டு –
595.
வன்மையுடைய பெரிய யானையும் பாகரும் மடிந்ததோடு
என்பெரும் பிழையினாலே என்னையும் கொல்க என்கிற
அன்பனார் தமக்குத் தீங்கு நினைத்தேனே என நினைத்து
முதலில் என் உயிர் போக்கி முடிப்பதே இதற்கு முடிவு என எண்ணி –
596.
எறிபத்தனார் மன்னர் கொடுத்த வாளைத் தன் கழுத்தில்
அரியத் தொடங்கிய போதில் –
பெரியோர் செய்கை இருந்தவாறு என்னே! ஓ! கெட்டேன்! என்று
எதிர் விரைந்து சென்று தன் மிகப் பெரிய தோளால்
மன்னன் பிடித்தான் அன்பரின் வாளையும் கையையும்.
597.
விடாது வாளையும் கையையும் பற்றிய மன்னன்
எறிபத்தர் செய்கையை செய்யவிடாது தடுக்க –
இறைமீது அளவிலா பரிவால் ஏற்பட்ட இடுக்கண் அகற்ற வேண்டி
நஞ்சு பொருந்திய கழுத்துடன் கூடிய
செம்மை தரும் நெற்றிக்கண்ணர் அருளால்
ஞானஒளி கிளரும் வானத்தில் பலரும் கேட்க எழுந்தது ஒரு திருவாக்கு.
598.
யாவரும் தொழுகின்ற அன்பினனால் மிக்கீர்!
உமது திருத்தொண்டை மண் மேல் காட்டுவதற்காக
செழித்த திரு மலரை இன்று சினமுடைய யானை சிந்தும்படி
திங்களின் கொழுந்து அணிந்த வேணிக்கூத்தர் அருளால் நிகழ்ந்தது
என்று ஒலிக்க பாகரோடு யானையும் எழுந்தது.
599.
தம் கழுத்தை அரியும்படி வைத்த வாளைவிட்டார் எறிபத்தர்
சோழமன்னன் தாள் மேல் விழுந்தார்
மன்னனும் தம் கைப்பிடியிலிருந்த போர்வாளை எறிந்தார்
எறிபத்தர் கழல்களில் விழுந்தார்
தேவர்கள் பணிமலர் மழை பொழிந்தனர்.
600.
எறிபத்தரும் சோழரும் எழுந்து வானில் எழுந்த பேரொலி போற்றினர்
அருமறைப் பொருளாய் உள்ள சிவனார் அணியும் பூக்கள் நிரம்பிய
மலர்க்கூடையில் முன் பொருந்திய பள்ளித்தாமம் நிறைந்திட அருள
அத்திருவருள் கண்டு வாழ்ந்து சிவகாமியாரும் நின்றார்.
601.
மணங்கமழ் ஆத்திமாலை சூடும் வெற்றி மன்னவர் முன்பு
வெவ்விய மதநீர் பாய மேகத்தைப் போல் முழங்கிப் பொங்கும்
பட்டவர்த்தனம் எனும் யானையுடன் பாகரும் நெருங்கி வந்தனர்
உறங்கி எழுந்ததைப் போல.
602.
சிறப்புடைய தொண்டரான எறிபத்தர் கும்பிட்டு
அடியேன் களிக்கும்படி இந்த யானை மீதேறி மகிழ்வுடன்
அரண்மனைக்கு எழுந்தருளும் என்றதும்
மேன்மை மிகு அப்பணியை ஏற்று வணங்கி
வெண்குடை நிழலிலே யானை மீது ஏறிச் சென்றான்.
603.
அந்நிலையில் எழுந்த சேனை
ஏழுகடலும் கூடி ஒலித்த ஓசைபோல ஆர்த்தது
மண்ணுலகெலாம் மகிழ்ந்து வாழ்த்தியது
நெடிய பொன்னம்பலத்தில் ஆடும் இறையின் திருவடிகளை
தலையில் சூடியவராய் சோழன் திருக்கோயில் புகுந்தான்.
604.
தம் இறைவனின் பணியை மேற்கொண்டு
சிவகாமியாண்டாரும் கோவில் செல்ல
எம்பிரான் அன்பரான எறிபத்தர்
என்னே! அம்பலம் நிறைந்த இறைவனின் அடியார்
அறிவதற்கு அரியவர்! என்று
இறைவனின் பெருமை உன்னினார் திருப்பணி செய்யச் சென்றார்.
605.
இத்தகைய வலிவான பெரும் தொண்டை
மண்மேல் இடையூறு அடைந்த அடியார் யாவர்க்கும் அதவும்
கொள்கையை நாளும் நாளும் முன் சென்று செய்து வந்தார்
முடிவில் திருக்கயிலை மலையில் திருக்கணங்களின்
முதல்வர்க்கும் முதல்வராகும் தலைமை பெற்றார்.
606.
ஆளுடைய தொண்டர் எறிபத்தர் ஆண்மையும்
தன்னைக் கொல்ல வாளினைத் தந்து நின்ற சோழனின் பெருமையும்
நாளும் நாளும் அவர்க்கு நல்கும் இறைவர் தாமே அளந்தாலன்றி
நீளும் இத்தொண்டின் இயல்பை யாரால் அளக்க இயலும்.
607.
தேன் பொருந்திய குளிர்ந்த அழகிய கொன்றை மலர் சூடிய
செஞ்சடை சிவனாரின் பொற்பாதத்தில்
குறையாத விருப்புடைய அன்பரான எறிபத்தர் திருவடிகள் தலை மீது சூடி
வானுலகம் ஆளும் தேவர் போற்றும் வாழ்வுடைய
ஏனாதி நாதர் செய்த திருத்தொழிலை இயம்பத் தொடங்குகிறேன்.
(எறிபத்த நாயனார் புராணம் முற்றிற்று )
திருவருளால் தொடரும்

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்